

மிது
‘தர்பார்’ படத்தில் வரும் வசனம் போல், வயது என்பது சிலருக்கு வெறும் நம்பர்தான். வயதானாலும் தங்களை இளைஞராக நினைத்துக்கொண்டு, அவர்களைப் போலவே வாழ்வோர் உலகெங்கும் உண்டு. அப்படிப்பட்டவர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த 91 வயதான ஹெலன் ரூத் எலம் என்ற மூதாட்டியும் ஒருவர்.
சிறு வயதிலிருந்தே ஃபேஷன் துறையின் மீது ஹெலனுக்குத் தீராக் காதல். விதவிதமாக ஃபேஷன் உடைகளை அணிவதை வழக்கமாகவே கொண்டிருந்தார். வயதான பிறகும் அது மாறவில்லை. தற்போது 91 வயதை எட்டியபோதும் 50 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி நவநாகரிகமான உடைகளை அணிந்தாரோ, அதுபோலவே வலம்வருகிறார். இந்தக் கால இளம் பெண்களுக்குச் சவால் விடுக்கும் அளவுக்கு உடை அணிவதிலும் மேக்கப் போட்டுக்கொள்வதிலும் தனிக் கவனம் செலுத்திவருகிறார்.
ஆறு வருடங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் காலடி எடுத்துவைத்தார் ஹெலன். அப்போது முதலே தன்னுடைய ஒளிப்படங்களைப் பகிர ஆரம்பித்தார். இதனால், லைக்குகளும் ஹார்ட்டின்களும் ஹெலனுக்குக் குவியத் தொடங்கின. அப்படியே ஹெலனைப் பின்தொடர்வோர் எண்ணிக்கையும் கண்டபடி எகிறியது. தற்போது இன்ஸ்டாகிராமில் மட்டும் ஹெலனை 38 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.
இதன் காரணமாகவே ஒரு ஒளிப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஹெலன் பதிவிட்டால், லட்சக்கணக்கில் லைக்குகள் குவிக்கின்றன. இவருடைய ஒளிப்படங்கள் அவ்வப்போது வைரலாவதால், பல நாடுகளில் ஹெலனுக்கு ரசிகர்களும் உருவாகிவிட்டார்கள்!