Published : 04 Feb 2020 12:44 PM
Last Updated : 04 Feb 2020 12:44 PM

விசில் போடு: அர்னால்டுகளின் ஆபத்பாந்தவன்!

‘தோட்டா’ ஜெகன்

மல்லிகைப் பூவிடமிருந்து வாசத்தைப் பிரிக்க முடியாத மாதிரிதான் மகன்கள் மேல அம்மாக்கள் வைத்திருக்கும் பாசத்தையும் பிரிக்க முடியாது. அம்மாக்களைப் பொறுத்தவரைக்கும் மகன் என்பவன் தங்களோடகூடப் பிறந்த அண்ணன் - தம்பியோட ஒரு வடிவம். தங்களைப் பெத்த அப்பாவோட மறு வடிவம். தங்கள் கணவர்களோட சிறு வடிவம்.

பெத்த மகள்களுக்கு வண்டி நிறையா பொன் நகைகள் கொடுத்தாலும், பெத்த பசங்களுக்கு என்னைக்கும் வாய் நிறையப் புன்னகைகள சேமிச்சு வைக்கிற ஜீவன்தான் அம்மா. வீடு முழுக்க காசு கொட்டி கிடக்கிற பணக்காரக் குடும்பமா இருந்தாலும், வீடு முழுக்க தூசி மட்டும் கொட்டிக்கிடக்குற பாவப்பட்ட குடும்பமா இருந்தாலும், அந்தந்த வீட்டு அம்மாக்களுக்கு அவங்கவங்க பசங்கதான் தேசிங்கு ராஜா. அப்பாக்கள் எல்லாம் பொண்ணுங்களுக்குக் கல்யாணமாகும் வரைக்கும்தான் ‘கண்ணான கண்ணே’ன்னு ஓட்டுவாங்க. ஆனா அம்மாக்கள் மகன்களுக்குக் காலம் உள்ள வரைக்கும் பாச பயாஸ்கோப் காட்டுவாங்க.

அம்மா எனும் ஏடிஎம்

தோட்டத்துல வச்சு கறந்தாலும், தொழுவத்துல வச்சு கறந்தாலும் காளை மாட்டுல பாலைக் கறக்க முடியாதுங்கிறது என்பது வல்லவன் வகுத்த விதி. ஆயிரம்தான் அள்ளி அள்ளி செஞ்சாலும் மகன்கள் எப்பவும் அப்பாகிட்ட இருந்து கொஞ்சம் தள்ளிதான் போவாங்க. அதுவே அம்மான்னா சந்தோஷத்துல துள்ளித் துள்ளிப் போவாங்க.

நாலு கை வச்சுக்கிட்டு காலண்டர்ல தங்கக் காசைக் கொட்டுறது தனலட்சுமின்னா, ரெண்டு கை மட்டுமே இருந்தாலும் கேட்கிறப்பலாம் பசங்களுக்குக் காசை அள்ளித்தர குணலட்சுமிதான் அம்மா. பசங்களுக்கு அம்மாதான் புடவை கட்டுன ஏடிஎம்.

துணியெடுக்க காசுலேர்ந்து டூர் போற காசு வரைக்கும் மகன்களோட பேங்க் ஆஃப் பேமிலியே அம்மாக்கள்தான். ‘தெய்வமகன்’ சிவாஜி மாதிரி விரலைக் கடிச்சுக்கிட்டே கேட்டாலும், ‘பிதாமகன்’ விக்ரம் மாதிரி தலையைச் சொறிஞ்சுக்கிட்டே கேட்டாலும், கல்லாப் பொட்டிலேர்ந்து கடுகு போட்டு வைக்கிற பொட்டி வரைக்கும் சேர்த்து வச்சதை எடுத்து மகன்களுக்கு ஆரத்தி காட்டுறவங்கதான் மம்மிஸ்.

காதுல கடம்

பைக் வேணும்னு மகன் அடம் பிடிக்கிறப்ப, அப்பாவோட காதுல கடம் வாசிக்கிறவங்கதான் அம்மா. அது வரைக்கும் மகன் என்னமோ ரோட்டுல தவழ்ந்து போன மாதிரியும், பைக் வந்தா மட்டும்தான் பார்க்க போற வேலைக்குப் பறந்து போற மாதிரியும் பேசி பேசியே அப்பாக்களோட கல்நெஞ்சுல கருணையைப் பொங்க வச்சிடுவாங்க அம்மாக்கள்.

சாப்பிடும்போது திட்டுறது அப்பான்னா, திட்டிக்கொண்டே சாப்பாடு போடுவதுதான் அம்மா. மொத்தப் பாத்திரங்களைக் கழுவி எடுத்து வச்சாக்கூட, பையன் சாப்பிடாம வந்துட்டா என்னாகும்னு கொஞ்ச சாதத்தையும் எடுத்து வைக்கிறவங்கதான் அம்மா. சட்டியில கறிக்குழம்பு கொதிக்கும் போதே, அம்மாக்கள் தயவுல மகன்கள் தட்டுல மட்டன் பீஸ் கிடக்கும்.

சோத்துல கொஞ்சமா கறிக்குழம்பு கேட்டாலும், அதை ஆத்துலேர்ந்து அள்ளி ஊத்துற மாதிரி கொட்டுறவங்கதான் அம்மா. அம்மாவோட அன்பெல்லாம் கடைசி தோசைலதான் தெரியும். சித் ஸ்ரீராம் குரல் மாதிரி லைட்டா வர முதல் தோசை, கடைசியா முடியறப்ப, அனுராதா ராம் குரல் மாதிரி வெயிட்டா முடியும். மொத்தமா ஆறு தோசை ஊத்தலாம், ஆனா அந்த ஆறு தோசையையுமே மொத்தமா ஊத்த அம்மாக்களால்தான் முடியும்.

கணக்கா பிணக்கா

அம்மாக்களுக்கு மகன்கள் பொய் சொல்றது புடிக்காது. ஆனா, மகன்களுக்காக அம்மாக்கள் எவ்வளவு வேணா பொய் சொல்வாங்க. கணக்குக் கும் பையனுக்கும் பெரிய பிணக்கா இருக்கும். எட்டையும் நாலையும் பையன் பெருக்கி சொல்றதுக்குள்ள எண்ணூர் துறைமுகத்துக் குப்பையைப் பொறுக்கிட்டு வந்திடலாம்.

ஆனா அடுத்தவங்ககிட்ட சொல்றப்ப கணக்கு வாத்தியாருக்கே சந்தேகம் வந்தா தங்களோட மகன்தான் தீர்த்து வைப்பாங்கிற ரேஞ்சுலதான் ஓட்டை ஆட்டோவ ஊருக்குள்ள ஓட்டுவாங்க. குட்டி சுவருல உட்கார்ந்து வெட்டியா அரட்டையடிக்க மகன் போனாக்கூட அதுக்குச் சட்டையை அயர்ன் பண்ணி வைக்கிற அன்புதான் அம்மா. ஆயிரம் ரூபாயை முதல் மாச சம்பளமா வாங்கிட்டு வர மகனுக்கும் முகம் நிறைய புன்னைகையோட சிவப்புக் கம்பளம் விரிச்சு வரவேற்கிறதுதான் அம்மா.

பெத்த பையன், பியூஸான ஜீரோ வாட்ஸ் பல்ப்பை மாத்துனாக்கூட, பத்தாயிரம் ஸ்பேர் பார்ட்ஸ் இருக்கிற ராக்கெட்டை ரிப்பர் பண்ணின மாதிரி சந்தோஷப்பட அம்மாக்களால்தான் முடியும். முதன் முறையா மகன் வண்டியோட்டா பின்னால உட்கார்ந்து போறப்ப அம்மாக்களோட தோரணையெல்லாம், மகன் மங்கள்யான் விட்டு சாதனை பண்ணின ரேஞ்சுலதான் இருக்கும்.

சேனல் மாத்துற சண்டையிலேர்ந்து மகனுக்கும் மகளுக்கும் பஞ்சாயத்து பண்ண தராசைத் தூக்கிட்டு வரப்பவே, எடைக்கல்ல மகன் சைடுல வச்சுட்டு வர கேரக்டர்தான் அம்மா. மொபைலை நோண்டி கிட்டே இருக்கிறதைத் திட்டுற அம்மாக்களை வேண்டித்தான் மகன்கள் அந்த மொபைல் போனையே வாங்கியிருப்பாங்க.

இந்தியா கேட்

அப்பா சும்மா திட்டுனாக்கூட, அந்தக் கால் கிலோ இதயம் கனக்குற மாதிரி திட்டுவாரு, ஆனா, சுத்தியல எடுத்து தலையில கொட்டுன்னாக்கூட வலிக்காத மாதிரி தட்ட அம்மாவாலதான் முடியும். அப்பாவுக்கும் மகனுக்குமான கருத்து வேறுபாடு ஜெனரேஷன் கேப், அம்மாவுக்கு மகனுக்குமான கருத்து வேறுபாடு வெறும் கம்யூனிகேஷன் கேப். பொண்ணுங்க செஞ்ச தவறை மன்னிக்கிறதுல அம்மக்கள் பைக் வேகம்னா, பசங்க செஞ்ச தவறை மறக்கறதுல பிளைட் வேகம்.

புருஷன் திட்டுனாக்கூட இந்த மனுஷன் கிடக்கிறார்ன்னு கடந்து போறவங்கதான் அம்மாக்கள். ஆனா, பைப்ப திறந்து விட்டா தண்ணீர் கொட்டுறது மாதிரி, பையன் ஏதாவது கோவத்துல சொல்லிட்டா பெத்த அம்மக்களுக்குக் கண்ணீர் கொட்டும். ஆனாலும், அப்பாக்களுக்கு மகன்களுக்கும் நடுவுல நிற்கிற ‘இந்தியா கேட்’டுதான் அம்மா; அப்பாகிட்ட இருந்து மகனைக் காப்பாத்துற இரும்பு பூட்டுதான் அம்மா. செய்யுற செலவே வரவா திரும்பி வருவதுதான் தாய் - மகன் உறவு. அம்மாக்கள் மகன்களை முதுகுல தட்டிக்கொடுக்கவும் மறக்க மாட்டாங்க, நாலு பேர் முன்னால விட்டுக்கொடுக்கவும் மாட்டாங்க.

பசங்க வளர வளர அம்மாக்கள் தங்களது இடுப்புல இருந்து வேணா இறக்கி விடலாம். ஆனா கடைசி வரைக்கும் தங்களது நினைப்புல இருந்து இறக்கிவிட மாட்டாங்க. தென்னாடே போற்றும் சிவனைப் போல், மகன்களுக்கு அம்மாக்கள் எந்நாடும் போற்றும் வொண்டர் வுமன்.

(சத்தம் கேட்கும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: thinkthoatta@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x