

நெல்லை மா. கண்ணன்
தூத்துக்குடியில் பள்ளி பருவத்தின்போது மாலையில் விளையாடிவிட்டுத் திரும்பியபோது பக்கத்தில் இருந்த ஓர் அலுவலகத்தில் ”பாம்………பு” என்று சத்தம் கேட்டது. பாம்பை அடிக்க எல்லோரும் தயாரானார்கள். என்ன பாம்பு என்றே தெரியாமல் துணிந்து அதைப் பிடித்து ஒரு பையில் இட்டு பயிற்சியாளர் அந்தோணி சேவியரிடம் கொடுத்தார் ராமேஸ்வரன்.
”இது ஒலைப்பாம்பு கடிக்காது” என்று கூறிகொண்டே அந்த பாம்பை ரமேஷ் கையில் கொடுத்தார். “வாழ்க்கையில் முதன்முதலில் பாம்பை கையில் பிடித்தது, விருது வாங்கியதைப் போல் உணர்ந்த”தாகக் கூறுகிறார் ராமேஸ்வரன். அந்த நிலையிலிருந்து இன்றைக்கு காட்டுயிர் ஒளிப்படக் கலைஞராக மாறியிருக்கிறார் இவர்.
காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்கள், இதழ்களில் ஒளிப்படங்களை வெளியிடுகிறார்கள். இன்னும் சிலர் பொழுதுபோக்காகவோ வேலைவாய்ப்புக்காகவோ முகநூலிலோ இணையத்திலோ காட்டுயிர் ஒளிப்படங்களை பதிவேற்றுகிறார்கள். இதையெல்லாம் கடந்து, “காட்டுயிர் பாதுகாப்புக்கான ஓர் ஆயுதமாகக் காட்டுயிர் ஒளிப்படங்கள் இருக்க வேண்டும். அந்தப் பாதையை நோக்கி நான் பயணிக்கிறேன்” என்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த காட்டுயிர் ஒளிப்படக்கலைஞர் மா. ராமேஸ்வரன்.
பாதுகாப்புக்கான ஆயுதம்
2004-லிருந்து ஊர்வன பாதுகாப்பு, ஆய்வு சார்ந்து இவர் ஒளிப்படங்களை எடுத்துவருகிறார். இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே காணப்படும் செதில்பல்லியின் இனப்பெருக்கம் சார்ந்த வாழ்க்கை முறையை ஒளிப்படமாக ஆவணப்படுத்தியிருக்கிறார். ஊர்வனவற்றை ஒளிப்படம் எடுப்பதற்கு அடர்ந்த காடுகளுக்குப் போகவேண்டுமென்ற அவசியமில்லை.
நம்மைச் சுற்றியுள்ள கட்டாந்தரையில் அவை வாழ்கின்றன. அதனால் ஊரைச் சுற்றியுள்ள வீடுகளிலும், கட்டாந்தரையிலும் வாழும் ஊர்வனவற்றை வனத்துறையுடன் இணைந்து இவர் கண்டறிகிறார். பிறகு அவற்றை பாதுகாப்பான பகுதிகளில் விடுவிக்கிறார். அரிதான ஊர்வனவற்றை ஒளிப்படத்தில் ஆவணப்படுத்தி, அவற்றைப் பற்றி எழுதியும் பிரபலப்படுத்துகிறார்.
சாதாரண மக்கள் அவற்றைக் கொல்வதைத் தடுக்க விழிப்புணர்வையும் கடித்துவிட்டால் பாதுகாத்துக்கொள்வது பற்றியும் பரப்புரையும் மேற்கொண்டுவருகிறார். இவருடைய ஒளிப்படங்கள் தமிழ் காட்டுயிர் இதழ்கள், பிரபல நாளிதழ்-இதழ்களில் வெளியாகியுள்ளன.
கட்டுரையாளர் தொடர்புக்கு: mkannanjournalist@gmail.com