Published : 28 Jan 2020 12:11 PM
Last Updated : 28 Jan 2020 12:11 PM

விசில் போடு 16: 90 கிட்ஸ் Vs 2K கிட்ஸ்

‘தோட்டா’ ஜெகன்

அருண் weds அனு, தருண் weds தனு என்று கல்யாண மண்டப வாசல்ல வாழ்த்து பிளெக்ஸ் போர்டு பார்க்கிறப்போ, ‘என்னோட பேரு weds ஏதோ ஒரு பொண்ணோட பேரு’ வராதான்னு ஏங்கி நிக்கிற 90’ஸ் கிட்ஸ்ஸான எங்களை, 10 வருஷம் மூத்தவன்தானேன்னு அண்ணான்னு கூப்பிடாம அங்கிள்னு கூப்பிடுறீங்களேடா 2K கிட்ஸ். முரட்டு சிங்கள்களின் சார்பா இன்னைக்கு உங்க செருக்கு சிக்னலை ஸ்விட்ச் ஆப் பண்றோம்டா.

பக்கத்து வீட்டுக்காரங்க சூப்பர் டஸ்ட் டீ குடுத்தாக்கூட, குடிச்சது தெரிஞ்சா நைனா குனிய வச்சு குத்துவாரேன்னு, நாக்குக்கு நங்கூரம் போட்டு வேணாமுன்னு கெத்தா மத்தாப்பூ சுத்தி வந்தவங்கடா நாங்க. ஆனா, கேர்ள் பெஸ்ட்டி பாய் பெஸ்ட்டின்னு கத்துக்கொடுத்த வித்தைக்காரங்க முன்னாலையே கத்திய சுத்துறீங்க நீங்க. ஆன்லைன்ல புக்கிங் பண்ணி தியேட்டர்ல கிடைச்ச சீட்டுல உட்காருற உங்களுக்கே கையளவுக்கு கெத்துன்னா, தியேட்டருக்கு போயி டிக்கெட்டெடுத்து புடிச்ச சீட்டா பார்த்து உட்கார்ந்த எங்களுக்குக் கடலளவு கெத்து. இலைல வழிச்சி பாயசத்தைக் குடிச்சவங்க நாங்க, கப்புல வாங்கி கல்பா அடிச்சு பாயசத்துக்கே ஆயாசம் தரவங்க நீங்க. நாங்கெல்லாம் வாழ்ந்ததைச் சொன்னாத்தான் நீங்களாம் வாழ்வது வாழ்க்கையில்லைன்னு புரியும்.

30 ரூவா கொடுத்தா...

இன்னைக்கு நீங்க ஒன்னரை லட்சத்துக்கு பைக் வாங்கி, டயர் தேய தாறுமாறா சுத்தினாலும், ஊருக்குள்ள போற மாட்டுவண்டி பின்னால தொங்கிக்கிட்டு போறப்ப எங்களுக்குக் கிடைச்ச சுகமெல்லாம் சாமியே கூப்பிட்டு கொடுத்த வரம். முப்பது ரூவா கொடுத்தா விடிய விடிய கண்முழிச்சு வேலை பார்ப்பேன்னு புலம்புற ‘சின்னதம்பி’ கவுண்டமணி மாதிரி, ஒத்த ரூபா கிடைச்சா போதும், கால் ஒடிய ஒடிய வாடகை சைக்கிள் வாங்கி ஓட்டுவோம்யா. அந்த வாடகை சைக்கிள்ல சுத்துன சுகமெல்லாம் இன்னைக்கு இஎம்ஐ கட்டி ஓட்டுற காருல கிடைக்கல.

இன்னைக்கெல்லாம் சனிக்கிழமை என்ன படம் போடுறானுங்கன்னு செவ்வாய்க்கிழமையே தெரிஞ்சுடுது. ஆனா, இன்னைக்கு மத்தியானம் கேபிள்ல என்ன படம் போடுவான்னு காலைல இருந்து காத்திருக்கிற சுகம் இருக்கே, அது காதலி வருவாளான்னு சந்தேகத்தோட காத்திருந்த சந்தோஷத்துக்கு ஈடானது. டிவி ஸ்கிரீனோ, தியேட்டர் ஸ்கிரீனோ, திரையில கவர்ச்சி பாடல்கள் ஓடுறப்ப, ரெண்டு கையால முகத்தை மூடி, விரல் சந்து வழியா சிந்து பாடினோம் நாங்க. ஆனா, பார்க்கிறவன் நெஞ்சுல லப்டப் வேகமாகி வெடிச்சிடுற மாதிரி டிக்டாக் செய்யறீங்க நீங்க.

நாய்கூடத் தூங்கிடும்

நைட் ஒன்பது மணிக்கு ‘கண்ணின் மணி கண்ணின் மணி நிஜம் கேளம்மா’ன்னு மொத்த தெருவுக்கும் ஒத்த ரிங் டோன் வச்ச மாதிரி ஒரே சீரியல் ஓடுனப்ப, இனி சோறு போட மாட்டானுங்கன்னு தெரு நாய்கள்கூடத் தூங்கப் போயிடும். நாங்க பார்த்த சீரியல்ல எல்லாம் குடும்பத்துல நடக்கிற பிரச்சினைய காட்டுவாங்க.

ஆனா, இன்னைக்கு நீங்க பார்க்கிற பல சீரியல்களில் பிரச்சினையான குடும்பத்தைத்தான் காட்டுறாங்க. சொல்லப்போனா இன்னைக்கு சீரியல்களில் இருக்கும் பிரச்சினைகளைவிட சீரியல்ல நடிக்கிறவங்க வீட்டுல இருக்கிற பிரச்சினைகள்தான் அதிகம். இன்னைக்கு இருக்கிற வெப்சீரிஸ் எல்லாம் வெறும் சீரிஸ்தான்; நீங்க பார்க்கிற நெடுந்தொடர்கள் எல்லாம் கொடுந்தொடர்கள்தாம்.

அப்போதெல்லாம் நம்ம வீட்டைத் தேடி வந்து பத்திரிகை கொடுத்துட்டுப் போகணும். இப்ப என்னடான்னா சோத்து பொட்டலத்தைக் கொடுத்துட்டுப் போறாங்க. அடேய் 2K கிட்ஸ்களா, ஆன்லைன்ல ஆர்டர் போட்டு துணி வாங்குறது இல்ல சந்தோஷம், ஆடி ஆபர்னு கேள்விப்பட்டு செருப்பு தேய திநகர்ல தெருத்தெருவா தேடி வாங்குறதுதான் உண்மையான சந்தோஷம்.

சக்திமான் போல வருமா?

பள்ளிக்கூடத்துல பக்கத்துல உட்கார்ந்திருக்கிற பொண்ணுகிட்ட பென்சில் கேட்கவே பத்து தடவை எட்டு திக்கும் சுத்திப் பார்த்து பக்குவமா கேட்டோம் நாங்க. பத்து பேரு போய்வர இடத்துல பப்ளிக்கா பிரபோஸ் பண்றீங்க நீங்க. பிடிச்ச பொண்ணோ பையனோ, அவங்ககிட்ட பேச ஆசைப்பட்ட வார்த்தைகளையும் பேச முடிஞ்ச வார்த்தைகளையும் அசைபோடுறப்ப வர மகிழ்ச்சிய, இன்னைக்கு செல்போன் சாட்டிங்ல போடுற ‘ஹாய்’யும் ‘பை’யும் தந்திடுமா? ஸ்மைலியகூட முறைச்ச மூஞ்சியோட தானே நீங்க போடுறீங்க.

ரூமுக்கு ஒரு டிவி வச்சு பிடிச்ச நிகழ்ச்சி பார்க்கிறதோ, ஆளுக்கு ஒரு செல்லை வச்சு நினைச்ச படம் பார்க்கிறதோ இல்லை சிறப்பு. அக்கா, தங்கையோட ரிமோட்டுக்குச் சண்டை போட்டு கிடைச்ச நிகழ்ச்சியைப் பார்த்த நாங்கதான் சிறந்த பிறப்பு. இன்னைக்கு ஆயிரம் அவென்ஜர்ஸ் வந்தாலும் அன்னைக்கு எங்களுக்கு இருந்த சக்திமான் முன்னால நிற்க அயர்ன்மேன்கூட அருகதையில்லாத மேன்தான்.

மிட்டாய் டேஸ்ட் இருக்கே..

90’ஸ் கிட்ஸை வச்சு மீம்ஸ் போடுற மாம்ஸ்களா, வீட்டுல லேண்ட்லைன் போன் அடிக்கிறப்ப யாரு எடுக்கிறதுன்னு அண்ணன், தங்கை களுக்கு இடையில வர கலகம் தர மகிழ்ச்சி யெல்லாம், ஆளுக்கொரு செல்போன் வச்சிருந்து தனி உலகமா வாழுற உங்களுக்கு எப்படிப் புரியும்? இன்னைக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு பாரின் நாய் வாங்கி ராக்கின்னு பேரு வைக்கிறதெல்லாம் பெருமை இல்லை. பத்து ரூபா கலர் கோழி குஞ்சு வாங்க, நெஞ்சு வலிக்கிற வரைக்கும் அழுது கெஞ்சி வாங்குனதுதான் பெரிய சந்தோசம்.

கொடி ஏத்துறப்ப தர ஆரஞ்சு மிட்டாயோ, குரல் கம்முறப்ப திங்கிற சூட மிட்டாயோ, வாந்தி வரப்ப சப்பவே வச்சிருக்கிற புளிப்பு மிட்டாயோட உண்மையான டேஸ்ட், இன்னைக்கு உங்களோட பர்கரும் பீட்சாவும் மொத்தமா வேஸ்ட். ஐஸ் வண்டி ஹாரனுக்கும் ஸ்கூல் ஆட்டோ ஹாரனுக்கும் வித்தியாசம் தெரியும் எங்களுக்கு, புத்துல இருந்து கரையான்கள் வர மாதிரி புதுசுபுதுசா பொறக்கிற ஆண்டராய்டு போனுங்களுக்கு இடையிலையே வித்தியாசம் தெரியல உங்களுக்கு.

பப்ஜி பசங்களா

இன்னைக்கு நீங்க பேக்கேஜ் டூர் போறதுல இல்ல சந்தோசம். அப்பா அம்மாவை அடம் புடிச்சு பொருட்காட்சிக்குப் போனதுல கிடைச்சுது. பொங்கல் வந்தா போதும், ரஜினி ரசிகனுக்கும் கமல் வாழ்த்து அட்டையும், கமல் ரசிகனுக்கு ரஜினி வாழ்த்து அட்டையும் அனுப்புவதுதான் நாங்க போட்ட ரசிகர் சண்டை. ஆனா, இன்னைக்கு நீங்க ஃபேஸ்புக், ட்விட்டர்ல பண்ற ரசிகர் சண்டையெல்லாம் பார்த்தா குண்டு வைக்காமையே வெடிக்குது எங்க மண்டை.

அம்மாவுக்குத் தெரியாம ஹார்லிக்ஸ திருடி தின்னதையே பெரிய போர்க் குற்றமா நினைச்சு ஏங்கி வாழ்ந்தவங்க நாங்க. ஆனா, அப்பாவோட ஏடிஎம் கார்டை ஆட்டைய போட்டு அப்பாவோட நம்பிக்கையில ஓட்டைய போட்டவங்க நீங்க. பப்ஜி விளையாடுற உங்களுக்கு ஜவ்வு மிட்டாய் பொம்மை கம்பத்து உச்சில கை தட்டுறதைப் பார்க்கிற சந்தோசம் எப்பவுமே புரியாது. 2K கிட்ஸ்களா, நீங்க வேணா அழகான உலகத்துல வாழலாம், ஆனா நாங்க வாழ்ந்த உலகம் ரொம்ப அழகானது. இன்னொரு தடவை 90’ஸ் கிட்ஸைக் கிண்டல் பண்ணுனீங்க, உங்களுக்கு 80’ஸ் கிட்ஸ் பெத்த குழந்தைங்க எதுவுமே செட்டாகாதுன்னு சாபம் விட்டுடுவோம், பீ கேர்புல்.

(சத்தம் கேட்கும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு:
thinkthoatta@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x