

யுகன்
ஊரூர் ஆல்காட் குப்பம் விழாவாகத் தொடங்கப்பட்டு, பலதரப்பட்ட மக்களிடமிருந்து பெருகிக் கிடைத்த ஆதரவால், இன்று சென்னை கலைத் தெரு விழாவாக மாறியுள்ளது.
ஆறாம் ஆண்டாக நடக்கும் இந்த விழா, வார இறுதி நாட்களில் வட சென்னையின் கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர் போன்ற புறநகர்ப் பகுதி மக்களும் ரசிக்கும் வகையிலும் அவர்கள் பகுதியில் இருக்கும் கலைஞர்களை அடையாளப் படுத்தும் வகையிலும் நடந்து வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு விழா நடக்கும் நாட்களின் எண்ணிக்கையும் அவற்றைக் காணும் ரசிகர்களின் எண்ணிக் கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
“மனிதர்களின் மகிழ்ச்சிக் கானவைதான் எல்லாக் கலைகளும். இந்த அடிப்படையில்தான் கலைகளின் வழியாகப் பலதரப்பட்ட மக்களையும் ரசனையின் வழியாக ஒன்றிணைக்க இந்தக் கலைத் தெருவிழாவை ஆறாவது ஆண்டாக நடத்துகிறோம்” என்கிறார் டி.எம்.கிருஷ்ணா.
விழாவின் ஒரு பகுதியாக கடந்த வார இறுதியில் மயிலாப்பூர், ராக சுதா அரங்கத் தில் திருநர் விழா நடந்தது. திருநங்கை சமூகத்தினரைப் பற்றியும் பால் புதுமைச் சமூகத்தினரைப் பற்றியும் இன்னமும் நெருக்கமாக பொதுச் சமூகத்தில் இருக்கும் மக்கள் புரிந்துகொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அந்த விழா அமைந்தது.
திருநங்கை கல்கி சுப்பிரமணியத்தின் ஓவியக் கண்காட்சி, திருநங்கை ரேவதியின் தனிநபர் நாடகம், மனித கழிவை மனிதர்களே அகற்றும் தொழிலாளிகளின் அவலத்தைப் பேசிய கட்டியக்காரி குழுவின் `மஞ்சள்’ நாடகம், அவர்களின் விளிம்புநிலை வாழ்க்கையைப் பற்றிய நிஜமான தரிசனத்தை அளித்தது.
தென்னிந்தியா முழுவதும் வாழும் திருநங்கைகளின் விழாக்கள், போராட்டம், கொண்டாட்டங்கள், மகிழ்ச்சியான தருணங்கள், சோகங்கள் எனப் பல உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் ஒளிப்படங்களை கடந்த 15 ஆண்டுகளாக எடுத்துவருபவர் ஒளிப்படக் கலைஞர் பி. அபிஜித். கடந்த 2013-ல் யதேச்சையாக இவருடைய ஒளிப்படக் கண்காட்சியைக் கண்ட கேரள அமைச்சர் எம்.கே. முனீர், “இதுபோன்ற மக்கள் நம் நாட்டில் இருக்கிறீர்களா? அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நம்மால் முடிந்த நல்லதைச் செய்ய வேண்டும்” என்றவர், கேரளத்தில் முறையாகக் கணக்கெடுப்பை நடத்தி, அவர்களுக்கான நல வாரியத்தையும் தொடங்கு வதற்குக் காரணமாக இருந்தார். அபிஜித்தின் ஒளிப்படக் கண்காட்சியும், மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்த இருவரின் வாழ்க்கைச் சம்பவங்களை நெருக்கமாகக் காட்சிப்படுத்தும் `என்னோடப்பம்’ ஆவணப்படமும் உருக்கமாக இருந்தன.
வடசென்னையைச் சேர்ந்த தாரா குழுவினர் பழைய பாடல் களுக்கு ஆடிய ரெகார்ட் டான்ஸ், கேரளத்திலிருந்து வந்திருந்த ஷீத்தல் குழுவினரின் நாட்டியம், முத்தாய்ப்பாக பத்மஸ்ரீ விருது பெற்ற திருநங்கை நர்த்தகி நடராஜ், புராண காலத்து அம்பையின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு நடத்திய பரதநாட்டிய நிகழ்ச்சி ஆகியவை மயிலாப்பூர் வாசிகளுக்கு வித்தியாசமான கொண்டாட்ட அனுபவத்தைத் தந்ததை, கரவொலியிலும் ஆரவாரத்திலும் புரிந்துகொள்ள முடிந்தது.