Published : 21 Jan 2020 12:59 PM
Last Updated : 21 Jan 2020 12:59 PM

இணைய உலா: பேசாமலேயே ஜெயித்த யூடியூபர்!

உலகெங்கும் இன்று யூடியூபர்கள் பெருகிவிட்டார்கள். யூடியூபில் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை ஏராளமானோர் கணக்கு வைத்திருக்கிறார்கள். ஆனால், யூடியூப் மூலம் எல்லோருமே பிரபலமடைந்துவிடுவதில்லை.

வீடியோக்கள் மூலம் சொல்லும் சேதிகள், அதைச் சொல்லும் விதம், ஈர்க்கும் வீடியோக்கள் ஆகியவற்றை வைத்துதான் யூடியூப் பிரபலங்கள் உருவாகிறார்கள். அந்த வகையில் சீனாவைச் சேர்ந்த லீ ஷிகி (Li Ziqi) என்ற இளம் பெண் இன்றைக்கு உலக அளவில் கவனம் ஈர்த்த யூடியூபராக வலம்வந்துகொண்டிருக்கிறார்.

80 லட்சம் பார்வையாளர்கள்

பெரும்பாலும் ஆடல், பாடல் போன்ற தனித்திறமைகளை வெளிப்படுத்திவரும் இளைஞர்கள் மத்தியில் லீ ஷிகி தன்னுடைய கிராமப்புற வாழ்க்கை முறையை வீடியோவாக இணையத்தில் பதிவிட்டுவருகிறார். 5 கோடி சீனர்கள் இவரது யூடியூப் அலைவரிசையின் சந்தாதாரராக உள்ளனர். அது மட்டுமா, வெளிநாட்டுப் பார்வையாளர்களின் எண்ணிக்கை மட்டும் 80 லட்சம். சீனாவின் இயற்கை அழகு, விவசாயம், உணவு முறை, கைவினைப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், ஆடைத் தயாரிப்பு, மூங்கில் பொருட்கள், மெத்தைகள், பட்டுத் துணிகள் எனத் தனக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் சுயமாகச் செய்துகொள்கிறார் லீ. இந்தப் பணிகளில் ஈடுபடும்போது அனைத்தையும் வீடியோவாக எடுத்து, பின்னர் யூடியூபில் பதிவிடுகிறார். இந்த வீடியோக்களைப் பார்ப்பவர்களுக்குப் பசுமையான கிராமத்தில் இருப்பது போன்ற உணர்வு உண்டாகிறது.

அரிசி மரம்

இவ்வளவு விஷயங்களைப் பதிவுசெய்யும் லீ தன்னுடைய ஒரு வீடியோவில்கூடப் பேசியது கிடையாது என்பதுதான் லீயின் தனிச் சிறப்பு. இதன் காரணமாகவே அவர் யார், அவருடைய பின்னணி என்ன என்பது போன்றவற்றைத் தெரிந்துகொள்ள மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. சில சீன ஊடகங்களுக்கு மட்டுமே லீ பேட்டி அளித்துள்ளார். இந்தப் பேட்டிகளுக்குப் பிறகு லீயை அறிந்துகொள்ள முடிந்தது.

லீ எப்படி இத்தனை வேலைகளையும் தனி ஆளாகச் செய்கிறார்? மாற்றாந்தாயுடன் வசித்துவந்த லீ, சிறு வயதில் பல இன்னல்களைச் சந்தித்தவர். 14 வயதிலேயே வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் லீக்கு ஏற்பட்டது. தன்னுடைய தேவைகளுக்காகப் பல தொழில்களைச் செய்யத் தொடங்கினார். பிறகு நோய்வாய்ப்பட்ட தன் பாட்டியைக் கவனித்துகொள்ள 2012-ல் கிராமத்துக்குத் திரும்பிய லீ, கடந்த 4 ஆண்டுகளாகத்தான் தன்னுடைய கிராமப்புற வாழ்க்கையை வீடியோவாகப் பதிவிட்டு வருகிறார்.

“நகரத்தில் வசிக்கும் குழந்தைகள் அரிசி மரத்தில் வளர்க்கிறது என நினைக்கிறார்கள். அவர்களுக்குத் தாங்கள் சாப்பிடும் உணவு எங்கிருந்து வருகிறது, எப்படி விளைகிறது என எதுவும் தெரியவில்லை. இதனாலேயே என் கிராமப்புற வாழ்க்கையைப் பதிவுசெய்யத் தொடங்கினேன்” என்கிறார் லீ.

சோள உணவைத் தயாரிக்க வேண்டும் என்றால்கூட அதைப் பயிரிட்டு, வளர்த்து, அறுவடை செய்து பின்னர் சோள உணவை லீ தயாரிக்கிறார். இதனால், உணவின் முக்கியத்துவத்தை இயந்திரம்போல ஓடிக்கொண்டிருக்கும் நகர்ப்புற மக்களுக்கு கூற முயல்கிறார். நகரங்களில் நிர்ப்பந்தம் காரணமாக வாழ்ந்த வாழ்க்கையைவிடக் கிராமத்தில் தன் மனதுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ்வதாகக் கூறுகிறார் லீ. அவரது வீடியோக்களைப் பார்ப்பவர்களுக்குக் கிராமப்புறம் சொர்க்கமாகவும் லீ ஷிகி அதில் தேவதை போலவும் வலம் வருகிறார்.

லீ ஷிகியின் வீடியோவைக் காண இணையச் சுட்டி: https://bit.ly/37cQ6SX

- அன்பு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x