இளைஞர் களம்: மிஸ்டர்களின் தலைவன்!

இளைஞர் களம்: மிஸ்டர்களின் தலைவன்!
Updated on
2 min read

தமிழ்நாட்டின் முதல் ‘அத்லெட் ப்ரோ கார்ட்’ என்ற பெருமைமிகு பட்டத்தை வென்றிருக்கிறார் ஜாமி. அதாவது, தொழில்ரீதியான பாடி பில்டர் பட்டம் இது. இந்தப் பட்டத்தை இந்த பட்டம் வென்றதன் பின்னணியில் ஜாமியின் 14 ஆண்டு கால உழைப்பும் அடங்கியிருக்கிறது.

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ஜாமி, ‘மிஸ்டர் சென்னை’, ‘மிஸ்டர் தமிழ்நாடு’ என வாங்காத பட்டங்களே கிடையாது. 29 வயதான இவர் பொறியியல், எம்.பி.ஏ. பட்டதாரி, தற்போது வங்கியில் பணிபுரிந்துவருகிறார். 14 ஆண்டுகளாக ஜிம் பயிற்சியில் ஈடுபட்டுவருவதோடு போட்டிகளிலும் பங்கேற்றுவருகிறார்.

10-ம் வகுப்பு படிக்கும்போதே ஜிம் போகத் தொடங்கிய ஜாமி, அப்போதிருந்தே சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெறும் உடல் வலிமை, ஆணழகன் போட்டிகளுக்குச் செல்லத் தொடங்கிவிட்டார். "சின்ன வயசுல என் நண்பன் இம்ரானைப் பார்த்துதான் எனக்கு இதன் மீது ஆர்வம் வந்தது. பயிற்சிக்குப் போன உடனே உடல் வலிமைப் போட்டிகள்ல ஆர்வம் வந்துடுச்சு. பயிற்சியின் மூலம் என் உடல் கட்டுக் கோப்பான வடிவம் பெற்றதைப் பார்க்கிறப்போ நான் அவ்ளோ சந்தோஷம் அடைஞ்சேன். அதனாலயே எனக்கு ஜிம் மீது தீராக் காதல் ஏற்பட்டுடுச்சு" என்கிறார் ஜாமி.

எத்தனை பட்டங்களை உடல் வலிமை மற்றும் ஆணழகன் போட்டிகளில் வென்றோம் என்ற கணக்கு வழக்கு இல்லாமல் பல வெற்றிகளைக் குவித்திருக்கிறார் ஜாமி. “போட்டிகளில் எவ்ளோ ஜெயிச்சேங்கிறதே எனக்கு ஞாபகம் இல்ல. 2017-ல் ‘மிஸ்டர் இந்தியா’ போட்டியில் வெள்ளி, 2018-ல் ‘மிஸ்டர் தமிழ்நாடு’, ‘மிஸ்டர் சவுத் இந்தியா’ போட்டியில் 2-ம் இடம், ஆசிய அளவில் நடைபெற்ற போட்டியில் ‘ஸ்போர்ட்ஸ்’ மாடலாக முதல் இடம், பெஞ்ச் லிப்டிங்கில் 3-ம் இடம், 2019-ல் ‘மிஸ்டர் தமிழ்நாடு’ பட்டம், ஆணழகன் போட்டியில் 2-ம் இடம்ன்னு நிறைய ஜெயிச்சுருக்கேன்.” என்று பெருமையாகச் சொல்கிறார் ஜாமி.

இதில் உச்சமாக மலேசியாவில் சர்வதேச அளவில் நடைபெற்ற ப்ரோ லீக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் ‘அத்லெட் ப்ரோ கார்ட்’ என்ற பட்டத்தையும் சேர்த்தே வென்றார் ஜாமி. சென்னை அளவில் உடல் வலு மற்றும் ஆணழகன் போட்டியில் யாரும் செய்யாத சாதனை என்ற மகுடத்தோடு இந்தப் பட்டத்தை வென்று காட்டியிருக்கிறார் ஜாமி. வேலைக்குச் சென்றுகொண்டே எப்படிப் போட்டிகளில் பங்கேற்க முடிகிறது என்ற கேட்டதும் அவருடைய முகம் சற்று வாடிவிட்டது.

“போட்டிகளில் பங்கேற்க அலுவலக வேலை நேரம்தான் சிக்கலா இருக்கு. 12 மணி நேரம் அலுவலக வேலையை முடிச்சுட்டுதான் உடற்பயிற்சிக்கே போறேன். ஒரு நாளைக்கு 2 மணி நேரம்தான் உடற்பயிற்சி செய்ய முடியுது” என்று சொல்லும் ஜாமிக்கு மனைவியும் 3 வயதில் குழந்தையும் இருக்கிறார்கள். “பல நேரத்துல பயிற்சியைக் கைவிட்டுடலாம்னு எனக்குத் தோணும். அப்போதெல்லாம் என் மனைவியின் முகமும் அவள் கொடுத்த தன்னம்பிக்கையும் எனக்கு ஞாபகத்துக்கு வரும்.

வேலையைத் தாண்டி இந்தத் துறையில நீடிக்க என் மனைவியும் என்னுடைய பயிற்சியாளர் ஹரிதாஸும் கொடுத்த மன வலிமையே முக்கிய காரணம்” என்கிறார் ஜாமி. ஆணழகன் போட்டியில் ‘அர்னால்ட் கிளாசிக்’ என்ற உலக அளவில் நடைபெறும் போட்டியில் கால் பதிக்க வேண்டும் என்ற கனவுடன் உள்ளார் ஜாமி. அந்தக் கனவை நனவாக்க இரவு பகல் பாராமல் உழைத்தும் வருகிறார்!

- வி. சாமுவேல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in