Published : 21 Jan 2020 12:34 PM
Last Updated : 21 Jan 2020 12:34 PM

பேசும் படம்: கணத்தின் உணர்வுகள்!

எப்போதும் யாராவது ஒருவர் செல்போன் கேமராவால் படம் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் 2001-ல் ஃபிலிம் கேமராவால் (Point and shot Camera) மனதுக்குத் தோன்றியதைப் படம் எடுத்துக்கொண்டிருந்தார். அவருடைய அப்பாவுக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போன பொழுதுகளையும் பதிவுசெய்திருக்கிறார்.

அந்தக் கறுப்பு-வெள்ளை படங்களைத் தேர்வுசெய்து, ‘வீடு மற்றும் டவுன் பையன்' என்ற ஒளிப்படத் தொகுப்புகளாக இணையத்தில் பதிவேற்றினார். அதில் ஒன்று அப்பாவினுடைய நினைவு பற்றியது. இன்னொன்று தான் வாழ்ந்த நகரின் அனுபவம் சார்ந்தது.

இந்த இரு ஒளிப்படத் தொகுப்புகள் ரசனையாகவோ, அழகியல் ரீதியிலோ இல்லாமல் சாதாரண காட்சிகள் போலத்தான் இருந்தன. இருந்தபோதும் அந்தத் தருணம் வெளிப்படுத்தும் உணர்வுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படங்களை எடுத்திருந்தார். இந்த ஒளிப்படத் தொகுப்புதான் அவருக்கு சர்வதேச அங்கீகாரத்தை வழங்கியது.

பர்ன் (BURN) என்ற இதழ் ஆண்டுக்கு ஒருமுறை சர்வதேச அளவில் வழங்கும் நிதிநல்கையைப் பெற 15 பேரில் ஒருவராக இவரைத் தேர்ந்தெடுத்துள்ளது. அத்துடன் லென்ஸ் கல்சர், பெட்டர் போட்டோகிராபி போன்ற இதழ்களில் இவருடைய நேர்காணல்கள் வெளியாகியுள்ளன.

கோடை விடுமுறையில் பெங்களூருவுக்கு மாமா வீட்டுக்குப் போனபோது மாமா வாங்கிக் கொடுத்த பிலிம் கேமராவில் படம் எடுத்துப் பழகினார். இது இப்படியே ‘காட்சித்தொடர்பியல்' பட்டப் படிப்பு, ஒளிப்படக் கலை என அழைத்துச் சென்றது.

மாநகரத்துக்குச் சென்ற பிறகு தன்னுடைய ஊர், விளையாடிய இடங்களை நினைவுகளாக தன் அருகிலேயே வைத்துக்கொள்ள அந்தக் கணத்துக்கான உணர்வுகளைப் பதிவுசெய்யத் தொடங்கினார். ஒளிப்பட விதிகளில் கவனம் செலுத்தாமல் குழந்தையின் மனதைப்போல் ஒளிப்படங்களாகத் தொகுத்துள்ளார். இப்படி எடுக்கப்பட்ட படங்கள் தான் சர்வதேச அளவில் கவனம் பெற்றன.

“இந்தப் பாணியிலான படங்களைத் தனிப்படமாகப் பார்க்காமல் முழு தொகுப்பாகப் பார்க்கும்போதுதான் ஒருவித நெருக்கத்தை உணரலாம்” என்கிறார் சதீஷ்குமார்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: mkannanjournalist@gmail.com

நெல்லை மா. கண்ணன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x