

எனக்கு வயது 26. என்னுடைய பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். எனக்கு ஒரு அண்ணன். நான் பள்ளியில் படிக்கும்போது ஒருவரைக் காதலித்தேன். பதினோராம் வகுப்பு படிக்கும்போது நான் காதலித்த பையனுடன் ஓடிப்போக வேண்டிய சூழல் ஏற்பட்டது. பதிவு அலுவலகத்தில் ஏதோ பொய் சொல்லித் திருமணமும் நடந்தது. பின்னர் போலீஸ் ஸ்டேஷனில் சரண்டர் ஆனோம். உரிய வயது வரவில்லை என்று பிரித்துவைத்தார்கள்.
பின்னர் நீதிமன்றம், வழக்கு என்று வந்தபோதும் அவனுடன்தான் சேர்ந்து வாழ்வேன் என்று சொன்னேன். அப்பா உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். இவ்வளவு பிரச்சினைக்குப் பின்னர் காதலனுடன் சேர்ந்த எனக்கு முதல் நாளே அதிர்ச்சி. அவன் குடிகாரன். துயரங்கள் தொடர்ந்தன. வீட்டிலும் சொல்ல இயலவில்லை. அப்படியே வாழ்க்கை தொடர்ந்தது. நான் நடுத்தரக் குடும்பத்தையும், என் கணவன் ஏழைக் குடும்பத்தையும் சேர்ந்தவர்கள். வாழ்க்கை கஷ்டத்துடனே ஓடியது. பின்னர் பையன் பிறந்தான்.
அந்தச் சமயத்தில் பெற்றோருடன் பேச ஆரம்பித்திருந்தேன். பிரசவம்கூட அவர்கள்தான் பார்த்தார்கள். கணவர் முடியாது என்று சொல்லிவிட்டார். மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை வேறு அனுபவித்தேன். அந்த நேரத்தில் தற்கொலைக்கு முயன்றேன்.
முதலில் மறுத்த என் கணவர் ஒத்துக்கொண்டதால் பின்னர் டிப்ளமோ படிக்க ஆரம்பித்தேன். பையனை பெற்றோர் பார்த்துக்கொண்டனர். இந்த நேரத்தில் கணவரின் குடிப் பழக்கம் அதிகமாகியது. வேறு பெண்களுடன் தொடர்பு வேறு ஏற்பட்டுவிட்டது. ஒரு நாள் நண்பர்களுடன் வீட்டிலேயே குடிக்க ஆரம்பித்துவிட்டார். பெரிய தொந்தரவாகப் போய்விட்டது. தட்டிக்கேட்டபோது அவர்கள் முன்னிலை என்னை அடிக்க ஆரம்பித்தார். நான் பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டேன்.
ஆனாலும் பிரச்சினை தொடர்ந்தது. வேறு கல்யாணம் செய்துகொள்ளப் போவதாகச் சொன்னார். நான் சரி என்று சொல்லிவிட்டேன். மறுநாள் பதிவு அலுவலகம் சென்று விவாகரத்து செய்து கொண்டேன். பின்னர் விடுதியில் தங்கி பி.இ. படித்தேன். இப்போது வீட்டில் பணப் பிரச்சினை. என் பையனுக்கு எட்டு வயது. அவனும் எது சொன்னாலும் கேட்பதில்லை. எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. ஒரு காதலால் நிறைய இழந்துவிட்டேன். இன்னும் முறைப்படி விவாகரத்து வாங்கவில்லை. தனிமை மட்டுமே துணையாக உள்ளது. நான் சந்தோஷமாக வாழ விரும்புகிறேன். குடும்பச் சூழலை நினைத்தால் இறந்துபோய்விடலாமா என்று தோன்றுகிறது. இப்போது எம்.இ. படிக்கிறேன். படிப்பை ஒழுங்காகக் கவனிக்கிறேன். சொல்லி அழக்கூட ஒரு ஆள் இல்லை. எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் வாழ்வின் நம்பிக்கை நட்சத்திரம், அனைத்துச் சவால்களையும் மீறி நீங்கள் படிக்கும் படிப்பு! எம்.இ.யை முடித்து ஒரு வேலையில் அமருங்கள். மகனை உங்களிடம் அழைத்துக் கொள்ளுங்கள். பெற்றோர் செய்த தவறுக்கு தண்டனையை அவன் அனுபவித்துக்கொண்டிருக்கிறான்! உங்களுடைய அரவணைப்பு அவனுக்குக் கிடைக்காவிட்டால், உங்களைப் போல் சிறு வயதில் அன்புக்காக ஏங்கி அலைமோதலாம்! இப்போதைக்கு அவன்தான் உங்கள் வாழ்க்கை. குழந்தை வளர்ப்பு புத்தகங்கள்/ இணையதளம்/ உளவியல் ஆலோசகர் ஆகியவற்றின் உதவியுடன் அவனைச் சரியாக வளர்க்க முயலுங்கள்.
இதுவரை ஏற்பட்ட பாதிப்புகளின் விளைவுதான் அவனுடைய இன்றைய நடத்தை. படிப்பு/ வேலை, குழந்தை இரண்டையும் நீங்கள் சரிவர செய்ய வேண்டுமென்றால், கடந்தகால நினைவுகளை அறவே ஒழிக்க வேண்டும். கசப்பான நினைவுகளை வளர்ப்பது ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?’ எனும் கேள்விதான். இது வந்தால், ‘பக்குவமற்ற வயதில் நான் எடுத்த தவறான தீர்மானங்களின் விளைவுதான் இன்றைய நிலை. இதைச் சரிசெய்ய நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டுக் கொள்ளுங்கள். பழைய சரித்திரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க, விவாகரத்து செய்துகொள்ளுங்கள். இன்று என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் இருக்கட்டும்.
நேற்றைப் பற்றி நினைத்தால் குற்ற உணர்வுதான் மிஞ்சும். நாளையைப் பற்றி நினைக்கும்போது ஏற்படும் கவலையும் பயமும் இன்றைய நாளை வீணடித்துவிடும்! தனிமை உங்களை வாட்டும்தான். அதைத் தவிர்க்க ஏதாவது ஒரு பொழுதுபோக்கை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவசரப்பட்டு இன்னொரு உறவில் இப்போது சிக்கிக்கொள்ளாதீர்கள்! மகனோடு செலவிடும் நேரத்தை மதிப்பு வாய்ந்ததாக ஆக்குங்கள். நீங்கள் இந்த விஷயங்களில் கவனம் செலுத்தினால் உங்கள் வாழ்க்கையில் மீண்டும் மகிழ்ச்சி துளிர்க்கும்!
நான் எட்டாம் வகுப்பு படித்தபோது ஒரு மாணவன் என்னைக் கவர்ந்தான். எனக்கு அவன் மீது காதல் வந்தது. நாங்கள் எப்போதாவது பேசிக்கொள்வோம். அவன் நன்றாகப் படிப்பான்; விளையாட்டிலும் கெட்டிக்காரன். அவனுக்குத் தமிழ் என்றால் உயிர்; நண்பர்கள் என்றால் கொள்ளைப் பிரியம். அவன் சக மாணவிகளிடம் குறைவாகப் பேசுவான். அவனுக்குக் காதல் என்றால் வெறுப்பு. அதனால் நானும் என் காதலை அவனிடம் சொல்லவில்லை.பத்தாம் வகுப்பு விடுமுறையில் நாங்கள் வீடு மாறினோம். அதிர்ஷ்டவசமாக அவனுடைய வீட்டுக்கு அடுத்த தெருவில் எங்கள் வீடு அமைந்தது. நாங்கள் அடிக்கடி பார்த்துக்கொள்வது உண்டு, ஆனால் பேசிக்கொள்வதில்லை.
பின்னர் 12-ம் வகுப்பில் இயற்பியல் டியூஷன் ஒன்றாகப் படித்தோம். அப்போதும் பேசிக்கொள்ள மாட்டோம். இப்படி எனக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் நான் வீணாக்கிவிட்டேன். இப்போது அவன் சென்னையில் படிக்கிறான். நானும் சென்னையில் வேறொரு கல்லூரியில் படிக்கிறேன்.நான் அவனைக் காதலிப்பது இதுவரை அவனுக்குத் தெரியாது. காதலைச் சொல்லப் பயமாகவும் தயக்கமாகவும் உள்ளது. அவனைப் பதிமூன்று வயதில் பார்த்ததற்கும் இப்போது பத்தொன்பது வயதில் பார்த்ததற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
இப்போது மிகவும் ஜாலியான பையனாக மாறிவிட்டான்.ஒரு முறை ‘உனக்கு ஏன் காதல் என்றால் வெறுப்பு?’ என்று கேட்டேன். அவன், ‘காதல் என்பது எல்லாம் பொய். எனக்கு நம்பிக்கை இல்லை. இனி காதல் பற்றி என்னிடம் பேசாதே’ என்று சொல்லிவிட்டான். நாங்கள் அளவுக்கு அதிகமாகப் பேசியதில்லை. எனவே நான் அவனுக்கு அவ்வளவு நெருக்கம் கிடையாது. என் தோழிகளும் தோழர்களும் அவனிடம் காதலைச் சொல்லுமாறு என்னை வற்புறுத்துகிறார்கள். இப்போது நான் அவனிடம் காதலைச் சொல்லலாமா அல்லது பின்னர் சொல்லலாமா?
தோழி, நரி இடம் போனாலும் வலம் போனாலும் பிரச்சினைதான்! காதலைச் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவஸ்தைதான்!! சொல்லாவிட்டால் நல்ல சந்தர்ப்பம் கை நழுவிப்போய்விடலாம். மனதில் உள்ளதைப் பேச முடியாமல் போனது அவஸ்தைதான். சொல்லிவிட்டு அவர் மறுத்துவிட்டால், இடிந்துபோய் விடுவீர்கள். சொல்லிய பின் அவர் ஏற்றுக்கொண்டால் வானத்தில் பறக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.
அது ஒரு தற்காலிகமான இன்ப அவஸ்தை!! இந்த வயதில் காதலிக்க ஆரம்பித்து, சில வருடங்கள் கழித்து மணம் முடித்த பலரும் தங்கள் தேர்வை நினைத்துப் புலம்புவதைப் பார்க்கிறோம். எங்கோ, யாரோ ஒருவருக்குத்தான் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைகிறது. இந்த மூன்று சூழ்நிலைகளிலுமே ஒரு ஆபத்து இருக்கிறது. படிப்பிலோ வேறு செயல்களிலோ கவனம் செலுத்த முடியாமல் அமுக்கிவைக்கும் எண்ணங்களும் நினைவுகளும் உங்களைக் குறிக்கோளிலிருந்து நகர்த்திவிடும். தடம்புரண்டு போக வாய்ப்பிருக்கிறது.
வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது, எதிர்கால வேலைக்கு அடித்தளம் போடுவது - இந்த இரண்டில் எது முக்கியம், பதின்ம வயதில்? யோசியுங்கள். பதிமூன்று வயதில் பாலினச் சுரப்பிகளால் வரும் ஈர்ப்பு இப்படித்தான் படுத்தும். இப்போது வேண்டாம் என்று உறுதியாக இருந்தால், உங்களுக்கு நல்லது. வளரும் பருவத்தில் இருவரது ஆளுமையுமே மாறிக்கொண்டே இருக்கும்.
ஐந்து வருடங்கள் கழித்து நீங்களே மாறியிருப்பீர்கள். அந்த நபரிடம் உங்களுக்குப் பிடிக்காத சில குணங்கள் தெரியலாம்; அப்போது விலக நினைத்தாலும், காதலில் மாட்டிக் கொண்டிருப்பீர்கள். படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி சில வருடங்களைப் பொறுமையாகக் கடத்துங்கள். சொந்தக் காலில் நின்றபின் காதலைச் சொல்லுங்கள், அப்போதும் அவரையே நினைத்துக்கொண்டிருந்தால்...!!