

மிக நீண்ட தூரம் பைக்கில் சாகசப் பயணம் மேற்கொண்ட இந்திய பெண் யார் தெரியுமா? பெங்களூரைச் சேர்ந்த 29 வயதான கேண்டிடா லூயிஸ்தான் இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர். ஆசிய கண்டத்திலிருந்து ஆஸ்திரேலிய கண்டத்துக்கு பைக்கிலேயே சென்ற கேண்டிடா, அண்மையில் வெளியான இந்தியன் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் - இல் இடம்பிடித்து அசரடித்துள்ளார். உடல்ரீதியாகப் பலம் வாய்ந்த ஆண்களே யோசிக்கும் இந்த சாகசப் பயணத்தை, ஒற்றை ஆளாக கேண்டிடா லூயிஸ் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.
பைக் சாகச விரும்பியான கேண்டிடாவுக்கு பெங்களூருவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பைக்கில் செல்ல வேண்டும் என்ற கனவு நீண்ட காலமாகவே இருந்தது. இதற்காகவே இந்தியாவில் உள்ள 24 மாநிலங்களில் 34 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் மேற்கொண்டார்.
அந்தப் பயணம் தந்த தைரியமும் உற்சாகமும் ஓராண்டுக்கு முன்பு பெங்களூரு நகரிலிருந்து சிட்னி நகருக்கு பைக் பயணத்தை மேற்கொள்ள ஊக்கமூட்டியிருக்கிறது. பைக் மீதுள்ள அளவு கடந்த காதலாலும் பெண்களால் பாதுகாப்பின்றி இருக்க முடியாது என்ற கருத்தை உடைக்கவுமே இந்த சாகச பயணத்தை கேண்டிடா மேற்கொண்டார்.
50 கிலோ மீட்டர் தூரப் பயணத்தை பைக்கில் மேற்கொண்டாலே நாமெல்லாம் சோர்வடைந்துவிடுவோம். ஆனால், வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம், கம்போடியா, மலேசியா, சிங்கப்பூர் வரை பைக்கிலேயே சென்ற கேண்டிடா, பின்னர் சிங்கப்பூரிலிருந்து இந்தோனேஷியாவுக்குக் கப்பலில் சென்றார். பின்னர், ஜகார்தா வழியாக மாலி தீவுக்கு பைக்கில் வந்து அங்கிருந்து ஆஸ்திரேலியாவின் டார்வின் நகருக்கு கப்பலில் சென்றார்.
பிறகு ஆஸ்திரேலியாவில் பெர்த், அடிலெய்ட், மெல்போர்ன் வழியாக பைக்கில் சிட்னி நகரை அடைந்தார். பெங்களூருவிலிருந்து சிட்னி நகர்வரை 28 ஆயிரம் கிலோ மீட்டர் பைக்கிலேயே பயணம் செய்து சாதித்தார் கேண்டிடா. இந்தப் பயணத்தை 6 மாதங்களாக மேற்கொண்டார். ஆசியாவிலிருந்து 10 நாடுகளைக் கடந்து ஆஸ்ரேலியாவுக்கு வந்த முதல் இளம் பெண் என்ற சாதனையையும் சேர்ந்தே படைத்தார்.
ஹூப்ளியைச் சொந்த ஊராகக் கொண்ட கேண்டிடா, பெங்களூருவில் பைனான்ஸ் கம்பெனியில் பணிபுரிந்துவந்தார். பைக் மீதான காதலால், செய்த வேலையை விட்டுவிட்டு, கனவு வேலையான பைக் வடிவமைப்புப் பணிக்கு மாறினார். இந்தக் கனவுப் பயணத்தை மேற்கொள்ள ஆர்வம் எப்படி வந்தது? “அமெரிக்காவைச் சேர்ந்த ஆலிஸ்டர் ஃபார்லேண்ட் என்ற பைக் சாகசப் பெண்தான் எனக்கு ரோல் மாடல்.
அவரைப் போலவே நீண்ட தூரம் பைக் பயணம் மேற்கொள்ள விரும்பினேன். அதோடு சில விஷயங்களையும் முன்வைத்துதான் இந்தப் பயணத்தை நிறைவுசெய்தேன். இந்த வெற்றியை ஆலிஸ்டருக்கு சமர்ப்பணம் செய்ய நினைத்தேன். என் பயணம் முடிவதற்குள் அவருடைய வாழ்க்கைப் பயணம் முடிந்தது துரதிர்ஷ்டமானது” என்கிறார் கேண்டிடா.
28 ஆயிரம் கி.மீ. பயணத்தில் கேண்டிடா பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறார். “இந்தப் பயணத்துக்கு 400 சிசி பைக்கைப் பயன்படுத்தினேன். மேடு, பள்ளங்கள், காடு, மலை என எல்லா இடங்களிலும் பயணிக்க என் பைக் உதவியது. கூகுள் மேப் உதவியுடன் பயணத்தை மேற்கொண்டேன். தொடக்கத்தில் எளிதாக இருந்தாலும், போகப்போக கடினமானது.
குறிப்பாக, மியான்மர் – தாய்லாந்தைக் கடக்க சிரமாக இருந்தது. மழை காரணமாக வழியெங்கும் சேறும் சகதியாக இருந்தது. ஒரு கட்டத்தில் இந்தப் பயணத்தை விட்டுவிடலாம் என்றும் எனக்குத் தோன்றியது. ஆனால், நினைத்தை முடிக்க முனைப்போடு முன்னேறினேன்.
மன உறுதியால் சோதனைகளைக் கடந்து வந்தேன். ஒவ்வொரு நாட்டைக் கடக்கும்போதும் ஒவ்வொரு அனுபவமும் புத்துணர்ச்சியும் எனக்குக் கிடைத்தது” என்கிறார் கேண்டிடா. 3 மாதங்களில் பயணத்தை முடிக்க திட்டமிட்டு, அது 6 மாதங்கள் ஆனது மட்டுமே கேண்டிடா போட்ட கணக்கில் தவறானது. கேண்டிடாவுக்கு உலக அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்திருக்கும் இந்தப் பயணம் அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையே.
- வி. சாமுவேல்