Published : 14 Jan 2020 11:20 AM
Last Updated : 14 Jan 2020 11:20 AM

டிவியிலிருந்து குதித்த பெண்!

ஜெயந்தன்

மேடையில் வைக்கப்பட்டிருந்த 40 அங்குல டிவியை இயக்கினார் 32 வயது நிரம்பிய ரஷ்ய மேஜிக் கலைஞரான அலெக்ஸ் பிளாக். மாஸ்கோவின் முக்கிய செய்தித் தொலைக்காட்சிகளில் ஒன்றான ‘ரஷ்யா டுடே’வின் செய்தி நிகழ்ச்சியைக் கையிலிருக்கும் ரிமோட்டால் சொடுக்கினார். திரையில் மலர்ந்த நிகழ்ச்சியில் ஆண் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர், அனெஸ்டேசியா ரசோவா என்ற சர்க்கஸ் பெண் கலைஞரைப் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார்.

இப்போது அலெக்ஸ் பார்வையாளர்களைப் பார்த்து, “டிவியில் பேட்டி அளித்துக்கொண்டிருக்கும் என் குழுவைச் சேர்ந்த அனெஸ்டேசியா, இப்போது டிவியின் திரையிலிருந்து இந்த மேடையில் குதிக்கப்போகிறார். எல்லோரும் கவனியுங்கள். இதை ஏமாற்று வேலை என்று நீங்கள் நினைத்தால், எத்தனை முறை வேண்டுமானாலும் உங்களுக்கு இதை நிகழ்த்திக் காட்ட நான் தயார்” என்றவர் மேடையின் விளக்குகளை அணைக்காமல் தனது விரல்களை டிவியை நோக்கி நீட்டினார்.

டிவி திரையில் பேசிக்கொண்டிருந்த அனெஸ்டேசியா டிவியிலிருந்து தனது கையைத் திரையின் விளிம்பை நோக்கி நீட்டினார். அவரது கை திரையிலிருந்து வெளியே நீண்டு, அலெக்ஸின் கையைப் பற்றிக் குலுக்க… அப்படியே அந்தப் பெண்ணை வெளியே இழுத்துப்போட்டார் அலெக்ஸ். இப்போது மேடையில் நின்று ‘நமஸ்தே...

தமிழ் வணக்கம்’ என்று பார்வையாளர்களை நோக்கி இரு கரங்களையும் கூப்பினார் அனெஸ்டேசியா. இந்தக் காட்சியைக் கண்டு, ‘ஹோய்ய்ய்..’ என்ற ஆச்சரியக் கூச்சலிட்டனர் குழந்தைகள். தொடர்ந்து ஆச்சரியம் விலகாத பார்வையாளர்களிடம் எழுந்த சலசலப்பு அடங்க இரண்டு நிமிடங்கள் ஆயின.

“இதுபோன்ற 3டி இல்யூசன் வகை மேஜிக்கை நிகழ்த்திக் காட்டுவதில் ரஷ்யர்கள் கெட்டிக்காரர்கள்” என்ற அலெக்ஸ் நடத்திய 2 மணிநேர லைவ் மேஜிக் காட்சி, ஒவ்வொரு மேஜிக்கும் தந்திரம்தானே என்ற சந்தேகத்தைக் கிளப்பியது. நிகழ்ச்சி முடிந்ததும் அலெக்ஸுக்குக் கைகுலுக்கி, அவரிடம் கேட்டதும் மர்மமாகப் புன்னகைத்தார்.

“10 வயதில் டிவியில் நான் பார்த்த மேஜிக் ஷோதான் எனக்கு இந்தக் கலை மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. நான் மேஜிக் கலைஞனாகப் பெற்றோர் ஒத்துக்கொள்ளவில்லை. பின்னர், மேஜிக் செய்வது எப்படி என்ற டேவிட் காப்பர்ஃபீல்டின் புத்தகத்தை வாங்கி, சில எளிய மேஜிக்குகளை அப்பா, அம்மாவின் பிறந்தநாளுக்குச் செய்து காட்டினேன்.

என் ஆர்வத்தைப் புரிந்துகொண்டார்கள். பள்ளிப்படிப்பு முடிந்ததும் மாஸ்கோ சர்க்கஸ் பள்ளியில் 5 ஆண்டுகள் மேஜிக் கலையைப் பயின்றேன். ஆனால், இந்தக் கலையின் உச்சங்களைக் கற்க எனக்கு 15 ஆண்டுகள் பிடித்தன. நான் நிகழ்த்தும் மேஜிக் நிகழ்வு ஒவ்வொன்றும் எனது கற்பனையிலிருந்து உருவானவையே. அவற்றைக் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிடிக்கும் வண்ணம் வடிவமைப்பதுதான் எல்லாவற்றிலும் முக்கியமானது.

மேஜிக் என்பது பார்வையாளர்களை வியக்கவைப்பது மட்டுமே அல்ல; நடனம், இசை இரண்டுமே ஒரு மேஜிக் கலைஞனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இசையாலும் நடனத்தாலும் மயக்க வேண்டும். அதுதான் முழுமையான மேஜிக்” என்று சொல்லும் அலெக்ஸ் பிளாக் 25 நாடுகளுக்கு ஆண்டுதோறும் அழைக்கப்படும் சர்வதேச 3டி இல்யூசன் மேஜிக் கலைஞர்.

பொதுவாக, மேஜிக் கலைஞர்கள் சக மேஜிக் கலைஞர்களை மட்டுமே திருமணம் செய்துகொள்வது ஏன் என்றபோது, “இக்கலை சில ரகசியங்களின் அடிப்படையில் இயங்குகிறது. அந்த ரகசியத்தைக் காக்கவே நாங்கள் குடும்பமாக ஆக வேண்டியிருக்கிறது. காதலிக்கும் கலையிலிருந்து காதலி கிடைப்பது அதிர்ஷ்டம்தான்.

பைபிள் காலத்திலிருந்து மேஜிக் கலை இருக்கிறது. இத்தனை முதுமையான கலையைப் பழகுவதும் அதைக் கொண்டு மகிழ்விப்பதுதான் என்னை இளமையாக வைத்திருக்கிறது” எனும் அலெக்ஸ் மூன்றாம் முறையாக தற்போது சென்னைக்கு வந்து தனது மேஜிக் காட்சிகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.

கடந்த 10-ம் தேதி தொடங்கி வரும் 19-ம் தேதிவரை சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் மாலை 4 மணிக்கும் இரவு 7 மணிக்கும் என இரு காட்சிகளாக அவருடைய நிகழ்ச்சிகளைக் காணலாம். இந்திய – ரஷ்ய நட்புறவுக் கழகம் ஒருங்கிணைத்திருக்கும் இந்த அரிய நிகழ்ச்சி குடும்பங்களுக்கானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x