

டிஸ்னி கதா பாத்திரங்களை ரசிப்பதற்கு எப்போதுமே வயது ஒரு தடையாக இருந்திதில்லை. இன்ஸ்டாகிராமில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் ‘நீங்கள் எந்த டிஸ்னி கதாபாத்திரம்?’ (Which Disney are you?) என்ற ஃபில்டருக்கு நெட்டிசன்கள் கொடுத்திருக்கும் வரவேற்பு இதற்கு ஓர் உதாரணம்.
அர்னோபார்டிஸ்ஸிமோ (@arnopartissimo) என்ற இன்ஸ்டாகிராம் டிஜிட்டல் கலைஞர் உருவாக்கியிருக்கும் இந்த ஃபில்டர், நீங்கள் எந்த டிஸ்னி கதாபாத்திரம் என்பதைக் கணித்துச்சொல்கிறது. சின்ட்ரல்லா, கேப்டன் ஹூக், சிம்பா, அலாவுதீன் ‘ஃபுரோஸன்’ திரைப்படத்தின் ஒலாஃப், எல்சா, உள்ளிட்ட கதாபாத்திரங்கள் இந்த ஃபில்டரில் இடம்பெற்றுள்ளன.
இன்ஸ்டாகிராமில் மட்டுமல்ல, ட்விட்டரிலும் இந்த ‘டிஸ்னி’ டிரண்டு வைரலாகிவருகிறது. டிஸ்னியின் இளவரசிகள், இளவரசன்களோடு, வில்லன்களும் இந்த ஃபில்டரில் இடம்பெற்றுள்ளன. நெட்டிசன்கள் மட்டுமல்லாமல் அவர்களின் வளர்ப்புப் பிராணிகளும் இந்த ஃபில்டரைப் பயன்படுத்தி தாங்கள் எந்த டிஸ்னி கதாபாத்திரம் என்பதைக் கண்டுபிடிக்கும் காணொலிகள் இன்ஸ்டாகிராமில் அதிகமாகப் பகிரப்பட்டுவருகின்றன. சென்ற ஆண்டு ‘ஸ்னாப்சேட்’டின் ஸ்பைடர் ஃபில்டர் கவனம் ஈர்த்ததைப் போல இந்த ஆண்டு டிஸ்னி ஃபில்டர் கவனம் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் கலைஞர் அர்னோபார்டிஸ்ஸிமோவின் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்குச் சென்று இந்த டிஸ்னி ஃபில்டரைப் பயன்படுத்தலாம். டிஸ்னி ஃபில்டரை முயல : www.instagram.com/arnopartissimo/
- கனி