Published : 07 Jan 2020 01:33 PM
Last Updated : 07 Jan 2020 01:33 PM

இது சென்னை ‘பீட்சா’!

உங்களுக்கு அட்லாப்பம் தெரியுமா? வட சென்னையின் பிரத்யேக பீட்சா போன்ற ஓர் உணவுதான் அட்லாப்பம். மீனவர்கள் அதிகம் வசிக்கும் திருவெற்றியூர், காசிமேடு, எண்ணூர் உள்ளிட்ட வட சென்னை கடற்கரைப் பகுதிகளில் மட்டுமே கிடைக்கும் உணவுதான் இது. இளைஞர்கள் விரும்பி உண்ணும் இந்த உணவு வட சென்னையின் அடையாளமானது எப்படி?

மனிதர்கள் தினந்தோறும் ஆற்றலோடு செயல்பட சக்திமிக்க உணவுகள் தேவை. இந்த அட்லாப்பம் என்ற உணவு புரதச்சத்துமிக்க உணவு. வட சென்னையில் மீன் தொழிலுக்குப் புகழ்பெற்ற பகுதிகளில் இது பரவலாக உண்ணப்படுகிறது. இந்த உணவு எல்லா வேளைகளிலும் கிடைக்காது. அதிகாலையில் மட்டுமே அட்லாப்பம் சுடச்சுட கிடைக்கும். இந்த அட்லாப்பத்தை வாங்க அதிகாலையிலேயே இளைஞர் கூட்டம் காத்திருக்கும். இந்த உணவைச் சாப்பிட்ட பிறகுதான் கடினமாக வேலைகளில் ஈடுபடவே தொடங்குகிறார்கள் இளைஞர்கள்.

“அட்லாப்பத்தில் புரதச் சத்து மிக்க உணவுப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. முட்டை, பால், மாவு, தேங்காய், பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு போன்ற சமச்சீரான உணவுப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. காலையில் உடற்பயிற்சிக்குச் செல்வோர், அதிக உடல் உழைப்பைக் கோரக்கூடிய கால்பந்து போன்ற விளையாட்டுகளை விளையாடச் செல்பவர்கள் இந்த உணவை விரும்பிச் சாப்பிடுவார்கள். உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும் என்பதால், இந்த உணவுக்கு இந்தப் பகுதி இளைஞர்கள் மத்தியில் தனி மவுசு உள்ளது.” என்கிறார் அட்லாப்பம் தயாரிப்பில் ஈடுபடும் குப்பு.

பார்ப்பதற்கு பீட்சா போன்ற தோற்றத்தில் இருக்கும் இது, சுவையில் தித்திப்பாக இருக்கும். ஆப்பம் வகையைச் சேர்ந்த இந்த உணவில் சத்துமிக்க பொருட்களும் சேர்க்கப்படுவதால், சத்துணவு என்று சொல்லும் அளவுக்கு வட சென்னையில் புகழ்பெற்றுவிட்டது. காசிமேட்டில் மீன் ஏலம் விடும் பக்கத்தில் ஒரு தெரு முழுவதுமே கடைகளை அதிகாலையில் திறந்து, இந்த உணவைத் தயாரிக்கிறார்கள்.

“அதிகாலையில் கடலுக்குள் செல்லும் மீனவர்கள், விளையாடச் செல்லும் இளைஞர்கள், பள்ளிக்குச் செல்லும் சிறார்கள் வரை எல்லோரும் இந்த உணவை விரும்பிச் சாப்பிடுவார்கள்” என்று சொல்லும் குப்பு, “இந்த உணவை எளிதாக வீட்டிலேயே செய்தும் சாப்பிடலாம்” என்கிறார்.

அரிசி மாவில் துருவிய தேங்காய், சர்க்கரை, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு போன்றவற்றைச் சேர்த்து ஒன்றாகக் கலக்கிக் கொள்ள வேண்டும். இதைத் தயார் செய்த பிறகு மண் பானை அல்லது மண் சட்டியில் எண்ணெயைத் தேய்த்து. அதில் இரண்டு அல்லது மூன்று கரண்டி அளவுக்குத் தயார் செய்த மாவை ஊற்ற வேண்டும். அதன் மேலே முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும்.

மெல்லிய தேங்காய்த் துண்டுகளை முட்டையின் மீது வைக்க வேண்டும். அந்தப் பானை அல்லது சட்டியின் மீது இன்னொரு பானையை வைத்து மூடிவிட வேண்டும் (அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப தோசைக் கல், ஆப்ப சட்டி, கிடாய் ஆகியவற்றிலும் ஊற்றலாம்) 15 - 20 நிமிடங்கள் நன்றாக ஆவியில் வேகவிட்டால், சூடான, சுவையான அட்லாப்பம் தயார். காலையில் சத்தாண உணவைச் சாப்பிட விரும்புவோர் வடசென்னை ‘பீட்சா’வை முயன்று பார்க்கலாமே!

- கட்டுரை, படங்கள்: வி.சாமுவேல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x