

புதுச்சேரியைச் சேர்ந்தவர் முகமது முஸ்தபா. 12-ம் வகுப்பு முடித்தவுடன் 20 வயதில் குடும்பச் சூழலால் புதுச்சேரி, மும்பையில் லாரி கிளீனராக, பைபாஸ் சாலையில் கறுப்பு-வெள்ளைக் கோடுகள் வரைவது, இரவுக் காவலாளியாக, வார்டு பாயாக, வீடுகளில் பூச்சிமருந்து அடிப்பவராக, கழிவுநீர்க் கால்வாய் சுத்தபடுத்துபவராக - இப்படி 10 ஆண்டுகளுக்கு அவர் செய்யாத வேலையே கிடையாது.
பிறகு விற்பனைப் பிரதிநிதியாக வேலை செய்தபோது, அந்த நிறுவனத்தின் மேலாளர், கல்லூரியில் முஸ்தபா படிக்க உதவியுள்ளார். இதன்மூலம் 2010-ல் பெங்களூருவில் ஒரு கால்-சென்டரில் வேலை கிடைக்க, அவருடைய குடும்பம் கொஞ்சம் தலை நிமிர்ந்தது, ஆனால், இளம்வயதில் இரவு பகல் பாராமல் அவர் வேலை செய்ததன் விளைவாக உடல் பிரச்சினைகளும் மனஅழுத்தமும் சேர்ந்து அழுத்தின. ஏதோ ஒரு யோசனையில் தன்னையும் அறியாமல் கேமரா வாங்கிப் படம் எடுக்கத் தொடங்கினார். அது மனத்துக்கு இதம் தருவதாக உணர்ந்ததாகக் கூறுகிறார்.
மதுரையில் 'கண்ணாடி' அமைப்பு சார்பில் நடைபெற்ற ஒளிப்படக் கலந்துரையாடலில் ”மனம்தான் ஒளிப்படக் கருவி.. விலை உயர்ந்த ஒளிப்படக் கருவி மட்டுமே சிறந்த படங்களைத் தந்து விடாது. மனிதன் மனத்தை எப்படிப் பக்குவப்படுத்து கிறானோ, அப்படித்தான் அவனுடைய ஒளிப்படமும் காட்சிகளாக வெளிப்படும்” என்று ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர். சீனிவாசன் பேசிய வார்த்தைகள் தன்னை வழிநடத்துவதாக நம்புகிறார்.
கடந்த ஆண்டு பாலமேடு, அலங்காநல்லுாரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் டிஜிட்டல், ஃபிலிம் ரோல் இரண்டிலும் ஒளிப்படங்களை எடுத்தார் முஸ்தபா. ஜல்லிக்கட்டு என்பது மாடு பிடிப்பது மட்டுமல்ல. அதில் ஈடுபடுபவர்களின் மகிழ்ச்சி, ஆராவாரம், கைலியை மடித்துக்கட்டி உட்கார்ந்திருக்கும் தோரணை, மாடுகளுடன் அவர்களுக்கு உள்ள உறவு, வாடிவாசலிலிருந்து மாடுகள் வெளியே வருவதை மக்கள் வேடிக்கை பார்ப்பது என மக்களுடைய வாழ்க்கையுடன் ஒன்றுகலந்துள்ள தன்மையைப் பதிவு செய்திருக்கிறார்.
ஜல்லிக்கட்டு விழா நடப்பதற்கு முன்பு நோன்பு இருந்து வேம்பு, மாவிலை, கண்ணுப்பூ செடிகளையும் ஆவாரம் பூக்களையும் கட்டி வீட்டின் வாசலில் தொங்கவிட்டிருந்தது, வெற்றிபெற்ற போர் வீரா்களை பூமாலை சூடி வரவேற்ற சங்ககால மக்களின் வாழ்க்கையை நினைவுபடுத்தியதாகக் கூறுகிறார்.
2014-ல் ஒளிப்படத்துக்கான தெற்காசிய விருது, 2017-ல் லண்டன் மோனோவிஷன் அமைப்பு சார்பில் வீதி ஒளிப்படத்துக்கான விருது, நேஷனல் ஜியோகிராஃபிக் சார்பில் 2014-க்கான இந்தியாவின் சிறந்த தருணத்துக்கான சிறந்த ஒளிப்பட விருது போன்ற விருதுகளை முஸ்தபா பெற்றிருக்கிறார். ரகுராயின் ஒளிப்பட இதழில் இவருடைய படங்கள் பிரசுரமாகியுள்ளன. இந்தியா, மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நடந்த ஒளிப்படக் கண்காட்சியில் இவருடைய படங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
- நெல்லை மா. கண்ணன்,
தொடர்புக்கு: mkannanjournalist@gmail.com