Published : 31 Dec 2019 12:20 PM
Last Updated : 31 Dec 2019 12:20 PM

தமிழில் வந்தாச்சு பிறந்த நாள் பாட்டு!

என்.சுவாமிநாதன்

‘ஆராரோ ஆரிராரோ..’ எனத் தாலாட்டுப் பாட்டுப்பாடிக் குழந்தைகளை தூங்க வைக்கும் கலாச்சாரம் இந்தத் தலைமுறையில் தேய்ந்துவிட்டது. பாரம்பரியத்தை விட்டு இந்தத் தலைமுறையினர் வெகுதூரம் நகர்ந்துவரும் நிலையில், அவர்கள் தொலைத்துவிட்ட சுவாரசியங்களில் ஒன்று தாலாட்டு. இவர்களுக்கு மத்தியில் தன் குழந்தைக்குத் தமிழ் வழியே நவீன தாலாட்டுப் பாதை காட்டி வழி நடத்துகிறார் நெல்லையைச் சேர்ந்த ஆர்.ஜே. வெங்கட்ராமன்.

2015-ல் தன் திருமணத்தின்போது வெங்கட்ராமன் திருமண அழைப்பிதழையே சிடி வடிவத்தில் கொண்டுவந்து புதுமைசெய்தார். அதில் அவரே பாட்டெழுதி, நடிக்கவும் செய்து திருமணத்துக்கு அழைப்புவிடுத்தார். தன் குழந்தைக்கு வியன் எனப் பெயர்சூட்டியவர் அன்றைய நாளில் தாலாட்டுப் பாடல் சிடி ஒன்றையும் தன் பையனுக்காக வெளியிட்டார்.

இதில் வெங்கட்ராமன், அவரது மனைவி கஸ்தூரியுடன் சேர்ந்து நான்கு பாடல்களை எழுதியதோடு தம்பதிகளே பாடவும் செய்தனர். தொலைந்துபோன தாலாட்டுப் பாடல்களையும், தமிழர் மரபையும் மீட்டெடுக்கும் முயற்சியாக இப்படி அசத்தியவர்கள், அண்மையில் தன் மகனின் முதலாமாண்டு பிறந்த நாளைக் கொண்டாடினார்கள். அப்போது ’ஹேப்பி பர்த்டே டூ யூ’ என்னும் வாழ்த்துப் பாடலுக்கு மாற்றாக, தூயத் தமிழில் புதிய பாடலை ரிலீஸ்செய்தனர். இவர்களின் தாலாட்டுப் பாடல் இப்போது இவர்களது நண்பர்களின் வீடுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

நெல்லையில் ஆர்.ஜே.வாக இருக்கும் வெங்கட்ராமனை அவரது இல்லத்தில் சந்தித்தேன். ‘‘ தனியார் எஃப்.எம்.மில் ‘தாறுமாறு தர்பார்’ன்னு அன்றாடச் செய்திகள் அடிப்படையில் விவாத நிகழ்ச்சி பண்ணிட்டு இருக்கேன். அதனால் சமூகம் குறித்த புரிதல் எனக்கு உண்டு.

இதுபோக, ‘ஊரோடி’ன்னு பயண நிகழ்ச்சியும் ஒன்றை எனது ஆன்லைனுக்காக வீடியோவாகப் பண்றேன். இதுக்கெல்லாம் தொழில்முறையா சுத்தும்போதுதான் நம்ம பாரம்பரியம், கலாச்சாரமெல்லாம் கொஞ்சம்கொஞ்சமா தொலைந்துகிட்டு இருக்கு என்பதை உணர்ந்தேன்.

நெல்லை மாதிரியான மண்மணம் மாறாத ஊர்லேயே இன்னிக்கு தாலாட்டுப் பாடலை யூடியூப்பில் தேடுறாங்க. மழையே பெய்யாம விவசாயி வாடுறப்ப, அவன் வீட்டுப்பிள்ளை, பேரன் ‘ரைன் ரைன் கோ அவே’ன்னு ரைம்ஸ் பாடுறது முரணா இருந்துச்சு. அதனால்தான், நம்ம கலாச்சாரத்தோட ஒன்றிய தாலாட்டுப் பாடல்களுக்கு ரைம்ஸ் போட்டேன். அடுத்ததாக தூய தமிழில் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் வெளியிட்டோம். இது எல்லாமே நான் செஞ்சதுதான்” என்கிறார் வெங்கட்ராமன்.

மண் மணம், கலாச்சாரம், பாரம்பரியம் போன்ற விஷயங்களுக்கு எல்லாம் வெங்கட்ராமனுக்கு எது தூண்டுகோலாக இருந்தது? “பள்ளியில் படிக்கும்போது எல்லாரும் பிறந்தநாளுக்கு சாக்லெட் கொடுப்பாங்க. நான் அப்பவே பனை ஓலையில் பெட்டிசெஞ்சு, பழம் பொழிச்சதுங்குற கலாச்சார இனிப்பைக் கொடுத்தேன்.

இப்படி இயற்கை, பாரம்பரியம் சார்ந்த என்னோட ஆர்வம்தான் தாலாட்டுப் பாட்டு, பிறந்தநாள் பாட்டுன்னு ஆல்பம்போட வைக்குது. ஆவணப்படங்கள், குறும்படங்களும் இயக்கியிருக்கேன். எனது பையனின் அடுத்த பிறந்தநாளுக்குத் தமிழ் ரைம்ஸ் தொகுப்பு வெளியிடத் தயாராகிட்டு இருக்கோம்”என்கிறார் வெங்கட்ராமன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x