விடைபெறும் 2019: கெத்து காட்டிய சாதனையாளர்கள்!

விடைபெறும் 2019: கெத்து காட்டிய சாதனையாளர்கள்!
Updated on
2 min read

ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு துறையிலும் தடம் பதித்த சாதனை இளைஞர்களுக்குப் பஞ்சமிருக்காது. இந்த ஆண்டும் பல இளைஞர்கள் தங்கள் சாதனை மூலம் உச்சம் தொட்டிருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கச் சிலர்:

விண் தமிழச்சி

தேனியைச் சேர்ந்த உதய கீர்த்திகா ஜெர்மனி, போலந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள விண்வெளி ஆய்வுப் பயிற்சிக்குத் தேர்வாகியுள்ளார். அல்லிநகரம் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர் உதய கீர்த்திகா. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் மீதான ஈர்ப்பால் விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற லட்சியம் கொண்டார்.

பள்ளிப் படிப்பை முடித்த அவர் உக்ரைனில் நேஷனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் ஏர் கிராப்ட் பராமரிப்புப் படிப்பை 92.5 சதவீத மதிப்பெண்ணுடன் நிறைவு செய்தார். தற்போது அவர் போலந்து நாட்டின் அனலாக் விண்வெளிப் பயிற்சி மையத்தில் விண்வெளி வீரர்களுடன் சேர்ந்து பயிற்சி பெறவும் விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் தேர்வுசெய்யப்ட்டுள்ளார். இந்தியாவிலிருந்து இப்பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட ஒரே நபர் உதய கீர்த்திகா மட்டுமே.

சாதனை சதம்

19 வயதுக்குட்பட்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 154 பந்துகளில் 203 ரன்கள் அடித்து 16 வயதில் இரட்டைச் சதம் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார் யாஷஸ்வி ஜெஸ்வால். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த யாஷஸ்வி பானிபூரி விற்று கிரிக்கெட் கனவை நனவாக்கிக்கொண்டார். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த யாஷஸ்வி தற்போது 2020 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாட ராஜஸ்தான் ராயல் அணி சார்பில் ரூ. 2.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார் என்பதிலிருந்து அவருடைய சாதனையின் வீச்சை அறியலாம்.

நம்பிக்கை நாயகி

பருவநிலை மாற்றத்தின் நிகழ்காலக் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறார் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 16 வயது கிரெட்டா துன்பர்க். ஸ்வீடன் நாடாளுமன்ற வளாகத்தில் கிரெட்டா தொடங்கிய #FridayForFuture என்ற போராட்டம் தற்போது உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழலைக் கருத்தில்கொண்டு இவர் பல நாடுகளுக்குப் பாய்மரக் கப்பலில் பயணித்துவருகிறார். பிரபல ‘டைம்’ பத்திரிகை கிரெட்டா துன்பர்க்கை 2019-ம் ஆண்டின் சிறந்த நபராகத் தேர்வு செய்து அறிவித்துள்ளது.

தோல்வியிலிருந்து வெற்றி

டேனில் மெத்வதேவ் தன்னுடைய முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியிலேயே உலகின் கவனத்தை ஈர்த்தார். அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான ரபேல் நடாலுடன் மோதினார் மெத்வதேவ். இப்போட்டியில் ரபேலுக்கு இணையாக இரண்டு செட்களைக் கைப்பற்றியிருந்தார். வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசிச் சுற்றில் ரபேல் வென்றார்.

டேனில் பார்வையாளர்களின் மனங்களை வென்றார். இவ்விருவருக்குமான போட்டி மாரத்தான் போட்டியாக 5 மணிநேரம் நீடித்தது. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வரலாற்றில் நீண்ட நேரம் நடந்த போட்டியாக இப்போட்டி பதிவானது. மேலும் 15 ஆண்டுகள் கழித்து பீட்டர்ஸ்பெர்க் கோப்பை வென்ற வீரர் என்ற சாதனையையும் டேனில் மெத்வதேவ் படைத்தார். தற்போது உலகத்தரவரிசையில் 5-ம் நிலை வீரராக மெத்வதேவ் உள்ளார்.

அதிபுத்திசாலி அனுஷ்கா

மென்சா அறிவுத்திறன் போட்டியில் உலகின் அதிபுத்திசாலியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லண்டன் சிறுமி அனுஷ்கா தீக்சித் வெற்றிபெற்றார். அனுஷ்கா மென்சா அறிவுத்திறன் போட்டியில் கலந்துகொண்டு 40 நிமிடங்களில் அனைத்துத் தனிம அட்டவணையை மனப்பாடம் செய்து இந்தச் சாதனையைப் படைத்தார்.

இத்தேர்வில் 162 மதிப்பெண்களையும் பெற்றார். அறிவுத்திறன் போட்டிகளில் உலகின் கடுமையான போட்டியாகக் கருதப்படும் மென்சோ தேர்வில் வெற்றிபெற்றதன் மூலம் உலக அளவில் அதிபுத்திசாலி என்ற பெயரையும் அனுஷ்கா பெற்றார். தற்போது மென்சா உறுப்பினர் தகுதியையும் அவர் பெற்றுள்ளார்.

விக்ரமைக் கண்டுபிடித்த தமிழர்

சந்திரயான்-2 விண்கலனிலிருந்து பிரிந்து நிலவில் தரையிறங்கும்போது உடைந்த விக்ரம் லேண்டரை மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் என்ற இளைஞர் கண்டறிந்தார். தகவல் துண்டிக்கப்பட்டு செயல் இழந்த விக்ரம் லேண்டரை இஸ்ரோ, நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பே அதனுடைய உடைந்த பாகங்களைக் கணினி உதவியுடன் சண்முக சுப்பிரமணியன் கண்டறிந்தார். இதற்கான ஒளிப்பட ஆவணங்களை அவர் நாசாவுக்கு அனுப்பினார். சண்முக சுப்பிரமணியன் அனுப்பிய ஒளிப்பட அடிப்படையில் விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை நாசா உறுதி செய்தது.

சேவைக்கு அங்கீகாரம்

காமன்வெல்த் அமைப்பின் ஆசிய பிராந்தியத்துக்கான 2019-ம்ஆண்டின் சிறந்த இளைஞர் விருதைத் தமிழகத்தைச் சேர்ந்த பத்மநாபன் பெற்றுள்ளார். ‘நோ ஃபுட் வேஸ்ட்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை பத்மநாபன் நடத்திவருகிறார். கோவையைச் சேர்ந்த பத்மநாபன் விழாக்களில் மீதமாகும் உணவை உணவில்லாமல் பசியால் வாடுபவர்களுக்கு விநியோகித்து வருகிறார். உணவு கிடைக்காமல் மக்கள் வாடும் நிலையில் உணவுகளை வீணாக்கக் கூடாது என்பதை லட்சியமாகக் கடைப்பிடித்துவருகிறார் பத்மநாபன்.

இளம் நீதிபதி

ராஜஸ்தானில் நீதித்துறைத் தேர்வில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 21 வயதான மயங்க்பிரதாப் சிங் தேர்ச்சி பெற்றார். இதன்மூலம் நாட்டிலேயே மிக இளம் வயது நீதிபதி என்ற பெயரையும் பெற்றுள்ளார் இவர். நீதித்துறைப் பணிகளுக்கான தேர்வு எழுதும் வயதைக் கடந்த ஆண்டுதான் அம்மாநில அரசு 23-ல் இருந்து 21-ஆகக் குறைத்தது. சட்டப் படிப்பை முடித்த கையோடு, நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றும் முன்பே நேரடியாக நீதிபதியாகியுள்ளார் மயங்க்பிரதாப் சிங்.

முத்தான முதல் தங்கம்

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தினார் பி.வி. சிந்து. ஏற்கெனவே ஒலிம்பிக் முதல் பல்வேறு நிலைகளில் பதக்கங்களை சிந்து குவித்துவிட்டாலும், உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றதில்லை என்ற குறையைப் போக்கினார். உலகின் முதல்நிலை வீராங்கனையான நசோமி ஒகுஹாராரவை வீழ்த்தி பி.வி. சிந்து இந்த வெற்றியைப் பெற்றது தனிச் சிறப்பானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in