Published : 24 Dec 2019 12:46 PM
Last Updated : 24 Dec 2019 12:46 PM

உயிர் பெறும் காகிதங்கள்!

என். கௌரி

ஓரிகாமி என்ற புகழ்பெற்ற ஜப்பானியக் கலையில் அசத்திவருகிறார் சென்னை ஆவடியைச் சேர்ந்த இளைஞர் கே. ஜெகன் ராஜ். கடந்த 12 ஆண்டுகளாகப் பேரார்வத்துடன் இந்தக் காதிக மடிப்புக் கலையைப் பின்தொடர்ந்து வரும் இவர், இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காகிதக் கலை உருவங்கள், பொருட்களை உருவாக்கியிருக்கிறார்.

தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொருள் உருவாக்குநராகப் பணியாற்றிவரும் இவருக்கு வயது 29. ஓரிகாமிக் கலையை அனைவருக்கும், குறிப்பாக மாணவர்கள், இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார்.

“பள்ளியில் படிக்கும்போது, புரொஜெக்ட் பணிக்காகக் காகித பொம்மைகள் செய்வதற்கு என்னுடைய அப்பா உதவிசெய்வார். அவருக்குக் காகிதக் கலையில் இருந்த ஆர்வம் அப்படியே எனக்கும் தொற்றிக்கொண்டது. பள்ளி முடித்ததும் ஓரிகாமிக் கலையைப் பற்றித் தெரிந்துகொண்டேன். ஓரிகாமியில் புகழ்பெற்ற ‘பிரிசன் பிரேக்’ (Prison Break) என்ற வரிசையில் பல வகையான கொக்குகளைச் செய்து பழகினேன். காகிதத்தைக் கிழிக்காமல் மடித்து மட்டுமே செய்யக்கூடிய சவாலான கலை இந்த ஓரிகாமி" என்று சொல்கிறார் ஜெகன்.

பயிற்சியால் சாத்தியம்

ஓரிகாமியில் ஒரு காகிதக் கொக்கைச் செய்வதைப் பார்க்கும்போது எளிமையாகத் தெரிந்தாலும் அது எளிமையான கலை அல்ல. “என்னைப் பொறுத்தவரை, ஓரிகாமி ஒரு மனக் கணிதக் கலை. ஒரு காகிதக் கொக்குச் செய்வதற்குத் தலை, சிறகுகள், வால் உள்ளிட்ட ஐந்து புள்ளிகள் முக்கியம். சில படைப்புகளை ஐந்து நிமிடங்களில் செய்துவிடலாம். சில படைப்புகளைச் செய்வதற்கு 8 முதல் 10 மணி நேரம்கூட ஆகும்.

அத்துடன், காகிதத்தின் தன்மையைப் பொறுத்து படைப்புகளின் நுட்ப விவரணைகள் மாறுபடும். ஓரிகாமியில் ஒரு டிராகன் செய்வதாக இருந்தால், தலை கொம்புகள், கழுத்து, வால் என விவரணைகள் நுட்பமாக இருக்க வேண்டும். தொடர் பயிற்சியால் மட்டுமே இந்தக் கலையில் தேர்ச்சி பெற முடியும். உலகின் புகழ்பெற்ற ஓரிகாமிக் கலைஞர்கள் அகிரா யோஷிஸாவா, ராபர்ட் ஜெ. லாங்க் ஆகிய இருவரும் என் படைப்புளுக்கான முக்கியமான தூண்டுதலாக இருக்கிறார்கள்” என்கிறார் இவர்.

இவர்கள் இருவரின் ஐம்பதுக்கு மேற்பட்ட மாதிரிகளைப் பல முறை பயிற்சி செய்துபார்த்திருக்கிறார் இவர். இப்படிப் பல கலைஞர்களின் மாதிரிகளைப் பயிற்சிசெய்த பிறகே, தனக்கான தனித்துவமான ஓரிகாமி பாணியை உருவாக்கியிருக்கிறார் ஜெகன். அன்றாடம் குறைந்தது இரண்டு படைப்புகளையாவது செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

மன அமைதி தரும் கலை

மன அமைதி தருவதுதான் ஒரு கலையின் சிறப்பு. அந்த வகையில் ஓரிகாமிக் கலை தியானம் செய்வதற்கு இணையான மன அமைதியை உருவாக்குவதாகச் சொல்லும் ஜெகன், “மூளையின் செயல்பாடுகளைத் தூண்டுவது, கவனச் சிதறலைக் குறைப்பது, உணர்வுநிலையை மேம்படுத்துவது போன்றவை இந்தக் கலையின் சிறப்பம்சங்கள்” என்று சொல்கிறார்.

ஓரிகாமி மட்டுமல்லாம் கிரிகாமியிலும் இவர் பலவிதமான படைப்புகளை உருவாக்குகிறார். ஓரிகாமியில் காகிதத்தைக் கிழிக்காமல் படைப்புகளை உருவாக்குகிறோமோ, அதேபோல, கிரிகாமியில் காகிதங்களைக் கத்திரித்துப் படைப்புகளை உருவாக்கலாம்.

விலங்குகள், பறவைகள், ‘பாப்-அப்’ வாழ்த்து அட்டைகள், காகித அலங்காரப் பொருட்கள், காகித ஒளி அலங்காரப் பொருட்கள், காகிதப் பைகள் எனப் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காகிதக் கலை படைப்புகளை இவர் உருவாக்கியிருக்கிறார். வணிக நோக்கம் இல்லாமல் இந்தக் கலையை அனைவரிடமும் கொண்டுசெல்வதற்காக நம்பிக்கையுடன் தொடர் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார் ஜெகன்.

இவரது படைப்புகளைப் பார்க்க: www.facebook.com/jaganspaperworld/இளைஞர் களம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x