

நெல்லை மா. கண்ணன்
“எங்கள் வீட்டின் இருள் சூழ்ந்த அறையில் நான், தம்பி, அப்பா மூன்று பேரும் அமைதியாக உட்கார்ந்திருப்போம். இருவரும் சிறுவர்களாக இருந்ததால், அந்த அறைக்குள் இருக்கும் எந்தப் பொருளையும் எடுத்துவிடக் கூடாது என்பதற்காகக் கைகட்டி உட்காரச் சொல்வார்கள். கத்திரி எடுக்கிற சத்தம், ஃபிலிமை வெட்டுகிற சத்தம், தண்ணீரில் அலசுகிற சத்தம் ஆகியவற்றுடன் எங்களுடைய மூச்சு விடும் ஒசை மட்டுமே அந்த இருட்டான அறையில் கேட்கும்.
திடீரென்று மங்கலான சிவப்பு வெளிச்சம் அந்த அறை முழுவதும் பரவியது. கண்களை விரித்துப் பார்த்தோம். என்னுடைய தாத்தா கேமராவில் இருந்து ஃபிலிமை உருவிக் கழுவப்பட்ட நெகட்டிவைக் காண்பித்தார். முதன்முதலில் எங்களை நெகட்டிவில் பார்த்த அந்தத் தருணம், எங்களுக்குள் மாயாஜாலமாக உறைந்தது” என்று தனக்குள் நடந்த ரசவாதத்தை விவரிக்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த ஒளிப்படக் கலைஞர் ஆர். கணேசன். இவருடைய தாத்தா ‘Mamiya’ என்ற அரிய 120 பிலிம் கேமராவைப் பயன்படுத்தியவர்.
"கோயில் திருவிழாவில் ஒரு நிகழ்வைப் பார்க்கும்போது ஒளிப்படம் எடுக்கத் தோன்றும். ஆனால், அந்த இடத்தில் மிகக் குறைவான வெளிச்சம் மட்டுமே இருந்து, ஃபிளாஷ் பயன்படுத்த வேண்டிய தேவை இருந்தால், அந்தக் காட்சியை எடுக்க மாட்டேன்" என்கிறார் கணேசன். இயற்கையாக என்ன ஒளி இருக்கிறதோ, அதை மட்டுமே பயன்படுத்தி ஒளிப்படங்களைச் சிறைப்பிடிக்கிறார்.
தஞ்சாவூர் அருகே மெலட்டூர் கிராமத்தில் நரசிம்ம ஜெயந்தி அன்று ஆண்களே பெண் வேடமிட்டு ஆடுகிற பாகவத மேளா நாட்டிய நாடகம், கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா, நவீனத் தொழில்நுட்பம் வந்தாலும் பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் நடைபெறும் ஆவணி மாதக் குரங்கனி போன்ற காட்சிகளே தன்னை இயக்குவதாக இவர் கூறுகிறார்.
சென்னை ஒவியக் கல்லுாரியின் முன்னாள் மாணவரான இவர், நெல்லை காஞ்சனை திரைப்பட இயக்கம் மூலம் பெற்ற ஒளிப்படப் பயிற்சியும் உலக சினிமா அறிமுகமும் திரைத் துறையில் பயணத்தைத் தொடங்க அடித்தளமாக அமைந்ததாகக் கூறுகிறார்.
‘அவள் பெயர் தமிழரசி', ‘தாரை தப்பட்டை', ‘சவாரி' போன்ற படங்களில் உதவி ஒளிப்பதி வாளராகவும், ஆர்.ஆர். சீனிவாசனின் ‘அண்ணா நுாறு', ஓம்பிரகாஷின் ‘மணிமேகலை', அன்வரின் ‘யாதும்' உள்ளிட்ட ஆவணப்படங்களில் ஒளிப்பதிவாளராகவும் வேலை பார்த்திருக்கிறார்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: mkannanjournalist@gmail.com