Published : 17 Dec 2019 12:39 PM
Last Updated : 17 Dec 2019 12:39 PM

விசில் போடு 10: அப்பாக்களும் குத்துவிளக்குகளும்!

‘தோட்டா’ ஜெகன்

கல்யாணம் பண்ணுற வயசானாலும் சரி; கோயில் யானை சைஸானாலும் சரி, அப்பாக்களைப் பொறுத்தவரைக்கும் மகள்கள் எப்பவும் தொட்டில்ல விளையாடுற ‘லிட்டில் பிரின்சஸ்’. ரெட்டை ஜடைக்கு ரிப்பன் பொருந்துற மாதிரிதான் பெத்த மகளுக்கு எந்த அப்பாவும் பொருந்திப்போவாங்க. மழைக்கும் மண்ணுக்கும் இருக்கிற இணைப்பைப் போல அழகானது அப்பாவுக்கும் பொண்ணுக்குமான பாசப் பிணைப்பு.

தென்மேற்குப் பருவக்காற்றைவிட இதமானது அப்பாக்களும் இந்தத் தங்க மீன்களும் அடிக்கிற கூத்து. அயிரை மீனைப் புடிச்ச கொக்கு சும்மா விடுமா, அண்டங்காக்காவோட கழுத்து மச்சம் கண்ணுல படுமான்னு நாம சும்மா போக நினைச்சாலும், இந்தக் குட்டி தேவதைங்க பண்ற ஓவர் அலும்பையெல்லாம் கண்டுக்காம கடக்கிறது ரொம்ப கஷ்டம்.

சல்லடையில் எல்லடை

இந்தக் குட்டி இளவரசிகள் வசிக்கும் வீடுகளில் சேவல்கள்கூடக் காலை நேரக் கூவல்களை கொஞ்சம் நேரம் தள்ளிவைக்கும். சுட்டெரிக்கும் கதிரவன் காலை டிபனை முடிச்சிட்டு, வேலை செய்யறவங்களுக்கு வேர்வையைக் கொடுக்கிற நேரம்தான் இவங்க போர்வையவே விலக்குவங்க.

பெத்த அம்மா பத்து தடவை கண்டபடி மந்திரிச்சாதான் லிட்டில் பிரின்சஸுங்க கண்ணையே திறப்பாங்க. காலையில் எழுந்தவுடனே கண்ணாடி, பல்லு விளக்குறப்ப கண்ணாடி, குளிக்கறதுக்கு முன்னால கண்ணாடி, குளிச்சவுடனே கண்ணாடின்னு இவங்க சாலையில் ஸ்கூட்டி ஓட்டுற நேரம் தவிர மீதி எப்பவுமே கண்ணாடி பார்ப்பாங்க.

இவங்க குளிச்சுட்டு வரதுக்குள்ள, நாம போய் உலகத்துல இருக்கிற மொத்த தீவிரவாதிகளையும் காலி பண்ணிட்டு வந்திடலாம். பொண்ணுங்க குளிக்க உள்ள போனா, குளிக்கிறாங்களா இல்ல ஓட்டையே இல்லாத சல்லடையில எல்லடை செய்ய மாவு சலிக்கிறாங்களான்னு வீட்ல இருக்கிறவங்களுக்குச் சந்தேகமே வந்திடும். செல்லமா வளரலாம்; ஆனா ரொம்ப மெல்லமா வளரக் கூடாது இல்லையா?

இதுதான் லெமன் சாதம்

சமையல் தெரியாம வளர்ந்திருந்தகூடப் பரவாயில்லை, சமையலறை எங்க இருக்குன்னே தெரியாம வளர்ந்தவங்கதான் குட்டி இளவரசிங்க. வாரம் ஜிம்முக்குப் போன பசங்க, முஷ்டியை மடக்கிக் கதவை உடைக்கலாமா, காரைத் தூக்கலாமான்னு விடுற பில்டப்களைவிடக் கொடுமையானது, ஒரு மணி நேரம் யூடியூப்ல சமையல் செய்முறையைப் பார்த்துட்டு, சமையல் செய்யறேன்னு அடுப்பறைல பொண்ணுங்க பண்ணுற அலப்பறை.

இண்டக்‌ஷன் அடுப்பைப் பத்தவைக்க பொண்ணுங்க லைட்டர் தேடுறதைப் பார்க்கிறப்ப அம்மாக்களுக்கு அடுப்புல விறகு எறியற மாதிரி கோபம் கொப்பளிக்கும்.

சமைக்கிறப்ப இவங்க உருட்டுற பாத்திரத்தோட சத்தத்தைக் கேட்டா, சரித்திரத்துல முடிஞ்சு போன பல யுத்தங்கள் நினைவுக்கு வரும். அந்த நளனுக்கே ‘டஃப்’ தரேன்னு சாதத்துக்குப் பக்கத்துல லெமனை வச்சு லெமன் சாதம்ன்னு சொல்வாங்க. மிளகு ரசத்துல முந்திரியைப் போட்டு கொல்வாங்க. மஞ்சப்பொடி மொளகாப்பொடியை மறந்துட்டு இட்லிப் பொடில குருமா வைப்பாங்க.

பலமா காரத்தைப் போட்டு இவங்க செய்யற பலகாரத்தைச் சாப்பிடுறதுக்கு முன்னால வயிறு எரியறதை அணைக்க தீயணைப்புத் துறைக்குச் சொல்லிவிடணும். காலேஜ் படிக்கிற பொண்ணுங்க முகர்ந்து பார்த்துக் கடலெண்ணெய் எது நல்லெண்ணெய் எதுன்னு கண்டுபிடிச்சுட்டா தரையிலகூடத் தாமரை மலர்ந்துவிடும், காவிரியில் கூடத் தண்ணீர் தொடர்ந்து வந்துடும்.

கடலளவு சுதந்திரம்

லிட்டில் பிரின்சஸ்களைக் கண்டுபிடிப்பது ரொம்ப ஈஸி. ஃபேஸ்புக் ட்விட்டர்ல ஓவியா போட்டோவை டிபியா வச்சிருப்பாங்க. ‘நான் திமிர் பிடித்தவள் அல்ல, திமிருக்கே பிடித்தவள்’, ‘நான் ஊருக்குள் ஒருத்தி இல்ல, ஊருக்கே ஒருத்தி’ன்னு படிக்கிறவங்க கண்ணுல பத்தாயிரம் வாலா பட்டாசு வெடிக்கிற மாதிரி ‘பயோ’ வச்சிருப்பாங்க.

செல்போனை நோண்டுற நேரத்துலகூட டி.வி.யைப் போடுறது, அப்பார்ட்மெண்ட் குட்டீஸ்களைக் கூட்டி வந்து ரவுடி பேபின்னு பாட்டுக்கு ஆடி சுட்டித்தனம் பண்றது, ஸ்கூல் காலேஜ் விட்டு வந்தா கத்திக்கிட்டே வீட்ல நுழையறது, கூடப்பொறந்த அண்ணன், தம்பி சட்டை டவுசரைப் போட்டுக்கிட்டு வீடு முழுக்க அலையுறதுன்னு சேட்டை செய்யறதுல நதியா காலத்துல இருந்து நஸ்ரியா காலம்வரைக்கும் இவங்க ஒரே மாதிரிதான்.

அம்மா துணி துவைக்க சொன்னா, துணியே நனையாம துணிய துவைப்பாங்க, தண்ணியே படாம தாவணியை வெளுப்பாங்க. பாத்திரத்தை விளக்கச் சொன்னா அதுக்கு பேசியல் பண்ணிக்கிட்டு இருப்பாங்க, வீட்டைக் கூட்டச் சொன்னா, விளக்கமாறால தரையைக் கூசிக்கிட்டு இருப்பாங்க.

அம்மா திட்டுனா, ‘அப்பா வரட்டும் சொல்றேன்’னு அம்மாவையே மிரட்டுவாங்க, அப்பா வந்தவுடனே அத்தனையையும் போட்டுக்கொடுத்துவிட்டு ஆதரவு திரட்டுவாங்க. அப்பா பேரைச் சொல்லிக் கூப்பிடுறது, ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி சாப்பிடுறதுன்னு இந்த லிட்டில் பிரின்சஸுக்குக் கிடைச்சதெல்லாம் கடலளவு சுதந்திரம்.

தவழும் குழந்தைகள்

ஞாயிறு மதியம் முகத்துல பவுடரைக் கொட்டி, மூஞ்சில பட்டி தட்டி, தலையில சிண்டு வச்சு, தாடையில் பொட்டு வச்சு டிக்டாக் வீடியோ எடுக்கிறதெல்லாம், போபர்ஸ் பீரங்கியைக் குழாய்ல சைக்கிள் அகர்பத்தி கொளுத்துற மாதிரி. எலிக்கு இலந்தவடை வச்சாகூடப் பரவாயில்லை, ஆனா, புலிக்கு உளுந்துவடை வைக்க செல்லமா வளர்ந்த பொண்ணுங்களால தான் முடியும். இடக்கை விரல் வீங்கியிருக்கேன்னு உலைக்குப் பதிலா உரலைக் குத்துற கதைதான் இவங்களுக்கு டூ வீலர் வாங்கித்தரது.

ஸ்கூட்டி ஓட்டுறப்ப, கால்கள்தான் பிரேக்கு, வாய்தான் ஹாரன்னு இவங்க ஏரியாவுக்குள்ள வண்டி ஒட்டுறப்ப, வாக்கிங் போறவங்கக்கூட ஹெல்மெட் போட்டுக்கணும். பொங்கலுக்குக் கோலம் போடுறேன்னு நைட்டிய ஏத்தி கட்டி, ரோடு முழுக்க பாத்தி கட்டி இவங்க போடுற கோலத்துல இருக்கிற பானையைப் பார்த்தா, டெலிவரி டேட் குறிச்ச புள்ளத்தாச்சி யானையாட்டம் இருக்கும்.

மகன் பேனா கேட்டாக்கூட லேட்டாதான் வரும். பொண்ணு கேட்டது ப்ளேனா இருந்தாலும் உடனே வரும். பொண்ணுங்க டூர் போக அப்பாகிட்ட பர்மிஷன் வாங்கிறது என்னவோ பார்க்கிங்ல நிக்கிற காரை எடுக்கிற மாதிரி ரொம்ப ஈஸி. ஆனா, பையன் டூர் போக பெர்மிஷன் வாங்கறதுக்குள்ள பக்கத்து நாட்டோட போருக்குப் போக பர்மிஷன் வாங்குறது மாதிரி அவ்ளோ கஷ்டம். ‘ஃபாதர்ஸ் டே’வுக்குப் பையன் விஷ் பண்ணினா, வேலைய பாருடான்னு கண்டபடி திட்டுற அப்பாக்கள்தான், அதுவே மகள் விஷ் பண்ணினா, அதைப் பெருமையா அன்னைக்குப் பூரா பேசிக்கிட்டே இருப்பாங்க.

அஞ்சடிக்கு மேல வளர்ந்தாலும் அப்பாக்களுக்கு மகள்கள் இன்னமும் தங்களின் மடில தவழ்றாங்கன்னு நினைப்பு. அதை வச்சு தண்ணியே இல்லாத ஆத்துலகூடப் படகோட்டுறதுதான் பொண்ணுங்களோட சிறப்பு. இப்படித்தான் ஓடுது குட்டி இளவரசிங்க பிழைப்பு. இது எப்பவுமே மாறாது, ஏன்னா இந்த லிட்டில் பிரின்சஸுக்கு அப்பாக்கள்தான் எப்பவுமே சூப்பர்மேன், என்னிக்குமே ஸ்பைடர்மேன். இந்த அப்பாக்களுக்கும் தங்கள் மகள்கள்தான், தங்களோட அம்மா, மனைவியோட வொண்டர்வுமன்.

(சத்தம் கேட்கும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு:
thinkthoatta@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x