உங்களுக்கென ஓர் இணைய வானொலி!

உங்களுக்கென ஓர் இணைய வானொலி!
Updated on
2 min read

அருண்குமார் நரசிம்மன்

‘எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்...' என்ற பாடல் வரிகளைப் போல, மனிதன் எதிரொலி கேட்டு வானொலி படைத்த காலம் முதலே மக்களிடையே சிற்றலை வானொலிகளும் மத்தியலை வானொலிகளும் பிரபலமாக இருந்தன. சிற்றலை, மத்தியலை வானொலி மூலம் நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப ஒலிபரப்பிகளும் (Transmitter) அவற்றை இயக்க அதிக மின்சாரமும் தேவைப்பட்டது. எனவே, வானொலி நிலையங்கள் நடத்த அதிகப் பணம் தேவைப்பட்டது.

இணைய வானொலிகள்

இன்றோ மத்தியலை, சிற்றலை வானொலிகளுக்கு மாற்றாக இணைய வானொலிகள் பிரம்மாண்டமாக வளர்ந்து வருகின்றன. ஒலிப்பதிவுக் கூடம், ஒலிப்பதிவு செய்த நிகழ்ச்சியை ஒலிபரப்பப் பெரிய ஒலிபரப்பி (Transmitter) என்று இருந்த நிலை, தற்போது மாறி வருகிறது. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் வீட்டின் ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டே ஒலிபரப்பி இல்லாமலேயே இணையம் வழியாக உலகின் எந்த இடத்திலும் நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப முடியும், அதுவும் குறைந்த செலவில்.

இணைய வானொலிகளில் இரண்டு வகை உண்டு. தங்கள் நிகழ்ச்சிகளை இணையத்தில் மட்டுமே ஒலிபரப்பும் வானொலிகள். இணையத்திலும் தங்கள் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் பாரம்பரிய வானொலிகள். இந்த இரண்டு வகையான ஒலிபரப்புகளும் தற்போது அதிகம் பிரபலமாகிவருகின்றன.

ஆயிரம் ரூபாய் போதும்

நூற்றுக்கணக்கான இணைய வானொலிகள், தங்கள் நிகழ்ச்சிகளைத் தற்போது ஒலிபரப்பி வருகின்றன. சிங்கப்பூரைச் சேர்ந்த ‘ஒலி’பண்பலை வானொலி, இந்தியாவின் அகில இந்திய வானொலி போன்ற பல வானொலி நிலையங்கள் இணையத்தின் வாயிலாகவும் செயலி மூலமாகவும் மக்களைச் சென்றடைகின்றன.

அமெரிக்கா போன்ற நாடுகளில் இணைய வானொலி நடத்தக் கணினிக் கட்டமைப்பை (சர்வர்) குறைந்த செலவில் வழங்க நிறைய நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவில் இணையத்தின் வேகமும் தரமும் மேலும் அதிகரித்தால் இன்னும் பல இணைய வானொலிகள் தொடங்கவும் கேட்கவும் ஏதுவாக இருக்கும்.

இணைய வானொலி தொடங்குவது எளிமையானது. வானொலியின் பெயரைத் தேர்ந்தெடுத்தபிறகு இணையதளத்தில் பதிவு (domain name registration) செய்ய வேண்டும். அதன் பிறகு இணையதளத்தை வடிவமைக்க வேண்டும்.

வானொலி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதற்கான கருவிகள் (Behringer Podcast Studio போன்றவை), மேசை கணினி, மடிகணினி இணையத்தில் மலிவாகக் கிடைக்கும். இவற்றைக் கொண்டு யார் வேண்டுமானாலும் இணைய வானொலியைத் தொடங்க முடியும். இணைய வானொலி ஒளிபரப்பப் பயன்படும் ‘shoutcast’ சர்வர்க்கு மாதத்துக்கு வெறும் 1,000 ரூபாய்தான் செலவாகும்.

தேவை அதிகரிக்கும்

இணைய வானொலிகள் இந்தியாவில் இன்னும் வளராமல் இருக்கலாம். ஆனால், அமெரிக்காவில் நிறைய இணைய வானொலி நிலையங்கள் வந்துவிட்டன. இணைய வானொலிகளில் ஒலிபரப்பப்படும் விளம்பரங்கள் மூலம் கணிசமான வருவாயும் கிடைத்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இணைய வானொலிகள் குறைந்த செலவில் தொடங்கினாலும் அதில் நேயர்களைக் கவரும் சினிமா பாடல்களைப் பதிவேற்ற, அந்தப் பாடலுக்கு உரிமம் வைத்திருக்கும் நிறுவனத்திடம் அதற்குரிய தொகையைச் செலுத்த வேண்டும். நம் இணைய வானொலி பிரபலமடைந்து, அதன் பிறகே நாம் போட்ட முதலீட்டைத் திரும்பப் பெற முடியும். அந்த வகையில் ஆகும் செலவை ஈடுகட்டும் அளவுக்கு இணைய வானொலிகளில் விளம்பரங்கள் வருமா என்றால் அது சந்தேகமே.

இணைய வானொலிகளைக் கேட்டு மகிழ நிறையச் செயலிகள் உள்ளன. உதாரணத்துக்கு ‘Tunein’ என்ற செயலி மூலம் இணையத்தில் ஒலிபரப்பப்படும் இணைய வானொலி மட்டுமல்லாது இணையத்தில் ஒலிபரப்பப்படும் பாரம்பரிய வானொலி அலைவரிசைகளையும் கேட்கும் வசதி உண்டு. புதிய தொழில்நுட்பங்களும் இணையத்தின் தரமும் வேகமாக அதிகரித்துவருவதால் வருங்காலத்தில் இந்தியாவில் இணைய வானொலிகளின் எண்ணிக்கை மட்டுமல்ல தேவையும் அதிகரிக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in