

இத்தாலியைச் சேர்ந்த மேக்கப் கலைஞர் லூக்கா லூச்சே. இவர் தனது கையில் மாயத் தன்மையான 3டி ஓவியங்களை வரைந்து அனைவரையும் அசத்திவருகிறார். இவர் சாதாரண காஸ்மெடிக் பொருள்களைக் கொண்டே ஓவியங்களை வரைந்துவிடுகிறார். வெறும் ஐப்ரோ பென்சில், ஐ ஷேடோ ஆகியவற்றைப் பயன்படுத்தி கண்களை ஏமாற்றும் மாய ஓவியத்தை வரைகிறார். சுமார் 15 வருடங்களாக இவர் இத்தகைய ஓவியங்களை வரைந்துவருகிறார்.
37 வயதான இந்தக் கலைஞர் தனது பள்ளிப் பருவத்திலிருந்தே இதைப் போன்ற 3டி ஓவியங்களை வரைய ஆரம்பித்துவிட்டாராம். ஐப்ரோ பென்சிலால் ஓவியத்தை அடிப்படையான கோடுகளைக் கொண்டு வரைகிறார். பின்னர் ஐ ஷேடோவைப் பயன்படுத்தி அதில் 3 டி எபெக்டைக் கொடுக்கிறார். ஓவியத்தைச் சுமார் 30 நிமிடங்களில் முடித்துவிடுகிறார்.
பின்னர் தேவையான நகாசு வேலைகளை முடித்து ஒரு மணி நேரத்துக்குள் ஓவியத்தை முழுவதுமாக வரைந்து முடித்துவிடுகிறார். கையில் நடுவே ஓட்டை போட்டது போல ஒரு ஓவியம் வரைந்திருக்கிறார். பார்ப்பதற்கு அப்படியே கையில் ஓட்டை உள்ளது போலவே இருக்கிறது. இவருடைய அசத்தலான மாய ஓவியங்கள் பார்ப்போரைக் கவர்வதாக உள்ளன.