

நெல்லை மா. கண்ணன்
அன்றாட வேலைகள் ஏற்படுத்தும் இறுக்கத்தைக் கொஞ்சம் கரைத்துக் கொள்ளவும், மனதை லேசாக்கிக் கொள்ளவும் கடற்கரைக்குவரும் மனிதர்களின் உறைந்த நிலையை ஒளிப்படத்தில் படியவைக்கிறார் நெல்சன் விஜி.
தினசரி மாலை வேளை மஞ்சள் வெயிலில் புதுச்சேரி கடற்கரையை ஓட்டியுள்ள கடையில் சுடச்சுட ஒரு தேநீரை அருந்திவிட்டு, ஒளிப்படம் எடுக்கப்புறப்படுகிறார்.
மக்களின் உணர்வுகளை முகத்துக்கு நேராகப் போய் படம் பிடித்தால் ஒளிப்படக்கருவியால் அவர்களுடைய கவனம் சிதறும் என்பதால், முகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அவர்களுடைய உடல்மொழியையும் அவர்களுடைய குழந்தைத்தனமான செயல்களையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
சூரியன், பூக்கள், பறவைகள், வண்ணத்துப்பூச்சி, இயற்கைக்காட்சிகள் இப்படி எடுத்துக்கொண்டிருந்த அவரிடம் 'பாண்டி ஒளிப்பட விழா' பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
புதுச்சேரியில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தச் சர்வதேச விழாவில் இந்திய, வெளிநாட்டு ஒளிப்படக் கலைஞர்களின் ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்படும். அந்த விழாவில் சந்தித்த பிரெஞ்ச் ஔிப்படக் கலைஞர் யானிக், நெல்சன் விஜய்யிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.
அதன் பிறகே சமூகம் சார்ந்து எடுக்கும் படங்கள் மீது அவருக்கு ஆர்வம் வந்திருக்கிறது. வீட்டுக்கு பக்கத்தில் இருந்த மீனவர்களைப் பற்றி நான்கு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து பதிவுசெய்தார். அந்த ஒளிப்படங்கள் 2016 பாண்டி ஒளிப்பட விழாவில் இடம்பெற்றன.
புயல், மின்னல், சூறாவளி போன்றவையெல்லாம் இல்லாமல் மீனவர்களின் வாழ்க்கையை ஆவணப் படுத்த முடியாது. இயற்கை சீற்றத்துடன் சேர்ந்ததுதான் அவர்களுடைய வாழ்க்கை. கடல் சீற்றத்திலும், மின்னல் வெட்டும்போதும்கூட மீனவர்கள் தங்களுடைய வேலைகளைத் தொடர்ந்துசெய்வது போன்ற காட்சிகள் இந்த அம்சத்தை சிறப்பாக வெளிப்படுத்துபவை.
இந்த ஒளிப்படத் தொகுப்பு ஆசிய அளவில் நடைபெறும் கம்போடியா நாட்டின் அங்கோர் (Angkor) போட்டோ திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கட்டுரையாளர், தொடர்புக்கு: mkannanjournalist@gmail.comபேசும் படம்