Published : 03 Dec 2019 01:16 PM
Last Updated : 03 Dec 2019 01:16 PM

விடைபெறும் 2019: இளைஞர்களின் ஃபேஷன் அலப்பறைகள்!

மிது கார்த்தி

ஒவ்வோர் ஆண்டும் ஃபேஷன் என்னும் பெயரில் இளைஞர்கள், யுவதிகள் புதிய டிரெண்ட்டை ஏற்படுத்துவது வாடிக்கை. இந்த 2019-ம் ஆண்டிலும் அப்படியான ஃபேஷன்களை இளைஞர்கள் ஆராதித்து ஆரத் தழுவியிருக்கிறார்கள். அவற்றில் சில ஃபேஷன்களைப் பார்ப்போம்:

ஸ்டைலான தோடு

இது பெண்களைக் கவர்ந்த ஸ்டைல். இந்தியாவில் இயற்கையாகவே ஆபரணங்கள் மீது பெண்களுக்குக் கொள்ளைப் பிரியம். இந்த ஆண்டும் அது எதிரொலித்தது. குறிப்பாகத் தோடுகளில் விதவிதமான ஸ்டைகளில் அணிய இளம் பெண்கள் விரும்புவார்கள். அந்த வகையில் ‘ஸ்டேட்மென்ட் இயரிங்ஸ்’ இந்த ஆண்டு இளம் பெண்களைக் கவர்ந்தது. இந்தத் தோட்டை மிகச் சுலபமாக கழற்றி அணிய முடியும் என்பது இதில் உள்ள சிறப்பு. அதன் காரணமாகவே இந்தத் தோடுகளுக்கு மவுசு கூடியதாம்.

திரும்பிய பாரம்பரியம்

ஒவ்வொரு தலைமுறை இடைவெளியிலும் ஏற்கெனவே இருந்த பழைய விஷயங்கள் ‘லைம் லைட்டு’க்கு வருவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு இளம் பெண்களின் விருப்ப ஆடைகளின் பட்டியலில் சில்க் டிரஸ்கள் இடம்பிடித்தன. பாட்டி, அம்மாக்கள் காலத்தில் பிரபலமாக இருந்த சில்க் துணி வகைகளில் விருப்பம்போல அணிந்து அழகு பார்த்துக்கொண்டார்கள் இளம் பெண்கள்.

இறகே...

துணியில் எங்கேயாவது மாட்டிக்கொண்டு நூல் தொங்கினாலே நமக்குப் பிடிக்காது. ஆனால், நூல் நூலாகத் தொங்கிக்கொண்டிருக்கும் உடை, இந்த ஆண்டு இளம் பெண்களின் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டது. அதற்கு ‘இறகு’ எனப் பெயரிட்டு விதவிதமாக அணிந்து தள்ளினார்கள் பெண்கள். துணியின் ஓரிடத்தில் கொத்து கொத்தாக நூல்கள் போலத் தொங்குவதுதான் இந்தத் துணியின் ஸ்டைல். எந்த வண்ணத்தில் துணி எடுக்கிறோமோ அந்தத்த வண்ணங்களில் நூல்கள் இறகுகளாகத் தொங்குவது இதில் சிறப்பு.

தொளதொள துணி

1980-களில் தொளதொளவென அணிந்துவந்து பெல்ஸ் ஸ்டைலை உல்டாவாக்கி வந்தது பலாசோ. அடிப்பாகத்தில் தொளதொளவென துணி தொங்குவதுதான் இதன்
சிறப்பு. இந்த ஆண்டு இளம் பெண்கள் இந்த ஸ்டைலுக்கு அமோகமாக ஆதரவு கொடுத்தார்கள். இந்த ஸ்டைல் துணிகளை வாங்கிக் குவித்தர்கள்.

கீரிப்புள்ளை தலை

இளம் பெண்கள் துணிகளில் விதவிதமாக அணிய ஆசைப்பட்டார்கள் என்றால், இளைஞர்கள் புதுவிதமாக சிகை அலங்காரம் செய்துகொள்ள விரும்பினார்கள். ‘போம்படூர்’ என்ற சிகை அலங்காரம் இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இரண்டு பக்கமும் சிறியதாக முடியை வெட்டிக்கொண்டு, நடுவே அடர்த்தியாக முடியை வைத்துக்கொள்ளும் ஸ்டைல் இது.

இதில் இன்னும் ஒரு படி மேலே போய் ஒரு பக்கம் மட்டும் முடியை மழித்துவிட்டு மற்ற இடங்களில் கொத்தாக இருப்பதுபோலவும் இளைஞர்கள் சிகை அலங்காரம் செய்துகொண்டார்கள். இதையெல்லாம் 90-களில் ‘ஜெய்ஹிந்த்’ படத்தில் செந்தில் வைத்த கீரிப்புள்ளை ஸ்டைலிலேயே பார்த்துவிட்டோம் என்று நீங்கள் நினைத்தால், அதற்கு கம்பெனி பொறுப்பு அல்ல.

ஸ்டைல் ஜீன்ஸ்

ஆண்டுகளின் தேசிய உடை என்று சொல்லும் அளவுக்கு ஜீன்ஸ் பேண்டுகள் எப்போதுமே ஆண்களின் விருப்பப் பட்டியலில் இருக்கும். இந்த ஆண்டும் வழக்கம்போல ஜூன்ஸ் ஆடைகளுக்கே ஆண்கள் முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஆனால், அதிலும் கொஞ்சம் வெரைட்டி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் இளைஞர்கள். ஆமாம், ஜீன்ஸ் பேண்டிலேயே ஸ்டிரைப் ஜீன்ஸ்களை இந்த ஆண்டு விரும்பி அணிந்தார்கள் இளைஞர்கள்.

கண்ணைக் காக்க

கூலிங் கிளாஸ் சகிதம் இருப்பதை ஆண்கள், பெண்கள் எப்போதுமே விரும்புவார்கள். வழக்கமாக கூலிங் கிளாஸ்கள் அடர் காபி வண்ணத்தில் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு வழக்கமான கூலிங் கிளாஸ்களைவிட சிவப்பு வண்ண சன்கிளாஸ்கள் இளைஞர்கள் யுவதிகளை வசியப்படுத்திவிட்டன.

இந்த ஆண்டு மற்ற கூலிங்கிளாஸ்களைவிட சிவப்பு சன்கிளாஸ்களைத்தான் அதிகம் வாங்கி அணிந்திருக்கிறார்கள். ஸ்டைலுக்காக மட்டுமல்லாமல் கண்களின் நலனுக்காகவும் இளைஞர்கள் இதை பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதுதான் ஹைலைட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x