Published : 03 Dec 2019 12:55 pm

Updated : 03 Dec 2019 12:55 pm

 

Published : 03 Dec 2019 12:55 PM
Last Updated : 03 Dec 2019 12:55 PM

விசில் போடு 08 - அம்மாக்கள்: தாடி வைக்காத டி.ராஜேந்தர்கள்!

put-whistle

‘தோட்டா’ ஜெகன்

அம்மா. கடவுளோட கையே தூரிகையா கிடைச்சாலும் வரைய முடியா ஓவியம். கம்பரோட மூளையே கடனா கிடைச்சாலும் எழுத முடியாத காவியம். நாம திரைக்கடல் ஓடமாலே நம்மளை தேடிவந்த திரவியம். குளிரும் வெளியிலும் ஒரு சேர அடிக்கும் துருவம், போலீஸ் பாதி புத்தன் மீதி கலந்து செய்த உருவம். அன்பு மிகுதியால் அம்மாக்கள் செய்யுற ‘டார்ச்சர்’கள் எல்லாம், அரை நொடி வலித்து அப்பவே சிரித்து சரியாகும் ‘ப்ராக்ச்சர்’கள்.

பள்ளிக்கூட காலத்துல இருந்தே ஆரம்பிச்சுடுது நமக்கும் அம்மாவுக்குமான பானிபட் யுத்தம். சாயந்திரம் ஏழு மணிக்கு தெருவே விளையாடிக்கிட்டு இருக்கும், நாம மட்டும் தலைல கொட்டு வாங்கிக்கிட்டு திருக்குறள் படிச்சுக்கிட்டு இருப்போம். ஒரு வழியா விளையாட விட்டாலும், 'வித்யா பொதரு பக்கம் போகாத, திவ்யா செவுரு பக்கம் போகாத'ன்னு பின்னாடியே பேனர் தூக்கிட்டும் வருவாங்க.

பட்டாசு வாங்கித்தர நாம பாடாய்படுத்துன்னா, பட்டாசை வாங்கி தந்துவிட்டு நம்மளை பாடாய்படுத்துவங்க. மத்தாப்பை எப்படி புடிக்கணும், புஸ்வானத்தை எப்படி கொளுத்தணும்னு மூச்சே விடாம முன்னூறு பக்கத்துக்கு பேச்சு மட்டும் வரும். நமக்கே நாம வெடி வைக்க வீதிக்கு வந்தோமா, இல்ல ராக்கெட் ஏறி விண்வெளிக்கு போறோமான்னு தேகம் முழுக்க சந்தேகம் பாய்ஞ்சிடும்.

தியரி... என்குயரி..

பள்ளிக்கூட ஆண்டுவிழாவுக்கு, பையன் நாடகத்துல நடிக்கிறான்னு ஊரேயே கூட்டிக்கிட்டு பக்கெட் நிறையா முறுக்கு சுட்டு கொண்டுவரவும், காலேஜ் டூர் போறப்ப நம்ம தோழிகளுக்கு சேர்த்து புளிசோறு கட்டிதரவும் நம்ம அம்மாக்களால்தான் முடியும். நமக்கு நாற்பது ஃப்ரெண்ட்ஸ் இருப்பாங்க, அதுல நாலு பேர்தான் நல்ல பேரு வாங்கி நம்ம அம்மாக்கிட்ட தப்பிப்பாங்க.

ஏன்னா அவங்கதான் நாம செஞ்சதை ஒன்னுவிடாம அப்படியே அம்மாகிட்ட ஒப்பிப்பாங்க. அம்மாக்களோட விசாரணை ‘தியரி’க்கு முன்னால சிபிஐயோட ‘என்குயரி’யெல்லாம் தோத்திடும். கழுவுற மாதிரி பாத்திரத்தை உருட்டிக்கிட்டே பொண்ணுங்க ஃப்ரெண்ட்ஸ்கிட்ட இருந்த மேட்டர திரட்டுவாங்க. இருடா காபி போடு றேன்னு, டம்ளரை ஆத்திக்கிட்டே பசங்க ஃப்ரெண்ட்ஸ் கிட்ட இருந்த விஷயத்தை தேத்துவாங்க.

நம்ம ஜிகிரி தோஸ்துங்களிடமிருந்து விஷயத்தை கறக்கறதுல டபுள் டிகிரி முடிச்சவங்கதான் அம்மா. பொண்ணு போன்ல சிரிச்சு பேசுனாலோ, பசங்க போன்ல தவிச்சு பேசுனாலோ அம்மாக்கள் மூளைல அலாரம் அடிச்சிடும். நாமளே ரெண்டு நாள் பேசாம இருந்தா அவங்களுக்கு தலையே வெடிச்சுடும். ஆக்டிங், எடிட்டிங், ரைட்டிங், லைட்டிங், ஃபைட்டிங்னு எல்லாத்திலும் காலை விட்டு படமெடுப்பாரு டி.ராஜேந்தர். அம்மாக்கள்கூட தாடி வைக்காத டி.ராஜேந்தர்தான்.

சயின்டிஸ்ட்ல இருந்து சைக்காலஜிஸ்ட்வரை அவங்களுக்கு தெரியாத வேலையே இல்லை. ‘மண்டைல முடியா வளர்த்திருக்கான்? மாடு ஒதுங்குற புதரு மாதிரி முள்ளு செடியா வளர்த்து வச்சிருக் கான். இவன்கூட இனி சேராதன்’னு ஃப்ரெண்ட் ஹேர்ஸ்டைல வச்சே நம்ம லைஃப் ஸ்டைலுக்கு ரோடு போடுவாங்க. ‘அவ கண்ணை பாரு திருட்டு முழி’ன்னு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து, அது போலீஸ்காரர் பொண்ணாவே இருந்தாலும், நம்ம ஃப்ரெண்ட்ஷிப்புக்கு நடுவுல கோடு போடுவாங்க.

சிசிடிவி கேமராக்கள்

பையன் கும்பலா போனா பயப்படுவாங்க, பொண்ணுங்க சிங்கிளா போனா பயப்படுவாங்க. பெங்களூருல ஐ.டி.யில வேலை செய்யுற பொண்ணா இருந்தாலும், பொங்கல் லீவுக்கு வீட்டுக்கு வந்தா நிம்மதியா கொஞ்சம் நேரம் நைட்டி போட முடியாது. காலிங்பெல் அடிச்ச அடித்த நொடியே, கதவுல தாளை போடுன்னு கட்டளை கிளம்பி வரும். தலையில முதல் கிளிப்ப போடுன்னு நம்மளை எப்பவும் கண்காணிக்கும் சிசிடிவி கேரமராக்கள்தான் அம்மாக்கள். பொண்ணுங்க பகல்ல தூங்குனா திட்டுவாங்க, பசங்க நைட் தூங்காம மொபைல் நோண்டுனா கத்துவாங்கன்னு அம்மாக்களுக்கு தனி டெம்ப்ளேட் இருக்கு.

குளிக்கப் போறப்ப துண்டை மறந்துட்டு போயிட்டா போதும், ஏதோ இரண்டாம் உலகப் போர்ல வெடிக்காத குண்டை வீட்டு வாசல்ல மறந்துட்டு போன மாதிரி காச்சுமூச்சுன்னுவாங்க. டி.வியில் வடிவேலு காமெடி பார்த்து சிரிக்கிறப்ப, மெதுவா சிரிடின்னு தொடையை கிள்ளுவாங்க. தங்கச்சி ஃப்ரண்ட்ஸ் முன்னாடி, தம்பெல்ஸ் எடுத்து ஆர்ம்ஸ் காட்டுறப்பதான், சின்ன வயசுல ஜட்டியில உச்சா போனக் கதையைச் சொல்லுவாங்க.

பொண்ண பெத்த உறவுக்கார மாமா வீட்டுக்கு வரப்பதான், நாம அடிக்கிற அலப்பறையெல்லாம் அவுத்துவிடுவாங்க. தாஜ்மஹால் மாதிரி நாம கட்டிக்காத்த இமேஜ், கொஞ்சம் நேரத்துல டோட்டல் டேமேஜ். நாம கோவத்துல கோவிச்சுக்கிட்டு சாப்பிடாம இருக்கிறப்பதான் கமகமன்னு சமைச்சு வெறுப்பேத்துவாங்க. சுரனையவிட சோறு முக்கியம்னு நாம இறங்கி வரப்ப, சீரியல்ல மூழ்கி கடுப்பேத்துவாங்க.

பசங்களோ பொண்ணுங்களோ, நம்மளோட பைக் நம்பர் ப்ளேட்டில் எழுத மிக சிறந்த வாசகம் 'உபயம் : அப்பா, உதவி : அம்மா'. ஒரு பைக்கோ ஸ்கூட்டியோ, அப்பா நமக்கு வாங்கித்தர பைக்குக்கு மேம்பாலம் கட்டித்தர மேஸ்திரிதான் அம்மா. ஆனா, நமக்கு பிடிச்ச மாடலை ஓகே பண்றதுக்குள்ள மூக்குல புரையேறி நாக்குல நுரை தள்ளிடும்.

‘என்னடா பைக் இது, எருமை இளைச்ச மாதிரி இருக்கும்பாங்க', இன்னொன்ன காமிச்சா, 'இதெல்லாம் மாடலா? பெருச்சாளி பெருத்த மாதிரி இருக்கும்பாங்க'. தடைகளை உடைத்து பைக்கை வாங்கினாலும் நிம்மதியா ஓட்ட விடுறாங்களான்னா அதுவுமில்லை. 30 கிலோமீட்டர் வேகத்துல ஸ்கூட்டில போற பொண்ணை மெதுவா போ, மெதுவா போன்னு சொல்லி சொல்லியே, சைக்கிள் ரேஞ்சுக்கு ஓட்ட வெச்சுடுவாங்க.

அம்மான்னா சும்மா இல்ல

பசங்களோட ‘பிரெய்ன்’ முழுக்க நிறைஞ்சு கிடப்பது கலர்கலரான ‘பிளைன்’ சட்டைதான். ஆனா, பர்த்டேவுக்கு பிரசென்ட் பண்றேன்னு, சில்க் டிசன்ல அம்மா தர சட்டைய பார்த்துட்டு மகன்கிற பதவியை ரிசைன் பண்ணலாம்னு யோசிச்சவங்க பல பேரு. பொண்ணுங்க ஒயிட் சுடிதார் போட்டா அம்மாக்கள் ருத்ரகாளியா ஆயிடுவாங்க. பொண்ணுங்க மட்டும் ‘ஸ்லீவ்லெஸ்’ டிரஸ் கேட்டுட்டா அதுக்கப்புறம் அவங்களுக்கு கிடைக்கிற அர்ச்சனைல அன்னைக்கு ‘ஸ்லீப்லெஸ்’ நைட்தான்.

சாப்பிடும்போது திட்டுவது அப்பான்னா, திட்டிக்கொண்டே சாப்பாடு போடுவது அம்மா. ஆனா, சாப்பாடு வைக்கிற விஷயத்திலும் நம்மளை சாப்பிட வைக்கிற விஷயத்திலும் அம்மாக்கள் எல்லாம் கைக்கு பதிலா கால்ல சக்கரம் வச்ச கேப்டன். நமக்குன்னு கேட்டுட்டா, தனக்குன்னு எடுத்து வைச்ச கடைசி மீன் துண்டைக்கூட ஏன்னு கேட்காம எடுத்து தரவங்கதான் அம்மா.

போன்ல மூணு நாலு தோசை ஊத்தும்மான்னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்தா மூணையும் நாலையும் கூட்டி மொத்தமா ஏழு தோசை ஹாட்பாக்ஸ்ல இருக்கும். அதுல கடைசி தோசை மட்டும் ரெண்டு சென்டிமீட்டர் மொத்தத்துல நம்மளை பார்த்து சிரிக்கும். சட்னியை வச்சுக்க, சாம்பார் ஊத்திக்கன்னு அம்மாக்கள் தட்டுல மொத்தமா கொட்டுனதுக்கு பிறகு, இட்லியெல்லாம் இலங்கை தீவா தட்டுல மிதக்கும்.

பாசம்னு வந்துட்டா பள்ளிக்கூடப் பக்கமே ஒதுங்காத அம்மாலேர்ந்து பி.எச்.டி. முடிச்ச அம்மாக்கள்வரை எல்லோரும் ஒன்னுதான். நெற்றியில் திருநீறு பூசுவதைவிட, அது கண்ணில் படாமலும் முகத்தில் பரவாமலும் இருக்க கைவைத்து ஊதிவிடுவதில் தெரியும் அம்மாவின் அன்பும் அக்கறையும். வீட்டுல எல்லோருக்கும் என்ன பிடிக்கும்னு அம்மாவுக்கு தெரியும், வீட்டுல யாருக்குமே அம்மாவுக்கு என்ன பிடிக்கும்னு தெரியாது, ஆனா வீட்டுல எல்லோருக்குமே அம்மாவ பிடிக்கும், அதான் அம்மா!

(விசில் சத்தம் கேட்கும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: thinkthoatta@gmail.com

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

அம்மாக்கள்விசில் போடுடி.ராஜேந்தர்கள்கடவுள்சிசிடிவி கேமராக்கள்அம்மான்னா சும்மா இல்ல

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author