

எல். ரேணுகா தேவி
பறவைகளைப் போல் பறக்க முடியாதா என்று குழந்தைகள் ஏங்குவது வாடிக்கை. அதே ஆசை இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் பிரவுனிங் என்ற இளைஞருக்கும் ஏற்பட்டது. அந்த ஆசைக்கு உயிர் கொடுக்க நினைத்தார் அவர். விளைவு, மனிதன் பறக்கும் வகையிலான ஆடை ஒன்றை உருவாக்கிவிட்டார்.
முயற்சி திருவினையாகும்
பொறியாளரான ரிச்சர்டு பிரவுனிங் இங்கிலாந்து கப்பற்படையில் பணியாற்றியவர். 2016-ல் மனிதன் பறப்பதற்கான இயந்திரத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்தார். இதற்காகத் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘கிராவிட்டி’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். தொடர்ந்து அந்த முயற்சியில் ஈடுபட்ட பிரவுனிங், பறக்கும் இயந்திர ஆடையை (Flying Suit) உருவாக்கியுள்ளார்.
இதற்காகப் பல சோதனை முயற்சிகளில் இறங்கிய பிரவுனிங், ஒவ்வொரு சோதனை முயற்சியில் கிடைக்கும் அனுபவத்தை அடுத்த முயற்சியில் புகுத்தி முன்னேற்றம் கண்டார். தொடர் முயற்சிகள், சோதனைகள், அனுபவப் பாடங்கள்தாம் தற்போது ரிச்சர்டு பிரவுனிங்கை ‘பறவை மனிதன்’ என அழைக்கும் அளவுக்கு அந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தவைத்தது.
பிரவுனிங்கின் பறக்கும் இயந்திர ஆடை ‘அயர்ன் மேன்’ படத்தின் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பறக்கும் இயந்திர ஆடையில் எரிபொருள் அடைக்கப்பட்ட 6 சிறிய ரக காஸ் சிலிண்டர்கள் உள்ளன. இவற்றின் மொத்த எடை 130 கிலோ. இந்த சிலிண்டர்களும் ஆடையின் பிரத்யேக வடிவமைப்பும் மனித உடலின் அசைவுகளைக் கட்டுப்படுத்தி மேல் நோக்கி பறக்க உதவுகிறது.
அதேபோல் இதில் அல்ட்ராலைட் பூட்ஸும் பொருத்தப் பட்டுள்ளது. பறக்கும்போது தரைத்தளம், வான்வழியைக் கண்காணிக்க வைஃபை வசதியும் இந்த ஆடையில் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பாகத் தரையிறங்கவும் முடியும். குறைந்தபட்சம் பயிற்சி இருந்தால்தான் இந்த ஆடையை அணிந்துகொண்டு பறக்க முடியும். இதற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளையும் பிரவுனிங் வழங்குகிறார்.
கின்னஸ் சாதனை
இந்தப் பறக்கும் ஆடை இயந்திரத்தை ரிச்சர்டு உருவாக்கியது மட்டுமல்லாமல், அதை அணிந்துகொண்டு பரிசோதனை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். திடீரென வானில் மனிதன் பறப்பதைப் பார்த்த இங்கிலாந்துவாசிகள் தொடக்கத்தில் கலக்கமடைந்தனர். போலீஸில் புகார் அளித்து பிரவுனிங்கை மாட்டிவிட்டுவிட்டார்கள். பின்னர் முறையாக அனுமதி பெற்று பறக்கும் சோதனை முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு இந்தப் பறக்கும் ஆடையை அணிந்துகொண்டு ஒரு மணிநேரத்தில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் 32 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கின்னஸ் உலக சாதனையையும் நிகழ்த்தியுள்ளார் பிரவுனிங். தற்போது இந்த ஆடையை இன்னும் மெருகேற்ற பல்வேறு தரப்பிலிருந்து பிரவுனிங்குக்கு உதவிகள் குவிந்துவருகின்றன.
இந்த இயந்திர ஆடையின் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.3.15 கோடியாம். “தொழில்நுட்பம் வளர்ச்சி அடையும்போது இதன் விலை இன்னும் குறையும்” என்கிறார் ரிச்சர்டு. இன்னும் சில ஆண்டுகளில் வானில் பறவைகள்போல மனிதர்கள் பறக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.