

லாகூரைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணின் விருப்பம் வித்தியாசமானது. வழக்கமாக பாகிஸ்தான் பெண்ணுக்கு இதைப் போன்ற ஆசை எழுவதில்லை என்பதால் இந்தப் பெண் கூட்டத்திலிருந்து தனித்துத் தெரிகிறார். அது சரி அவருடைய விருப்பம் என்ன? மோட்டார் சைக்கிளில் அதாவது பைக்கில் உலகைச் சுற்றிவர வேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பம். ‘மோட்டார் சைக்கிள் டயரிஸ்’ படம் உங்களுக்கு ஞாபகம் வருகிறதா? அதைப் போன்ற ஆசைதான் இவருக்கும். இவருடைய பெயர் ஸெனித் இர்ஃபான். வயது 20.
இப்படி ஒரு வித்தியாசமான விருப்பம் இர்ஃபானுக்கு வரக் காரணம் என்ன எனக் கேட்டால், ஏன் ஒரு பெண் பைக்கில் சுற்றக் கூடாதா எனக் கேட்கிறார். உண்மையில் அவருடைய தந்தைதான் இர்ஃபானின் இந்த வித்தியாச ஆசைக்குக் காரணமானவர். அவருக்கு பைக்கில் உலகைச் சுற்றிவர வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. தனது பத்து வயதில் இர்ஃபான் தன் தந்தையை இழந்துவிட்டார். தந்தையை இழந்துவிட்டாலும் தந்தையின் நனவாக்க முடியாத கனவை இர்ஃபான் நிறைவேற்ற முயல்கிறார். அதுவும் ஒரே பைக்கில் இர்ஃபான் சுற்றுவதில்லை. ஹோண்டா 125, ஹோண்டா சிடி 70, சுஸுகி ஜிஎஸ் 150 என வெவ்வேறு மாடல் பைக்குகளில் அவர் பவனிவருகிறார்.
அபாயம் நிறைந்த பகுதியென நம்பப்படும் வடக்கு பாகிஸ்தானை இந்த இளம்பெண் தனியே சுற்றிவந்திருக்கிறார். காலில் ஷூ, கையில் வெள்ளை நிற ஹெல்மெட், சுதந்திரமாகக் காற்றில் பறக்கும் கேசம், முகத்தில் வெற்றிப் புன்னகை எனப் பார்க்கவே ‘பளிச்’ என்றிருக்கும் இர்ஃபானைப் பார்த்ததுமே உற்சாகம் பிறக்கும். ஜூன் 14-ம் தேதி தொடங்கிய வடக்கு பாகிஸ்தான் பயணத்தை ஜூன் 20-ம் தேதி முடித்திருக்கிறார் இந்தத் துணிச்சல்காரப் பெண். ஆறு நாள் பைக் பயணத்தைப் பற்றித் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ‘ஒரு பெண்ணும் இரு சக்கரங்களும்’ என்னும் தலைப்பில் பதிவுசெய்திருக்கிறார்.
சுதந்திரமான மனப்போக்கு கொண்ட தன் தாய் தனக்குப் பெரிய உந்துதலைத் தந்ததாகக் கூறுகிறார் இர்ஃஃபான். சுதந்திர மனப்போக்கு கொண்ட ஆன்மா எனத் தன்னை வர்ணித்துக்கொள்ளும் இவர் சமூகம் போதிக்கும் விதிகளுக்குச் சவால்விடும் வகையில் தனது பைக் பயணம் அமைகிறது என்கிறார். பைக்கில் செல்லும்போது குறுக்கிடும் ஆற்றைத் தாண்டுகிறார், மலைகளில் ஏறுகிறார், பழுதடைந்த சாலைகளில் கவனமாகச் செல்கிறார், ஒதுக்குப்புறமான பகுதிகளில் வாழும் பழங்குடியினரைச் சந்திக்கிறார், கிராமப் பகுதியில் உள்ள குழந்தைகளுடன் விளையாடுகிறார், பெரிய டிரக்குகளில் செல்லும் டிரைவர்களிடம் தோழமை பாராட்டுகிறார்.
சாதிக்க விரும்பும் பெண்களுக்குப் பயன்படும்படியே தனது பயணத்தை ஆவணமாக்குகிறார். சாதனைப் பெண்களின் ஆதர்ஸமாகிவிட்ட இர்ஃபானைப் பற்றிய செய்திகளும், நேர்காணல்களும், பல தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும், பத்திரிகைகளிலும், இடம்பெற்றிருக்கின்றன. இவரது ஃபேஸ்புக் பக்கத்துக்குச் செல்ல இணைப்பு: >https://www.facebook.com/zenithirfan.zi?fref=nf