Published : 21 Aug 2015 14:39 pm

Updated : 21 Aug 2015 14:39 pm

 

Published : 21 Aug 2015 02:39 PM
Last Updated : 21 Aug 2015 02:39 PM

தப்பில்லாமல் தமிழ் எழுதலாம் தமிழா!

வலைப்பூவில் அநேகர் எழுதுகிறார்கள். பலருக்கு வலைப்பூவின் பதிவுகளில் இடம்பெறும் சந்திப் பிழைகளோ எழுத்துப் பிழைகளோ உறுத்துவதே இல்லை. ஆனால் எல்லோராலும் அப்படி இருக்க முடிவதில்லையே? அப்படி இருக்க முடியாதவர்களில் ஒருவர் நீச்சல்காரன்.

இவரிடம்‘வலைப்பூவில் சந்திப் பிழையுடன் எழுதுகிறீர்கள்’ என்று ஒருவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த விமர்சனத்தைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலவில்லை ‘நீச்சல்கார’னால். சந்திப் பிழையைச் சரிசெய்யும் மென்பொருள் ஒன்றைக் கண்டடையும் முயற்சியை மேற்கொண்டார். அப்படி முதலில் இவர் உருவாக்கியதுதான் ‘நாவி’ என்னும் தமிழ் சந்திப் பிழை திருத்தி. தனக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பயன்படும்படி ஆன்லைனில் இயங்கும் ‘நாவி’யை உருவாக்கிய ‘நீச்சல்கார’னின் நிஜப் பெயர் ராஜாராமன்.


‘நீச்சல்காரன்’ என்ற பெயரில் ஐந்து ஆண்டுகளாக வலைப் பூ ஒன்றை நடத்திவருகிறார் இவர் . தற்போது தனியார் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் இவருக்கு வயது இருபத்தியெட்டு. தமிழ்ச் சந்திப் பிழை திருத்தியை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இணையத்தில் இலவசமாக வெளியிட்ட இவர், சமீபத்தில் வாணி என்னும் தமிழ் எழுத்துப் பிழை திருத்தியை உருவாக்கியிருக்கிறார்.

“வாணி எழுத்துப் பிழை திருத்தியை உருவாக்க நான்கு வருஷம் ஆச்சு. வார்த்தைகளைத் திருத்துவதற்காக இதை வடிவமைத்திருக்கிறேன். அது மட்டுமல்ல; இது முந்நூறுக்கு மேற்பட்ட பிறமொழிச் சொற்களைகளையும் அடையாளம் கண்டுகொள்ளும். அந்தப் பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களையும் இந்தத் திருத்தி பரிந்துரைக்கும்” என்று சொல்கிறார் ராஜாராமன்.

அன்றாட வேலைகளுக்கு இடையே, ‘வாணி’ மென்செயலியைத் தொடர்ந்து புதுப்பித்தும் வருகிறார் இவர். எழுத்துப் பிழை திருத்தியை அடுத்து, தமிழ் இலக்கணப் பிழை திருத்தியை உருவாக்கும் திட்டமும் இவரிடம் இருக்கிறது. மொழி மீது தனக்கிருந்த ஆர்வத்தின் தூண்டுதலாலேயே இந்த மென்செயலிகளை உருவாக்கியதாகச் சொல்கிறார் இவர்.

இணையத்தில் தமிழ் மொழியைப் பரவலாக்கவும், மேம்படுத்தவும் புதுமையான சில மென்செயலி களையும் உருவாக்கியிருக்கிறார். “டிவிட்டரில் தமிழ் டிவிட்களை ‘ரீடிவிட்’ செய்யும்படி ஒரு தானியங்கியையும் உருவாக்கியிருக்கிறேன். இந்தத் தானியங்கி, தமிழ் டிவிட்களைச் சோதித்து, தானாக மதிப்பெண்கள் இட்டு அறிவார்ந்த கருத்துகளை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றை ‘ரீடிவிட்’ செய்கிறது. இந்தத் தானியங்கியைத் தமிழ் டிவிட்டர் பயனர்களை ஊக்குவிப்பதற்காகத் தயாரித்தேன்” என்று சொல்கிறார் ராஜாராமன். twitter.com/RT_Tamil என்ற பெயரில் இந்தத் தானியங்கி இயங்கிவருகிறது. ஒரு நாளில், இந்தத் தானியங்கி 200 தமிழ் டிவிட்களை டிவிட்டரில் பகிர்கிறது.

தமிழர்களின் கலை, அறிவுசார்ந்த விளையாட்டுகளை அடிப்படையாக வைத்து சில மென்செயலிகளையும் இவர் வடிவமைத்திருக்கிறார். ஆடுபுலி ஆட்டம், தமிழ் வார்த்தை விளையாட்டுகள், கோலங்கள் போன்றவற்றை இணையத்தில் பயன்படுத்தும்படி இந்த மென் செயலிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தமிழ் மொழியைப் பரவலாக்கும் செயலிகளை உருவாக்கிவருவதோடு, விக்கிப்பீடியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் தொகுத்திருக்கிறார் இவர். அத்துடன், புதிதாகக் கட்டுரைகளைத் தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளிலும் எழுதிவருகிறார். “தமிழ் விக்கிப் பிடியாவில் கட்டுரைகளில் புள்ளிவிவரச் சேகரிப்புக்கும், கட்டுரைகளை விரிவாகப் படிப்பதற்கும் வழிசெய்யும் பல்வேறு இணைப்புகளையும் சேர்க்கும் ஒரு தானியங்கியை வடிவமைத்துள்ளேன். தமிழ் விக்கிப் பீடியாவில் இயங்கிவரும் முக்கிய தானியங்கி இது” என்று சொல்கிறார் இவர்.

தற்போது, இந்தியாவில் இருக்கும் எல்லா மொழிகளின் வரிவடிங்களையும் (Scripts) தமிழுக்கு மாற்றும் ஒரு மென்செயலியை உருவாக்கி வருகிறார் இந்த மின்மொழி ஆர்வலர்.

மொழியைக் கற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல் மொழியின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து அதற்காகச் செயல்படும் ராஜாராமன் போன்றவர்கள் இன்னும் நிறைய பேர் தேவை.

மென்செயலிகளைப் பற்றி மேலும் தகவல்களுக்கு:

>http://www.neechalkaran.com/


தவறவிடாதீர்!

    நீச்சல்காரன்தமிழ்தவறுபிழைதிருத்திசெயலி

    Sign up to receive our newsletter in your inbox every day!

    You May Like

    More From This Category

    More From this Author