Published : 26 Nov 2019 11:29 AM
Last Updated : 26 Nov 2019 11:29 AM

ரசனைகள் சங்கமிக்கும் கலை!

என். கௌரி

படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பில்லாத வேலைகளை இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை. படைப்பாற்றலுக்குத் தீனிபோடும் வகையில் தங்கள் வேலையை தேடிக்கொள்வதில் அவர்கள் உறுதியுடன் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட உறுதியுடன்தான், கட்டிடக் கலையில் பட்டப்படிப்பை முடித்திருக்கும் சென்னையைச் சேர்ந்த ரேஷ்மா ஜான்சன், தன் பணிகளை மேற்கொண்டுவருகிறார். வடிவமைப்பாளர், கட்டிடக் கலைஞர், உள் அலங்கார வடிவமைப்பாளர், இன்ஸ்டாகிராம் கலைஞர் எனத் தன் பணிகளைப் பன்முக அடையாளங்களுடன் தொடர்ந்து வருகிறார்.

“சென்னையில் பி.ஆர்க். பட்டப்படிப்பில் சேர்ந்த பிறகு, எனக்குச் சிறு வயதிலிருந்து ஓவியம் வரைவதன்மீதிருந்த ஆர்வம் மீண்டும் வந்தது. சென்னையில் உள்ள பாரம்பரியமான கட்டிடங்கள் அனைத்தையும் கல்லூரிக் காலத்தில் வரைந்துள்ளேன்.

அதற்குப் பிறகு, ‘எக்சேஞ்ச் செமஸ்டரு‘க்காக ஜெர்மனியில் உள்ள டெட்மோல்ட் நகரில் உள்ள ‘ஒஸ்ட்வெஸ்ட்ஃபாலென்-லிப்பே’ பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்றேன். அங்கே வகுப்பு நேரம் போக வரைவதற்குக் கூடுதல் நேரம் இருந்தது. அங்கிருந்த கட்டிடங்களையெல்லாம் வரைந்த அனுபவம் இன்னும் சுவாரசியமாக இருந்தது.

இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த பிறகு, உள்அலங்கார வடிவமைப்பில் மேற்படிப்புக்காக பிரான்ஸ் சென்றேன். ஆனால், பல்வேறு காரணங்களால் அதைத் தொடர முடியவில்லை. இங்கே சென்னை வந்தவுடன் திருமணங்களைத் திட்டமிடும் ஒரு நிறுவனத்தில் ‘கிரியேட்டிவ் டிசைன’ராகப் பணிக்குச் சேர்ந்து ஆறு மாதங்கள் பணியாற்றினேன்” என்று சொல்கிறார் ரேஷ்மா.

வடிவமைப்புகள் பலவிதம்

இருபத்தைந்து வயதாகும் ரேஷ்மா, அந்நிறுவனத்தில் பணியாற்றியபோது திருமணங்களுக்கு பிரத்யேக மேடைகளை முதலில் டிஜிட்டலாக வடிவமைத்து, அதற்குப் பிறகு அவற்றை அசல் மேடைகளாக மாற்றும் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

ஒரு கட்டிடக் கலைஞராக நான்கு சுவர்களை வடிவமைக்க, உள் அலங்கார வடிவமைப்பாளராகத் தன் படைப்பாற்றலை முழுமையாக வெளிப்படுத்துவதற்கும் இந்தப் பணி அவருக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. அதனால், முழு நேர அலுவலகப் பணியை விட்டுவிட்டு ‘ஃப்ரீலேன்ச’ராகத் தன் பணியைத் தொடர்ந்துவருகிறார்.

“இன்றைய திருமணங்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட மையக்கருவை (Theme) அடிப்படையாக வைத்து நடைபெறுகின்றன. அதனால், மேடை வடிவமைப்பு மட்டுமல்லாமல், ‘ஃபோட்டோ பூத்’, ‘பெஸ்போக்’ (Bespoke invitations) அழைப்பிதழ்கள் போன்றவற்றை ஒரே கருவின் அடிப்படையில் வடிவமைப்பது என் படைப்பாற்றலுக்குத் தீனிபோடும் வகையில் அமைந்துள்ளது.

இன்றைய இளைஞர்கள் தங்களின் ரசனை, ஆளுமைப் போன்றவை தங்கள் திருமண அழைப்பிதழ்கள், மேடை வடிவமைப்பு என அனைத்திலும் வெளிப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதுதான் இந்த பிரத்யேக திருமண வடிவமைப்பு பிரபலமாகக் காரணம்” என்று அவர் விளக்குகிறார்.

இதுவரை பத்துக்கும் மேற்பட்ட திருமணங்களுக்கு வடிவமைப்புகளைச் செய்திருக்கிறார் ரேஷ்மா. ஒரு ஃப்ரீலேன்சராக இவர் தன் படைப்புகளை ‘இல்லஸ்ட்ரேஷன்ஸ்’ என்ற தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துவருகிறார்.

கட்டிடங்கள் மட்டுமல்லாமல் அவ்வப்போது தன் தனிப்பட்ட ரசனையை வெளிப்படுத்தும் படைப்புகளையும் அந்தப் பக்கத்தில் வெளியிட்டுவருகிறார். ‘மின்சாரக் கனவு’, ‘லாலா லேண்ட்’ பாடல் காட்சிகளை இணைத்து அவர் வடிவமைக்கும் புதுமையான படைப்புகளுக்கும் தொடர்ந்து வரவேற்பு கிடைத்துவருகிறது.

“நம்முடைய படைப்புகளை நாம்தான் ‘புரோமோட்’ செய்ய வேண்டும். ஒவ்வொரு கலைஞரும் தனித்துவமானவர். அவரது படைப்புப் பாணியும் தனித்துவமானது. நமக்கான பாணியை நாம் உருவாக்கிவிட்டால், அந்த பாணியை எந்தத் தயக்கமுமின்றி தன்னம்பிக்கையுடன் வெளியுலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

நம்மை, நம் படைப்புகளை முதலில் நாம் அங்கீகரித்தால்தான், மற்றவர்கள் அவற்றை அங்கீகரிப்பார்கள்” என்று ‘ஃப்ரீலான்சர்’ கலைஞர்களாகக் கனவுகளைப் பின்தொடர நினைக்கும் இளைஞர்களுக்கு ஆலோசனை சொல்கிறார் ரேஷ்மா.

ரேஷ்மாவின் இன்ஸ்டாகிராம் பக்கம்:
www.instagram.com/illustreshions/ ரேஷ்மா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x