இளம் சாதனையாளர்: தோட்டாக்களை நிரப்பு, குறிபார், சுடு

இளம் சாதனையாளர்: தோட்டாக்களை நிரப்பு, குறிபார், சுடு
Updated on
2 min read

நான் காகிதத்தைப் போல் பறப்பேன்

விமானங்களைப் போல் உயரத்தை அடைவேன்

நீங்கள் என்னை எல்லையில் பிடித்துவிட்டால்

நான் எனது பெயரில் விசாக்களைப் பெறுவேன்

இது கலா என்னும் என்னும் இசைத் தொகுப்பில் (Music album) உள்ள காகித விமானங்கள் (Paper Planes) என்னும் பாடலின் வரிகள். அகதியின் துயரத்தைப் பேசும் இந்தப் பாடலை பாடியது எம்ஐஏ. பெயரைக் கேட்டவுடன் ஏதோ இங்கிலாந்தின் பிரபல பாடகி எனப் பக்கத்தைப் புரட்டிவிடாதீர்கள். இவர் இங்கிலாந்தில் பிறந்த இலங்கைத் தமிழச்சி.

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கார் பெற்றுத் தந்த ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திலும் இந்தப் பாடல் இடம்பிடித்துள்ளது. அது மட்டுமல்ல இசை உலகின் மிகப் பெரிய விருதான கிராமி விருதுக்கும் 2008-ம் ஆண்டு இந்தப் பாடல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதே ஸ்லம்டாக் மில்லினியர் படத்திலிருந்து ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட்ட பாடலான ‘ஓ சாயா’ பாடலைப் பாடியவரும் எம்ஐஏதான். இவர் ஈரோஸ் என்னும் இலங்கை விடுதலைப் போராட்ட அமைப்பின் முன்னாள் போராளியான அருள்பிரகாசத்தின் மகள். Missing in Action என்பதன் சுருக்கமே எம்ஐஏ (MIA). இவரது உண்மையான பெயர் மாதங்கி.

தனது முதல் இசைத் தொகுப்பை மாதங்கி தன் தந்தையின் பெயரில்தான் கொண்டுவந்தார். ‘அருளார்’ என்ற அந்தத் தொகுப்பு அவருக்கு ஆங்கில இசை உலகில் ஒரு அறிமுகத்தைப் பெற்றுத் தந்தது. அடுத்த தொகுப்புக்கு ‘கலா’எனத் தன் அம்மாவின் பெயரை வைத்தார். இந்தத் தொகுப்புதான் உலக அளவில் அவரைப் பிரபலப்படுத்தியது. இந்தத் தொகுப்பு, ஜப்பான், இந்தியா, லிபியா, தாய்லாந்து, ஜமைக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா எனப் பரந்துபட்ட உலகக் கலாச்சாரப் பின்னணியில் பதிவுசெய்யப்பட்டது. அதில் மேற்கின் ட்ரம்ஸையும் கிழக்கின் உருமி மேளத்தையும் இணைத்துப் பார்த்தார். இந்தப் புதுமையால் அவர் பாடல்கள் திசைகளைத் தாண்டி ஒலிக்கத் தொடங்கின.

மாதங்கி இசைத் தொகுப்பின் மையம் இலங்கையின் இன விடுதலைப் போராட்டம்தான். இந்த ஆதரவுக் குரலுக்காக அவர் அமெரிக்காவில் நுழையத் தடையும் விதிக்கப்பட்டது. ஆனாலும் இசையின் மூலம் தன் குரலை உரத்துச் சொல்லிக்கொண்டே இருந்தார் மாதங்கி.

வளர்ந்தோம், கொதித்தோம்

கொரில்லாக்களிடம் பயிற்சி பெற்றோம்...

இப்போது சண்டை வந்துவிட்டது

தோட்டக்களை நிரப்பு, குறிபார், சுடு... சுடு... பாப்

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்திலும் லண்டன் தொலைக்காட்சிகளில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக மாதங்கி தொடர்ந்து பேசிவந்தார்.

இங்கிலாந்தில் பிறந்தாலும் மாதங்கி குடும்பத்துடன் இலங்கைக்குத் திரும்பி, தன் பத்து வயது வரை இலங்கையில் வளர்ந்தவர். பின்னர் உள்நாட்டு யுத்தத்தால் 80களின் இறுதியில் மீண்டும் இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்தார். அதனால் இவரது இசையமைப்பில் இங்குள்ள நாட்டுப்புறப் பாடல்களின், சினிமாப் பாடல்களின் பாதிப்பைத் தெளிவாக உணரலாம். இளையராஜா இவருக்கு மிகப் பெரிய ஆதர்சம் என்பதை இவரது பாடல்களைக் கேட்கும்போது தெரிகிறது.

மாதங்கி சமீபத்தில் மட்டாடட்டா (Matahdatah) என்னும் இசைத் தொகுப்பைக் கொண்டுவந்துள்ளார். இதில் போர் வீரர்கள் (Warriors) வாள் (Swords) என்னும் இரு பாடல்கள் உள்ளன. ‘வாள்’தான் இப்போது லண்டன் ராப் இசை ரசிகர்கள் முணுமுணுக்கும் பாடல். இதில் பெண்கள் வாளெடுத்து ஆடுகிறார்கள். பெண்கள் சிலம்பாடும் இந்தியத் தெருக் களக் கூத்தும் வருகிறது. ஆப்பிரிக்கக் களக் கூத்தையும் பதிவுசெய்திருக்கிறார் மாதங்கி.

ஆப்பிரிக்கக் கலாச்சாரத்துக்கும் இந்தியக் கலாச்சாரத்துக்கும் உள்ள ஒற்றுமையைப் பேசுகிறது. மாதங்கி இந்த இரு காட்சிகளிலும் ஒரு சாட்சியாகத் தோன்றி மறைகிறார். திருவிளையாடல் படத்தில் பார்வதியாக சாவித்ரி தோன்றும் காட்சியும் இடையிடையே வருகிறது. சக்திதான் எல்லாம் எனக் குறிக்க விரும்புவதுபோல ‘நாங்கள் பெண்கள், உலகத்தைக் கைப்பிடிக்குள் வைத்திருப்பவர்கள்’ என முடிகிறது பாடல்.

தொகுப்பின் இசை, தமிழின் நாட்டுப்புறப் பாடல்களைப் பிரதிபலிப்பவை. வெளிவந்த உடனேயே இந்தத் தொகுப்பை லண்டன் தொலைக்காட்சிகள் போட்டிபோட்டுக்கொண்டு கொண்டாடத் தொடங்கிவிட்டன. பாடல்களும் பற பற எனப் பறக்கத் தொடங்கிவிட்டன; காகிதத்தைப் போலல்ல; விமானங்களைப் போல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in