Published : 19 Nov 2019 11:50 AM
Last Updated : 19 Nov 2019 11:50 AM

புதுசு தினுசு: பூந்தொட்டிகளாகும் சிகரெட் துண்டுகள்!

சிகரெட் துண்டுகளை சகட்டுமேனிக்கு சாலைகளிலும், சாக்கடைகளிலும் வீசி எறிவது பலருக்கும் வாடிக்கை. அப்படித் தூக்கி எறியும் சிகரெட் துண்டுகளை சேகரித்து மறுசுழற்சி செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் புதுச்சேரியைச் சேர்ந்த இரு இளைஞர்கள். ‘கிரேஸ் சைக்கிள்’ என்ற தன்னார்வ அமைப்பை உருவாக்கியுள்ள ஜான்சன், ஜெயமூர்த்தி ஆகிய இளைஞர்கள்தாம் அவர்கள்.

புகை பழக்கம் புற்றுநோயை உருவாக்கும் என்று எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அதையெல்லாம் பலரும் காதில் போட்டுக்கொள்வதில்லை. ஸ்டைலாகப் புகைப் பிடித்துவிட்டு, அந்தத் துண்டை சாலையில் தூக்கியெறிந்துவிட்டு சென்றுவிடுவார்கள். சிகரெட் துண்டுகளை சாலையில் போடாமல் இருக்க, இந்த இரு இளைஞர்களும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் சிறிய இரும்பு பெட்டிகளை வைத்துள்ளனர். ஒவ்வொரு சனிக்கிழமையும் சிகரெட் துண்டுகளை துப்புரவு பணியாளர்களிடமிருந்து இவர்கள் காசு கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள்.

அந்த சிகரெட் துண்டுகளைக் மறுசுழற்சி செய்து பூந்தொட்டி செய்து அசத்தியுள்ளனர். இது பற்றி 'கிரேஸ் சைக்கிள்' அமைப்பின் ஜான்சனிடம் பேசியபோது,‘‘மருத்துவராக இருக்கும் என் மாமா ஜோஸ்வா உதயசாந்த் பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டார். அவரது வீட்டிலும் பிளாஸ்டிக் பொருட்கள் இருக்காது. அதோடு செடிகள் வளர்ப்பது போன்றவற்றையும் செய்வார். அதைப் பார்த்துதான் நானும் எனது நண்பர் ஜெயமூர்த்திக்கும் சிகரெட் துண்டுகளை சேகரித்து மறுசுழற்சி செய்யும் யோசனை வந்தது.

ஒரு சிகரெட் துண்டில் 4 ஆயிரம் நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்கள் இருக்கும். ஒரு சிகரெட் துண்டு 50 லிட்டர் தண்ணீரை மாசடைய செய்கிறது. அதிலிருந்து வெளியேறும் ரசாயனங்கள் நிலத்தடிக்கு செல்கின்றன. நீர்நிலைகளில் விழும் சிகரெட் துண்டுகளைச் சாப்பிடும் மீன்களும் பறவைகளும் பாதிக்கப்படுகின்றன. இதையெல்லாம் மனதில் வைத்துதான் சிகரெட் துண்டுகளை சேகரித்து அவற்றை பொடியாக்கி சிமெண்ட், ரெசின் போன்றவைகளுடன் கலந்து மறுசுழற்சி செய்து பூந்தொட்டி செய்கிறோம்” என்கிறார் ஜான்சன்.

தற்போது புதுச்சேரியில் 8 இடங்களில் சிகரெட் துண்டுகளை சேகரிக்கும் இவர்கள், விரைவில் நகர் முழுவதும் சேகரிக்கப் பெட்டிகள் வைக்கவும் திட்டமிட்டுள்ளார்கள். நல்ல முயற்சி திருவினையாகட்டும்!

- அ. முன்னடியான்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x