

கோபால்
‘‘96’ படத்தில் இளம் வயது ஜானுவாக நடித்த கௌரி கிஷணை மறந்திருக்க மாட்டீர்கள். ‘‘96’ திரைப்படம் வெளியாகி ஓராண்டைக் கடந்த நிகழ்வு சமீபத்தில் டிரெண்ட் ஆனது. அந்த நேரத்தில் வெளியான குறும்படம் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார் கௌரி .
உலகில் 7 கோடிப் பேர் திக்குவாய் என்னும் பேச்சுக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, உலக மக்கள் தொகையில் ஒரு சதவீதத்தினர் ஏதேனும் ஒரு வகையில் திக்குவாய் பாதிப்புடன் இருக்கிறார்கள். ஆனால், நம் திரைப்படங்களில் திக்குவாயும் கேலிக்குரிய விஷயமாகவே கையாளப்பட்டிருக்கிறது. அண்மைக் காலத்தில் பல விஷயங்களைப் போலவே திக்குவாய் பிரச்சினை கொண்டவர்கள் தொடர்பான சித்தரிப்பிலும் நல்ல மாற்றங்கள் தெரியத் தொடங்கியிருக்கின்றன.
‘பிகில்’ திரைப்படத்தில் விஜய் திக்குவாய் பிரச்சினை கொண்டவராக நடித்திருந்தார். அதற்கு முன்பே வெளியான ஒரு குறும்படத்தில் திக்குவாய் பிரச்சினை கொண்ட நாயகியாக நடித்திருக்கிறார் கெளரி கிஷண். கடந்த ஆண்டு வெளியாகிப் பலருடைய பள்ளிப் பருவக் காதலை அசைபோட வைத்த ‘96’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற பதின்பருவ ஜானு கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் கௌரி.
நம்பிக்கையளிக்கும் அன்பு
அவர் நடித்துள்ள ‘ஹாய் ஹலோ காதல்’ என்ற குறும்படத்தில் நாயகி நன்கு பாடும் திறன்கொண்டவர். அந்தத் திறனே காதலைப் பெற்றுத் தருவதோடு பிறவிக் குறைபாட்டால் அவருக்கு ஏற்படும் தன்னம்பிக்கை இழப்பை நீக்கி வாழ்வில் மலர்ச்சியான திருப்பத்தையும் ஏற்படுத்துகிறது.
பதற்றமடைந்தால் மட்டுமே பேச்சு திக்கும் என்றாலும், ஒருவருக்கு அது எந்த அளவுக்கு தன்னம்பிக்கை இழப்பை ஏற்படுத்தி, மற்றவர்களுக்கு எளிதாகக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தடுக்கிறது என்பதை அக்கறையுடன் பதிவுசெய்திருக்கிறது விநாயக் சசிகுமார் இயக்கியிருக்கும் இந்தக் குறும்படம். அதேநேரம் மனிதர்கள் தங்கள் பிறவிக் குறைபாடுகளால் இழப்பவற்றை, சக மனிதர்களின் உண்மையான அன்பினால் மீட்டுத் தர முடியும் என்ற நம்பிக்கையையும் விதைத்துள்ளது.
தனித்துத் தெரியும் பெண்
வழக்கத்தைவிடச் சற்று அதிக நீளத்துடன் 26 நிமிடங்களுக்கு மேல் ஓடும் இந்தக் குறும்படத்தில் இசையும் ‘வெள்ளைப் பூவே...’ என்று தொடங்கும் பாடலும் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. மலையாளப் படம் என்றாலும் புரிவதில் பெரிய பிரச்சினையில்லை, ஆங்கில சப்டைட்டிலும் உண்டு. அனைவருடைய பங்களிப்பும் இந்தப் படத்தை ரசிக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றன. அனைத்தையும் தாண்டி கெளரி கிஷண் தனித்துத் தெரிகிறார்.
வேலை தேடும் யுவதி வேடத்துக்குக் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார் கௌரி. அவர் அணிந்திருக்கும் சிறிய மூக்குத்தியில் ஜானுவை மறந்து, இந்தக் குறும்படத்தின் ‘ஸ்ருதி தா’ஸை ரசிக்கத் தொடங்கிவிடுகிறோம். அழகான, அளவான முகபாவங்களால் ரசிக்க வைக்கிறார்.
அடுத்ததாக விஜய் நடிக்கும் ‘தளபதி 64’ என்ற பெயரிடப்படாத படத்தில் கெளரி நடிக்க இருக்கிறார். தமிழ் சினிமாவில் பெண் கலைஞர்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. வெறும் கவர்ச்சிப் பதுமைகளாகவும் நாயகனைக் காதலிப்பதை மட்டுமே முழுநேர வேலையாகக் கொண்டவராகவும் இருக்க விரும்பாத பெண்களுக்கு, இன்றைக்கு நிறைய வாசல்கள் திறந்திருக்கின்றன.
அவற்றைப் பயன்படுத்தித் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஓரிடத்தைப் பிடிப்பார் கெளரி என்ற நம்பிக்கையை உறுதிபடுத்துகிறது ‘ஹாய் ஹலோ காதல்’ குறும்படம்.
‘ஹாய் ஹலோ காதல்’ குறும்படத்தைக் காண: https://bit.ly/2CuuxQh