

நெல்லை மா .கண்ணன்
“சேவல் என்னுடைய பாதி கிடையாது. நான்தான் சேவல். என் மனதில் என்ன நினைக்கிறேனோ, அதைத்தான் என்னுடைய சேவலும் செய்யும். சண்டையில் என்னுடைய சேவல் காலைத் துாக்கி எப்போது பரசி அடிக்கும் என்று எனக்குத் தெரியும். சேவல் என்னுடைய தொடர்ச்சி”.
சேவல் சண்டைக்காரா்களுக்குள் நடக்கும் இந்த உள்ளார்ந்த பேச்சுத்தான் அவர்களை இயக்கிக்கொண்டிருக்கிறது. ஒளிப்படக் கலைஞர் அஜய்குமாரும் இப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான். அதன் காரணமாகத்தான் அவர் எடுத்துள்ள படங்கள் உயிர்ப்புடன் திகழ்கின்றன.
பள்ளியில் படிக்கும்போதே சேவலைச் சண்டைக்கு விட்டவர் இவர். கல்லுாரிப் படிப்பு முடித்தப் பிறகு ஒளிப்படங்கள் மூலமாகவும் ஒரு கதையைச் சொல்ல முடியும் என்று அவருக்கு நம்பிக்கை. தனக்கு நெருக்கமாக இருந்த சேவல் சண்டையை ஆவணப்படுத்தத் தொடங்கினார் அஜய்குமார். தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றிவருகிறார்.
விநோதப் பழக்கங்கள்
தமிழ்நாட்டில் சேவல் சண்டை இரண்டு விதமாக நடக்கிறது. வெற்றுக் கால் சேவல் சண்டை (வெப்போர்), கத்தி சண்டை. திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சென்னை, கோயமுத்துார், தஞ்சாவூர், கரூர், பொள்ளாச்சி, தேனி, கம்பம், நாகர்கோவில், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் கோயில் கொடைவிழா, தைப் பொங்கலுக்கு மறுநாள் வெப்போர் திருவிழா நடக்கிறது.
வெப்போரில் ஈடுபடும் சேவல்களை வளவி (சேவலின் இறக்கையில் உள்ள வெள்ளை நிறம்), சாம்பல், கருங்சேவல், கூவத்தாடி என்று வண்ணத்தை வைத்துப் பெயர் சொல்லி அழைக்கிறார்கள்.
இயற்கையாக இறந்த சேவலின் கால்களை வெட்டிப் பதப்படுத்தி வீட்டு வாசலில் நினைவாகத் தொங்கவிடுவதைவும், சண்டையின்போது சேவலில் இருந்து விழும் இறக்கையை எடுத்து சட்டைப்பையில் பத்திரப்படுத்துவதும் சேவல் சண்டைக்கு விடுபவர்களிடம் காணப்படும் சில விநோதப் பழக்கங்கள்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: mkannanjournalist@gmail.com