

கனி
இன்று உலகில் அதிகமான மக்கள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கு அடிமையாகியிருக்கிறார்கள். அதீத ஸ்மார்ட்போன் பயன்பாட்டை அடிமைத் தனமாகச் செல்வதை நம்மில் பலர் விரும்பவில்லை யென்றாலும், அதுதான் உண்மை என்று சொல்கிறார்கள் மனநல நிபுணர்கள். இப்படி ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால், இந்தப் பிரச்சினைக்கு கூகுள் நிறுவனம், ‘காகித போன்’ என்ற ஒரு தீர்வை முன்வைத்துள்ளது. ஸ்மார்ட்போன் பாதிப்பிலிருந்து வெளியே வருவதற்கு ‘காகித போன்’ பரிசோதனை முயற்சி உதவும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘கிட்ஹப்’ தளத்தில் கிடைக்கும் இந்தக் காகித போன் செயலி, நீங்கள் ஸ்மார்ட்போன் உதவியில்லாமல் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள உதவும். இந்தச் செயலியின் மூலம் நீங்கள் உங்களுக்கு விருப்பமான தொடர்புகள், அன்றாடத் தகவல்கள், வரைபடங்களை இணைத்துக் காகிதத்தில் அச்சிட்டுக்கொள்ளலாம். ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒரு நாளை வெற்றிகரமாகக் கழிக்க முடியும் என்ற ஊக்கத்தைக் கொடுப்பதற்காக இந்த ‘காகித போன்’ செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது.
“ஸ்மார்ட்போன்களில் அதிக நேரத்தைச் செலவழிப்பதாகப் பலர் உணர்கிறார்கள். ஆனால், அன்றாட வாழ்க்கை யில் ஸ்மார்ட்போன் தொழில் நுட்பத்துக்கு அடிமையாகாமல் அதைப் பயன்படுத்துவது போராட்டமாகவே இருக்கிறது. அவர்களுக்கு உதவுவதற்காகவே இந்த ‘காகித போன்’ முயற்சியைத் தொடங்கியிருக்கிறோம். டிஜிட்டல் உலகிலிருந்து ஒரு சின்ன இடைவேளையை எடுத்துக்கொள்ள ‘காகித போன்’ செயலி உதவும்” என்று தெரிவித்துள்ளது கூகுள்.
காகித போன் செயலியைப் பதிவிறக்கம் செய்ய: http://tiny.cc/vaovfz