

மிது
சமயோசிதமாகச் செயல்படுபவர்களைப் புத்திசாலிகள் என்று சொல்லிவிடுவோம். ஒரு குறிப்பிட்ட செயலைத் திடீரென உதிக்கும் யோசனையால் செயல்படுத்திக் காட்டுவதன் மூலம் புத்திசாலிகள் பட்டம் கிடைத்துவிடும். அண்மையில் பிலிப்பைன்ஸில் ஓர் இளம் பெண் திடீர் புத்திசாலியாக மாறியது இணையத்தில் அவரைப் பெரிய அளவில் பிரபலமாக்கிவிட்டது.
வெளியூர் செல்வதற்காக ஜெல் ராட்ரிக்யூஸ் என்ற இளம் பெண் பிலிப்பைன்ஸ் விமான நிலையத்துக்கு வந்தார். கையில் பெட்டியுடன் வந்த அவரை, விமானத்துக்குள் அனுமதிக்கும் முன் வழக்கமான சோதனை நடைமுறைகள் நடைபெற்றன. அவருடைய சூட்கேஸைச் சோதனை செய்த அதிகாரிகள், “பெட்டியின் எடை 9 கிலோ இருக்கிறது. 7 கிலோ வரை மட்டுமே இலவசமாக எடுத்து செல்ல அனுமதி. 7 கிலோவுக்கு மேல் எடை இருந்தால், தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும்” என்று கறாராகச் சொல்லிவிட்டார்கள்.
அப்போதுதான் கற்பூரம் போல ஒரு ஐடியா மனதுக்குள் பளிச்சென ஜெலுக்குப் பற்றியது. சூட்கேஸை வாங்கிக்கொண்டு அருகே இருந்த உடை மாற்றும் அறைக்கு ஜெல் சென்றார். சூட்கேஸில் இருந்த துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து அணிய ஆரம்பித்துவிட்டார். நிறைய துணிகளை அணிந்துகொண்டுவந்த வெளியே ஜெல், மீண்டும் சூட்கேஸை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார். சூட்கேஸ் எடை 6.5 கிலோ மட்டுமே இருந்ததால், கூடுதல் கட்டணம் தேவையில்லை என்று அதிகாரிகள் கூற, அந்தப் பெருமையான தருணத்தை விரைப்பாக நின்று போஸ் கொடுத்து ஒளிப்படம் எடுத்துக்கொண்டார் ஜெல்.
அந்த ஒளிப்படத்தைத் தனது ஃபேஸ்புக்கில் அவர் பகிர, அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் வைரலாகி ஹிட் அடித்துவிட்டது. மூளையில் தோன்றிய ஒரு பல்பு பிரகாசத்தால், இன்று உலக அளவில் பிரபலமாகிவிட்டார் ஜெல்!