Published : 05 Nov 2019 01:01 PM
Last Updated : 05 Nov 2019 01:01 PM

விசில் போடு 04: இது வாட்ஸ்அப் நுழைவுத் தேர்வு!

மொத்த மதிப்பெண்கள் 50

சரியானவற்றை பொருத்துக (5x1 மதிப்பெண்கள்)

வாட்ஸ்அப் குரூப்களில் யார் யார் என்ன வகை மெசேஜ் அனுப்புவார்கள் எனப் பொருத்துக:

சரியான விடையைத் தேர்ந்தெடு (5x1 மதிப்பெண்கள்)

6. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாய் அதிகம் வைக்கப்படுவது எது?
a) குட்மார்னிங் போட்டோ b) சினிமா பாட்டு c) புள்ளையார் போட்டோ d) பூ போட்டோ
7.ஒவ்வொரு வாட்ஸ்அப் குரூப்பிலும் ராணுவத்துக்கே தலைவன்போல ஆணவத்தில் ஆடுபவன் யார்?
a) செம்மீன் b) விண்மீன் c) அட்மின் d) அயிரை மீன்
8.வாட்ஸ்அப்பிலிருந்து உடனடியாக நீக்க வேண்டிய வசதி எது?
a) லிப்ஸ்டிக் b) பெவிஸ்டிக் c) ப்ளூ டிக் d) ஜாய்ஸ்டிக்
9.ஒரு நாளைக்கு எத்தனை முறை மக்கள் வாட்ஸ்அப்பை பார்க்கிறார்கள்?
a) 157 முறை b) 294 முறை c) 518 முறை d) அங்கதான் குடியிருக்காங்க
10.ஒவ்வொருத்தர் மொபைல் போனிலும் இருக்கும் குறைந்தபட்ச வாட்ஸ்அப் குரூப்களின் எண்ணிக்கை?
a) 4-5 b) 6-7 c) 8-10 d) இருங்க, எண்ணிதான் சொல்ல முடியும்

ஓரிரு வரிகளில் விடையளி (10x1 மதிப்பெண்கள்)

11.வாட்ஸ்அப்பில் வரும் ஒலிப்பதிவு ஆடியோக்கள் எப்படி ஆரம்பிக்கும்?
ஹாய் பிரண்டஸ், எப்படி இருக்கீங்கன்னு ஆரம்பிக்கும்.
12.வாட்ஸ்அப் வெறியர் யார்?
அஞ்சு மணிக்கு அலாரம் வச்சு குட்மார்னிங் அனுப்புறவர்.
13.வாட்ஸ்அப் குரூப்பில் 50 வயதுக்கு மேற்பட்டவரை எப்படிக் கண்டறிவது?
ஆக்டிவா இல்லாத குரூப்லகூட ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருப்பார்.
14.வாட்ஸ்அப்பின் வேகமாக வளர்ச்சிக்கு என்ன காரணம்?
அன்று பொறணி பேச வாசல் தேவைப்பட்டது, இன்று வாட்ஸ்அப் தேவைப்படுகிறது.
15.வாட்ஸ்அப்பின் அவஸ்தையை விளக்குக:-
கண்டக்டரிடம் மீதி சில்லறைக்கு காத்திருக்கும் அவஸ்தையைவிட கொடுமையானது காதலியின் ப்ளூ டிக்குக்கு காத்திருப்பது.
16. மனைவிக்கு வாட்ஸ்அப் ஏன் தேவை?
மளிகை லிஸ்ட் அனுப்ப.
17.கணவர்களுக்கு வாட்ஸ்அப் ஏன் தேவை?
மனைவி தூங்கிட்டாங்களான்னு செக் பண்ண.
18.குரூப்கள் எப்போது முடிவுக்கு வருகின்றன?
குரூப்புக்குள் நாலு குரூப் உருவாகி அடித்துக்கொள்ளும்போது.
19.ஃபேமிலி குரூப் என்பது என்ன?
பர்த்டேவுக்கு விஷ் போட, பாட்டிக்கு RIP போட.
20.ஃபிரெண்ட்ஸ் குரூப் என்பது என்ன?
வருஷம் முழுக்க கோவா டூர் போக பிளான் போட்டுட்டு கடைசில கொடைக்கானல் போவது.

சுருக்கமாக விளக்குக (5x2 மதிப்பெண்கள்)

21.இளைஞர் மொபைல்களில் கல்வி சம்பந்தப்பட்ட வாட்ஸ்அப் குரூப்புகளில் ஐந்தை பட்டியலிடு:
எலிமெண்டரி ஸ்கூல்ல இலந்தை பழம் சாப்பிட்ட குரூப், எல்.கே.ஜி.யில் ஒண்ணா ஆட்டோல போனவங்க குரூப், ஹை-ஸ்கூல் பஸ் குரூப், காலேஜ் குரூப் மற்றும் கடைசி பெஞ்ச் குரூப்.
22.வாட்ஸ்அப் வாழ் மனிதர்களில் ஆபத்தானவர்கள் யார்?
படிக்காமலே பார்வேர்ட் செய்பவர்களும், படித்தும் பதில் தராமல் இருப்பவர்களும்.
23.இலக்கணப் பிழையின்றி வாட்ஸ்அப் பற்றி இரு கவிதைகள் எழுதுக.

காலையில் எழுந்தவுடன் வெறும் ஒரே ஒரு வம்புகள் பேசி
குட்மார்னிங் மெசேஜ் கண்டு, வாய்தான் வலிக்கிறது,
கடன் பட்டவன் நெஞ்சமாய் கலங்கினான் ஒரு வாட்ஸ்அப் இருந்தால் கொடுங்கள்,
இலங்கை வேந்தன் இன்று.! வதந்திகள் பரப்பி வாழ்ந்துகொள்கிறேன்..

24. வாட்ஸ்அப் ஃபார்வேர்ட் தகவல்களில் பெரும்பாலானவை எப்படி ஆரம்பிக்கின்றன?
‘இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்' என்றும், ‘உங்களுக்கு இது தெரியுமா?' என்றுமே ஆரம்பிக்கின்றன.
25. வாட்ஸ்அப் ஃபார்வேர்ட் தகவல்களில் பெரும்பாலானவை எப்படி முடிகின்றன?
‘உண்மைத் தமிழனாய் இருந்தால் ஷேர் செய்யவும்', ‘இதனை பகிர்ந்தால் பல்லாயிரம் பேர் பயன் பெறுவர்' என்றே முடிகின்றன

விளக்கமாக விடை தருக (1x 10 மதிப்பெண்கள்)

26. வாட்ஸ்அப்பின் நன்மை, தீமை சிலவற்றைக் கூறுக.
‘ஹெல்மெட் குரூப்’ என்று ஒவ்வொரு ஊருக்கும் குரூப்கள் உண்டு, அதில் உறுப்பினரானால், காவல்துறை எங்கெங்கு ஹெல்மெட் சோதனை செய்து கடமையாற்றிக்கொண்டு இருக்கிறார்களோ, அந்தச் சாலைகளின் தகவல்கள் வந்துவிடும். பிறகு நாம் பக்கத்திலிருக்கும் சந்திலோ அல்லது பக்கவாட்டில் இருக்கும் சந்திலோ புகுந்து எக்குதப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். இதில் ஒரே பிரச்சினை, சில சி.ஐ.டி. ஆபிசர்களே இதில் மஃப்டியில் உறுப்பினராகி, போலீஸ் நிற்கும் சாலையையே போட்டுக்கொடுத்த சம்பவங்களும் சரித்திரத்தில் உண்டு.

காணாமல் போயிட்டாங்க கண்டுபிடிச்சு கொடுங்கன்னு குழந்தைங்க போட்டோவும், கடல் தண்ணீர் அளவுக்கு கண்ணிலிருந்து கண்ணீரே வருமளவு குறிப்பும் வரும். இப்படி காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க பயன்பட்டாலும், நாலாம் வகுப்புல காலாண்டு தேர்வப்ப காணாமல் போன குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு காலேஜ் முடிச்சு கல்யாணமே பண்ணினாலும் அந்த தகவல் வாட்ஸ்அப்ல ஃபார்வேடாகிக்கிட்டேதான் இருக்கும் என்பது தனிக்கதை. காந்தி தாத்தா கால தகவல்கள் சொன்னாகூட பரவாயில்லை. பல பேரு காலாவதியான தகவல்களா போட்டு பொளப்பானுங்க.

வாட்ஸ்அப்பும் வதந்திகளும்-10 வரிகளுக்கு மிகாமல் விடையளி:-

(1x 10 மதிப்பெண்கள்)

வார்த்தைகளைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வாய்கள் என்றால், வதந்திகளை தயாரிக்கும் தொழிற்சாலைகள் வாட்ஸ்அப்கள். பண்டைய காலத்தில் வதந்திகள் ஒற்றர்கள் மூலம் பரப்பப்பட்டது, 18-ம் நூற்றாண்டில் வாய் மூலம் பரப்பப்பட்டது, இப்பொழுது வாட்ஸ்அப் மூலம் பரப்புகிறார்கள். பச்சை தமிழனாய் இருந்தால் ஷேர் செய்யவும், பக்கா இந்தியனாய் இருந்தால் போர் செய்யவும் என்று ஃபார்வேர்ட் மெசேஜ்கள் நாட்டரசன் கோட்டை நாலு பக்கம் ஓட்டை ரேஞ்சுக்கு வருகின்றன. கண்டவுடன் காதல்ங்கிற சினிமா காதல் மாதிரி இதை பார்த்தவுடன் அஞ்சு பேருக்கு ஃபார்வேட் செய்பவர்களுக்கு எட்டு நாட்களுக்குள் பணம் கொட்டும், இல்லை பத்து நாட்களுக்குள் ரத்தம் கக்கி சாவீர்கள் என்று வரும்.

நாமளும் ஐம்பது பேருக்கு அனுப்பிட்டு மண்டைய தேய்ச்சுக்கிட்டு காத்திருப்போம், முடிதான் கொட்டியிருக்கும். உயிரோடு இருக்கிற தலைவரை, நேத்துலேர்ந்து போயிட்டாருன்னும், இல்லாத தலைவர் இடியாப்பம் சாப்பிட்டாருன்னும் இவங்க பரப்புற வதந்தியெல்லாம், வாட்ஸ்அப்புக்கு படிக்க தெரிஞ்சா வெடிச்சே செத்திருக்கும். உண்மையில பல போலியான வாட்ஸ்அப் ஃபார்வேடுகளால்தான் மொத்த உலகமே பேக்வேர்டுல போகுது என்றால் அது மிகையில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x