Published : 29 Oct 2019 03:21 PM
Last Updated : 29 Oct 2019 03:21 PM

சர்வதேச அனிமேஷன் நாள்: என்னவளே பாடும் காதலன்!

ரிஷி

நேற்று என்ன நாள்? திங்கள் என்று சட்டென்று நாள்காட்டியைப் பார்த்துச் சொல்லிவிடுவார்கள் அரச மரத்தடி நாயகர்கள். என்ன நாள் என்பதைக் கண்டுபிடிக்க கூகுள் மயிலேறிவிடுவார்கள் நவீன முப்பாட்டன்கள். பொழுது போகாத பூங்குன்றன்கள் எளிதில் துப்புத்துலக்கிவிடுவார்கள். இதெல்லாம் எங்களுக்குத் தேவையா, நீயே சொல் என்கிறீர்களா, சரி தொடருங்கள்.

சமீபத்தில் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் தேர்தல் முடிவுகளை ஹெலிகாப்டரில் பறந்து பறந்து சொல்லிக்கொண்டிருந்தார் ஊடகர் ஒருவர். ‘செய்தியை அறிய ஹெலிகாப்டரில் சென்றாலென்ன எருமை மாட்டில் சென்றாலென்ன? அதுவா முக்கியம் செய்திதானே முக்கியம்’ என்று சொல்லும் நல்ல புத்தி நாட்டாமைகளே அமைதி காத்துக்கொள்ளுங்கள். பொதுவாக, அமர்ந்துகொண்டும் நடந்துகொண்டும் செய்திவாசிக்கும் மனிதர்கள் ஒரு மாறுதலுக்காகப் பறந்துகொண்டு செய்தி சொல்வதும் புதுமையாகத்தானே இருக்கிறது.

செய்தியில் இல்லாத புதுமையைச் செயலிலாவது காட்டுகிறார்களே என்று திருப்திப்பட வேண்டாமா? இடைத்தேர்தல் வாக்காளர்கள்போல் திருப்தியே இல்லாமல் இருந்தால் எப்படி? தேர்தல் முடிவு செய்திகளிடையே அறிந்த தலைவர்களின் அனிமேஷன் உருவங்கள் ஆடுவதும் குதூகலிப்பதும் தோள்தட்டுவதும் தலையைத் தொங்கப் போட்டு வெட்கப்படுவதும் பார்க்க சுவாரசியமாக இருக்கிறதா, இல்லையா?
இதெல்லாம் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸா, அனிமேஷனா என்று கேட்கிறீர்களா? இரண்டும் ஒன்றுதான். இதனால் கணினி உதவியுடன் உருவங்களை ஆடவைக்கலாம்; ஆட்டிவைக்கலாம்.

அனிமேஷன் படங்களைப் பார்க்கும்போதெல்லாம் ‘ராஜா சின்ன ரோஜா’ படம் நினைவில் வரும். அந்தப் படத்தில் ’ராஜா சின்ன ரோஜாவுடன் காட்டுப் பக்கம் வந்தாராம்’ என்னும் பாடலில் நடிகர்களுடன் அனிமேட்டான விலங்குகளும் நடித்திருக்கும். தமிழில் லைவ் ஆக்‌ஷன் உருவங்களுடன் நடிகர்கள் இணைந்து நடித்த முதல் படம் அதுதான்.

‘காதல’னின் ‘என்னவளே அடி என்னவளே’ பாடலில் பிரபுதேவாவும் நக்மாவும் டேக் ஆஃப் ஆவாங்களே அது அனிமேஷன். இந்த நுட்பம் முன்னரே வந்திருந்தால் ‘சிட்டுக்குருவி’ படத்தின் ‘என் கண்மணி உன் காதலி’ பாடலில் பயன்படுத்தியிருக்கலாம். உலக அளவில் ஃபைண்டிங் நிமோ, டாய் ஸ்டோரி, ரியோ, தி லயன் கிங், கார்ஸ், வால் ஈ, அப் என எத்தனையோ அனிமேஷன் படங்களைப் பார்த்து ரசித்திருக்கிறோம். அனிமேஷன் படக் காட்சிகள் என்றாலே குழந்தைகள், இளைஞர்கள் மனத்தில் மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளும். அதனால்தான் என்னவோ, அனிமேஷன் துறையிலும் இன்று இளைஞர்களே கோலோச்சிக்கொண்டிருக்கிறார்கள். சரி, அதற்கெல்லாம் இப்போது என்ன என்றுதானே கேட்கிறீர்கள்.

சர்வதேச அனிமேஷன் திரைப்படக் கழகத்தினர் அந்த அனிமேஷன் தொழில்நுட்பத்தைக் கொண்டாட ஒரு நாளை 2002-ல் உருவாக்கினார்கள். அந்த நாள் அக்டோபர் 28. அதிலென்ன சிறப்பு என்று கேட்கும் சாக்ரடீஸ்களே, 1892-ல் அந்த நாளில்தான் பாரிஸில் எமீல் ரெனாட் அனிமேஷன் படத்தைத் திரையிட்டுக் காட்டினார். அதை நினைவுகூரத்தான் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். இப்போது சொல்லுங்கள் நேற்று என்ன நாள்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x