Published : 29 Oct 2019 03:18 PM
Last Updated : 29 Oct 2019 03:18 PM

விசில் போடு 03: சிங்கிள் பசங்களின் முரட்டுத் துணை!

‘தோட்டா’ ஜெகன்

பல பசங்களுக்கு ‘லைஃப்’ மேல அக்கறைன்னா, சில பசங்களுக்கு ‘லைஃ’பை விட பைக் மேல அக்கறை. படுத்து தூங்குறப்பக்கூட படுக்கை மேல பைக்கையும் போட்டு தூங்க முடியாதான்னு பரிதாபமா பார்க்கிற பசங்க அவங்க. குறட்டைகூட ஆக்சிலேட்டர விரட்டுற மாதிரிதான் விடுவாங்க. நமக்கு வாழ்க்கைல ஒரு பைக்ன்னா, அவங்களுக்கு வாழ்க்கையே பைக்தான். சொல்லப்போனா பல வறட்டு சிங்கிள் பசங்களின் வாழ்க்கையில் முரட்டு துணையே பைக்தான்.

பைக் செலக்‌ஷன்

நான் பார்க்கிற பொண்ணைதான் கல்யாணம் செய்யணும்னு அப்பா சொன்னாகூட, சில சமயம் பேசாம கட்டிக்குவான். ஆனா, நான் வாங்கி தர பைக்கைதான் வச்சுக்கணும் சொன்னா, உடனே அப்பாவோட முட்டிக்குவான். பொண்ணுங்க புருஷனை ‘செலக்ட்’ பண்ற நேரத்தைவிட புடவை ‘செலக்ட்’ பண்ற நேரம் அதிகம்னா, பொண்ணுங்க புடவை ‘செலக்ட்’ பண்றதைவிட பசங்க பைக்கை ‘செலக்ட்’ பண்ற நேரம் அதிகம்.

பைக் மாடலுக்கு ‘நியூமராலஜி’ பார்த்து, பைக் கம்பெனிக்கு ‘அட்ஸராலஜி’ பார்த்து, நம்மாளு எந்த பைக் வாங்கணும்னு முடிவு பண்றதுக்குள்ள வங்கியில லோனை போட்டு பத்து மாடி கட்டிடம் கட்டிடலாம். அடில ஜாக்கி வச்ச காரு மாதிரி இவங்க ஷோல்டரை லைட்டா தூக்கி ஓட்டுற ஸ்டைலையும், விட்டதுல சுத்துற ‘சீலிங் ஃபேன்’ மாதிரி, ‘சைடு’ல சக்கரம் சுத்த இவங்க ‘வீலிங்’ பண்ற அழகையும் பார்க்கிறது, கிட்டத்தட்ட மழை நேர மாலை வேளையில் மொளகா பஜ்ஜி சாப்பிடுற மாதிரி. பளிச்சுன்னு துடைச்சு வச்ச பைக் கண்ணாடில பசங்க முகம் பார்த்து தலை கோதுறபோது, தென்மேற்கு பருவக்காற்று தேடி வந்து மோதுற மாதிரி நினைப்பாங்கன்னு நினைக்கிறேன்.

பைக் பெயர்கள்

நாட்டுக்கு நல்லது செய்ய பிறந்தவர் காமராஜருன்னா, மாட்டுக்கு நல்லது செய்ய பிறந்தவர் நம்ம ராமராஜன். அவருகூட அவரு மாட்டை அப்படி தழுவியிருக்க மாட்டாரு, இவங்க பைக்கை, தாமிரபரணி தண்ணியே தீரும் அளவுக்கு கழுவி விடுவாங்க. ‘நார்மல்’ நாட்கள்லையே இவங்க பைக் கழுவுறதைப் பார்க்க பொறுமை இருக்காது. இதுல ஆயுதபூஜை, பொங்கல்னு நல்ல நாட்கள் வந்துச்சுன்னா, கிட்டத்தட்ட நடிகைக்கு முடி வெட்டி விடுற மாதிரி அருமையாகவும், நாய்க்கு நகம் வெட்டுற மாதிரி பொறுமையாகவும், ஒரு முழு நாள்ல அரை நாள முடிச்சு விட்டுடுவாங்க.

அவனவன் பிள்ளைக்குப் பேரு வைக்க சோம்பேறித்தனப்பட்டு, பிரச்சாரத்துக்கு வர தலைவருங்களை பேரு வைக்க சொல்றான். நம்ம பைக் புள்ளைங்களோ, பைக்குக்கு பேரு வச்சு பால் சோறு, மன்னிக்க, பெட்ரோல் சோறு ஊட்டிக்கிட்டு இருப்பாங்க. 'டைகருக்கு டயர் மாத்தணும், அர்னால்ட் அதிகமா பெட்ரோல் குடிக்கிறான், ராம்போவுக்கு செல்ப் எடுக்க மாட்டேங்குது, ராக்கிக்கு லைட் எரிய மாட்டிக்குது,' - இது போன்ற வசனங்கள் எல்லாம் பைக் குரூப் பசங்க ‘கேஷுவ’லா பேசிக்கிற விஷயம். பைக்கை ‘ஃபிரெண்டா’ய் நினைக்கிறவங்க பலருன்னா, பைக்கை கூடப் பொறந்த தம்பியாய் பார்த்து குடும்பத்துல குழப்பத்தை உருவாக்குறவன் சிலர். விட்டா ரேஷன் கார்டுல ஆளை சேர்ந்து ஆதார் கார்டு வாங்கினாலும் வாங்கிடுவாங்க.

விதவிதமா ஹாரன்

இன்சூரன்ஸ் பாலிசில இருந்து இந்தியாவோட வெளியுறவுத் துறை பாலிசி வரைக்கும் பல பாலிசிகள் இருந்தாலும், ஒவ்வொருத்தருக்கும் இருக்குது பைக் பாலிசி. உடம்பு சரியில்ல ஊசி போடணும்னு நெருங்கிய நண்பனே கேட்டாலும் ஓசி தரமாட்டாங்க. எவ்வளவு பெரிய சிக்கல்ல சிக்கினாலும் அவசரத்துக்கு டிரிபில்ஸ் போக மாட்டாங்க. பைக்ல முதல ஏத்துற பொண்ணுன்னா அது பொண்டாட்டியாதான் இருக்கணும்னு பொண்ணுங்கள என்ன, புது பைக்கை எலுமிச்சம்பழத்துலகூட ஏத்த மாட்டாங்க.

நம்மாளுங்க பைக்குக்கு வச்சிருக்கிற ஹாரன்களை அந்த ஜப்பான்காரனுங்களாலேகூட கண்டுபிடிக்க முடியாது அருவி கொட்டுற மாதிரி, குருவி கத்துற மாதிரி, குண்டு வெடிக்கிற மாதிரி, கோலி சோடா தெறிக்கிற மாதிரி, ஏன் குமரிமுத்து சிரிக்கிற மாதிரி கூட ஹாரன் வைக்கிறாங்க. வெத்தலையை மென்னு பொளிச்சுன்னு துப்புன மாதிரி, பித்தளையை விளக்கி பளிச்சுன்னு வச்ச மாதிரின்னு பல கலருல பைக்குகள் வந்தாலும், நம்மாளுங்க கலர் கலரா ஸ்டிக்கரை வெட்டி, அதை கண்ணுக்கு தெரியுற இடத்துல எல்லாம் ஒட்டி, கலரான பைக்குக்கே சுகர் வர வச்சிடுவானுங்க.

மனசு தாங்காது

ஒரு வரி விடையிலேர்ந்து ரெண்டு பக்க கட்டுரை வரைக்கும் இவங்க பைக்கோட நம்பர் பிளேட்டுல எழுதாத விஷயமே இல்லை. அந்த சில ‘இன்ச்’ அகல நம்பர் பிளேட்ல சிலப்பதிகாரத்தையே எழுதுனவனெல்லாம் இருக்கான். இப்படி நம்பர் ‘பிளேட்’ல எழுதுற ஆர்வத்தை படிக்கிறப்போ பள்ளிக்கூட நோட்டுல எழுதியிருந்தா, பிரைவேட் பள்ளியில வாத்தியாராகி புள்ளைங்கள மேய்ச்சிருக்கலாம், இல்லன்னா இன்ஜினியராகி ஏதாவது ஐடி கம்பெனில சீட்டை தேய்ச்சிருக்கலாம்.

பைக் பாடில ஒரு கோடு விழுந்தா போதும், குடியிருக்கிற வீட்டுக்கு நடுவுல கவர்மெண்ட் ரோடு வந்த மாதிரி துக்கம் கொண்டாடுவாங்க. அட, பைக் வீல் பஞ்சரானாக்கூட ஆம்புலன்ஸ கூப்பிடலாமா, ஆஸ்பத்திரிக்கு போலாமான்னு திண்டாடுவாங்க. மட்கார்டுல விரிசல் வந்தால் ஏதோ மண்டைல விரிசல் வந்த மாதிரி பதறிடுவாங்க, மழைல நனைஞ்சாகூட ஜலதோஷம் பிடிச்சுடுவோம்ன்னு அலறிடுவாங்க. பிளீச்சிங் பண்ணுன முகத்துல பரு வந்தாக்கூட அவ்வளவு நொடிச்சு போக மாட்டாங்க, ஆனா பைக்ல பார்வைக்கு படாத இடத்துல துரு வந்தாக்கூட பசங்க ஒடிஞ்சு போயிடுவாங்க.

ஐஞ்சு ரூபாய்க்கு விக்கிற பப்பாளியும் சிவப்புதான், ஐம்பது ரூபாய்க்கு விக்கிற தக்காளியும் சிவப்புதான், அதே மாதிரி ஐம்பதாயிரத்துக்கு வாங்குன பைக்கோ, அஞ்சு லட்சத்துக்கு வாங்குன பைக்கோ, வண்டிய விரும்புறவனுக்கு எல்லாமே ஒண்ணுதான். பெத்த அப்பாவைவிட பைக்கை அதிகமா நேசிப்பாங்க, இந்த பைக் புள்ளிங்கோ.

(சத்தம் கேட்கும்)
கட்டுரையாளர்
தொடர்புக்கு: thinkthoatta@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x