

கனி
தொலைக்காட்சித் தொடர்களைவிட வலைத் தொடர்கள் இப்போது ஆழமான உள்ளடக்கத்துடன் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. ‘டைஸ் மீடியா’ தயாரிப்பில் 2017-ல் இந்தியில் வெளியானது ‘வாட் தி ஃபோக்ஸ்’ (What the Folks) என்ற வலைத் தொடர். இன்றைய சமகாலத்தில் குடும்ப உறவுகள் அடைந்திருக்கும் மாறுபட்ட பரிமாணங்களை இந்தத் தொடர் பதிவுசெய்கிறது. இரண்டு சீஸன்களை வெற்றிகரமாக முடித்திருந்த இந்தத் தொடரின் மூன்றாம் சீஸன் தற்போது யூடியூப்பில் வெளியாகிவருகிறது.
நிகில் (வீர் ராஜ்வானி சிங்) – அனிதா (ஆயிஷா சோப்ரா) ஆகிய இருவரும் காதல் திருமண வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களே இந்தத் தொடரின் அடித்தளம். அனிதாவுக்கு 28 வயது. நிகிலுக்கு 26 வயது. இந்த இரண்டு வயது வித்தியாசமெல்லாம் அவர்களின் காதலுக்கோ, திருமணத்துக்கோ தடையாக இல்லை.
ஆனால், அனிதாவின் பெற்றோருக்கு இந்த வயது வித்தியாசம் திருமணத்துக்குப் பிறகும் நெருடலாக இருக்கிறது. அனிதாவின் குடும்பத்தினருடன் பணி நிமித்தமாகத் தங்கவரும் நிகில் எதிர்கொள்ளும் சூழல்களை சீஸன் 1 பதிவுசெய்திருந்தது. மாமியார்-மாமனார்-மருமகன் உறவை நகைச்சுவையுடனும், நடைமுறைச் சவால்களுடன் விளக்கியிருந்த முதல் சீஸனுக்கு ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பிருந்தது.
இந்தத் தொடரின் இரண்டாம் சீஸன் 2018-ல் வெளியானது. இந்த சீஸனில், நிகில் குடும்பத்தினருடன் பொருந்திப்போவதற்கு நவீன மருமகளான அனிதா எதிர்கொள்ளும் சவால்கள் யதார்த்தமாக, ஆழமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன. திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்துவதற்காக டெல்லியில் பார்த்துக்கொண்டிருந்த மனதுக்கு நெருக்கமான பணியை விட்டுவிட்டு, மும்பைக்குவந்து புதிய பணியிடத்திலும், புதிய குடும்ப உறவுகளுடனும் பொருந்திப்போக முடியாமல் தவிக்கும் அனிதாவின் உணர்வுகள் இரண்டாம் சீஸனில் பதிவுசெய்யப்பட்டிருந்தன.
தற்போது, இந்த வலைத் தொடரின் மூன்றாம் சீஸனின் ஐந்து எபிஸோட்கள் யூடியூப்பில் வெளியாகிவருகின்றன. இதுவரை மூன்று எபிஸோட்கள் வெளியாகிவிட்டன. மூன்றாம் சீஸனில், திருமணத்தைப் பற்றி நிகில்-அனிதா இருவரின் பார்வையும் மாறுகிறது. இந்த மாற்றத்தை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை இந்த மூன்றாம் சீஸன் வழக்கமான நகைச்சுவையுடனும் யதார்த்தங்களுடனும் பதிவுசெய்கிறது. தொடரின் அனைத்து எபிஸோட்களிலும் ஆங்கில சப்-டைட்டில்கள் இடம்பெற்றிருக்கின்றன.
தொடரைப் பார்க்க: