Published : 22 Oct 2019 01:07 PM
Last Updated : 22 Oct 2019 01:07 PM

ரசனைகளைக் கலக்கும் ‘கலக்கி’ பாய்ஸ்!

சு. அருண் பிரசாத்

வின்சென்ட் வான் கா-வின் ‘நட்சத்திர இரவு’ ஓவியப் பின்னணியில் ‘பராசக்தி’ ஹீரோ சிவாஜி சிரித்துக்கொண்டிருக்கிறார்; ‘பாரிஸ் நகரில் ஒரு மேற்கூரை’யில் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருக்கிறார் கிறிஸ்டோபர் நோலனின் பேட்மேன்; ‘கைதிகளின் வட்ட’த்துக்கு வெளியே நின்றுகொண்டிருக்கிறார் ‘வட சென்னை’ அன்பு; எட்வர்ட் முன்ச்-ன் புகழ்பெற்ற ‘அலறல்’ ஓவியத்தில் அலறிக்கொண்டிருக்கிறார் ‘அதே கண்கள்’ ஜி.சகுந்தலா; ‘மொந்த்மார்த்ரெவின் இர’வொன்றில் ‘96’ ராமும் ஜானுவும் பேசிச் சிரித்துக்கொண்டிருக்கின்றனர்!

பார்த்தவுடன் திகைப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தும் துல்லியத்துடன் உருவாக்கப்பட்ட இந்தப் படங்களைச் சமூக ஊடகங்களில் கடந்த நாட்களில் நீங்கள் பார்த்திருக்கக்கூடும். புகழ்பெற்ற ஓவியங்களைப் பின்னணியாகக் கொண்டு திரைப்படங்களின் காட்சிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்படும் இந்த நுட்பத்துக்கு ‘மாஷ்-அப்’ (Mash-up) என்று பெயர். இதை ‘கலக்கி’யாக்கி தமிழுக்குத் தந்திருக்கிறார்கள் சென்னையைச் சேர்ந்த சார்லஸ் பிரிட்டோ, முகமது சாலேஹ் என்ற இரண்டு இளைஞர்கள்.

“கடந்த 15 ஆண்டுகளாகத் திரைப்படங்கள் பார்ப்பதை அன்றாட வாழ்வின் ஒரு கடமையாகவே வைத்திருக்கிறேன். மற்ற கலை வடிவங்களுக்கான நுழைவாயிலாக எனக்கு சினிமாதான் இருந்தது” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட சார்லஸ், டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அழகியல் பள்ளியில் பயின்றவர். “நானும் சார்லஸும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். எங்கள் இருவருக்குமே திரைப்படங்கள் மீது காதல் இருந்தது. போட்டோஷாப், மாயா பயிற்சியும் இருந்தது” என்று தன்னைப் பற்றிய அறிமுகத்தோடு பேச்சில் இணைகிறார் சாலேஹ்.

ஹாலிவுட், பாலிவுட் படங்களை வைத்து உருவாக்கப்பட்ட ‘மேஷ்-அப்’களைப் பார்த்த சார்லஸும் சாலேஹ்வும் தென்னிந்தியப் படங்களுக்கு இதைப்போன்று ஏன் செய்து பார்க்கக் கூடாது என்று தோன்றி இருக்கிறது. விளைவு, வான் கா ஓவியத்தைப் பின்னணியாகக் கொண்டு ‘சில்க்’ ஸ்மிதா புன்னகைத்து நிற்கும் ‘கலக்கி’ ஒன்றை அவரது நினைவு நாளான செப்டம்பர் 23 அன்று சமூக ஊடகங்களில் முதன்முதலாக வெளியிட்டனர். அது கவனம் பெற்று அதிக அளவில் பகிரப்பட்டது. புதுமையாகவும் கச்சிதமாகவும் அடுத்தடுத்த நாட்களில் வெளியான ‘கலக்கி’களை எல்லோரும் பரவசத்துடன் பகிர்ந்தனர்.

இவை மிக எளிதில் உருவாக்கப்பட்டிருக்கும் ஓவியங்கள் போல் தோன்றினாலும் வண்ணங்கள், ஓவியம், திரைப்படம், காட்சியமைப்பு ஆகியவை பற்றிய ஆழமான புரிதலே இவ்வளவு துல்லியமான ஓவியங்களை உருவாக்கியிருக்க முடியும். தொடர்ந்து திரைப்படங்கள் பார்த்துவந்திருப்பது, ஓவியங்கள் குறித்த ஆழமான புரிதல் இருவருக்கும் இருப்பது ஆகியவையே இதற்குக் காரணங்கள் என்பதை இருவரின் பேச்சும் வெளிப்படுத்தியது.

“‘கலக்கி’களைப் பார்த்துவிட்டு நிறைய பேர் பாராட்டுகிறார்கள். பலர் எங்களுடன் சேர்ந்து வேலை செய்ய விரும்புகிறார்கள்; சிலர் தங்களுக்காகப் பிரத்யேகமாக உருவாக்கித் தரச் சொல்லி கேட்கிறார்கள்” என்று கலக்கிகளுக்கான வரவேற்பைப் பற்றி கூறுகிறார்கள் இவர்கள். கலக்கியின் அடுத்த முன்னெடுப்புகள் பற்றி பேசும்போது, “ஓவியங்களிலேயே இன்னும் பல பரிசோதனைகளை முயற்சித்துப் பார்க்கவிருக்கிறோம்; பிறகு லித்தோ பிரிண்ட், ஒளிப்படங்களிலும் ‘கலக்கி’யை உருவாக்கும் திட்டம் இருக்கிறது” என்ற கூறிய உற்சாகத்தோடு அடுத்த ‘கலக்கி’யை உருவாக்கத் தயாராகிறார்கள்!

ஃபேஸ்புக் பக்கம்: https://www.facebook.com/kalakkiarts

இன்ஸ்டகிராம் பக்கம்: https://www.instagram.com/kalakkii/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x