Published : 22 Oct 2019 12:33 PM
Last Updated : 22 Oct 2019 12:33 PM

விசில் போடு 02: புதுசுன்னா எலுமிச்சம்பழம்... பழசாச்சுன்னா பேரீச்சம்பழம்!

‘தோட்டா’ ஜெகன்

இந்தியாவில் பலருக்கும் வாழ்வதே பிரச்சினை; சிலருக்குத் தாங்கள் நல்லா வாழ முடியலையேன்னு பிரச்சினை, பலருக்கு அடுத்தவங்க நல்லா வாழறாங்களேன்னு பிரச்சினை. அடுத்தவன் வாழ்க்கையை அளவுகோலா வெச்சுதான் நம்மில் பலரும் நம்ம வாழ்க்கையை அளக்கிறோம். அடுத்தவன் சந்தோஷத்தை அண்ணாந்து பார்த்துக்கிட்டே, நம்ம சந்தோஷத்தை நடுத் தெருவுல தொலைச்சுடுறோம்.

எவன் எக்கேடு கெட்டா என்னன்னு சுயநல முக்காடு போட்டு வாழுறது எப்படித் தப்போ, அதைவிடப் பெரிய தப்பு அடுத்தவங்க தட்டுல கிடக்குற தோசையைப் பார்த்துட்டு நாம ஆசையை வளர்க்கிறது. பர்ஸ் இல்லாம போய் போலீஸ்கிட்ட மாட்டுறதைவிட மிக மோசமானது, பாக்கெட்டுல பணம் இல்லாம போட்டி, பொறாமைகிட்ட மாட்டுறதுதான். பொறாமை என்பது சிலந்தி வலை, அதுல பேராசை வருவது, வலையில் மொத்தமா சிக்கிய நிலைதான்.

எதுக்கு ஒப்பீடு?

யாரும் ‘கண்ட்ரோல்’ செய்ய முடியாத சிம்பு விரல் மாதிரி கிடைச்ச வாழ்க்கையை, அடுத்தவங்க வாழுறதைப் பார்த்து புழுங்கியே, ‘மொட்டை’ ராஜேந்திரன் குரல் மாதிரி மாத்திக்கிட்ட வங்க பல பேரு. தார் ரோட்டுல நடந்து போறவனுக்கு காருல கடந்து போறவன் மேல பொறாமை, காருல கடந்து போறவனுக்கோ மேகத்த கிழிச்சுக்கிட்டு பறந்து போறவன் மேல பொறாமை, பறந்து போறவனுக்கோ பற்றற்ற வாழ்க்கைன்னு எல்லாத்தையும் துறந்து போறவன் மேல பொறாமை. அடுத்தவங்க வாழ்க்கையோட நம்ம வாழ்க்கையை ஒப்பிட்டு வாழ்வது, மல்லாக்கப் படுத்துகிட்டு துப்பிட்டு வாழ்வதை போல.

பக்கத்து வீட்டுக்காரன் நாலாயிரம் ரூபாய்க்கு நாய் வளர்த்தா, இவன் வளர்க்க, பத்தாயிரம் ரூபாய்க்கு ஃபாரின் நாயைத் தேடுறான். எதிர் வீட்டுக்காரன் எங்கேயோ கடனை வாங்கி எட்டுக்குப் பத்து சைசுல வீடு வாங்குனா, நம்மாளு ‘முனிசிபாலிட்டி’க்கிட்ட ரோடு வாங்க பேரம் பேசுறான். தீபாவளிக்குச் சொந்தக்காரன் பட்டுப் புடவை எடுத்தா, இங்க அதுக்குப் போட்டியா எட்டுப் புடவை எடுத்துட்டுதான் சோறே திங்கிறான். கூடச் சுத்துறவன் ரெண்டு நாலு குற்றாலம் பக்கத்துல இருக்கிற சொந்த ஊருக்குப் போனா, இவன் கொடைக்கானல் டூருக்குப் போறான்.

எதுக்குக் கவலை?

மழைக்கால மாலையில் பக்கத்துக்கு வீட்டுல இருந்து அடை சுடுற வாசனை வந்தா, உடனே இங்க வடை சுட ஆரம்பிச்சுடுறான். இவ்வளவு ஏன், அவசியமான ஆதார் கார்டைக்கூட அடுத்தவன் எடுத்துட்டான்னு எடுத்தவங்கதான் அதிகம். பொண்ணைக் கடத்துறது வில்லனோட வேலை, போய்ச் சண்டை செஞ்சு கூட்டிட்டு வர்றது ஹீரோவோட வேலை. அவங்கவங்களுக்கு அமையுறதைச் செஞ்சா நமக்கு எதுக்குப்பா கவலை?

பால்ல போட்டு குடிக்கிற காபி தூள்ல ஆரம்பிச்சு, புள்ளைங்கள படிக்க அனுப்புற ஸ்கூல் வரைக்கும், அடுத்தவன் என்ன செய்யறானோ, அதுக்குக் கீழ கார்பன் பேப்பர் வச்சு காப்பியடிப்பதே பலருக்கும் பொழப்பா போச்சு. பக்கத்து வீட்டுக்காரன் ஒரு பானையை வாங்கினாக்கூட, அதுக்குப் போட்டியா ஒரு யானையை வாங்கி நடு வீட்டுல கட்டலாம்ணுதான் நம்ம மனசு நினைக்குது. நம்ம மண்டை சைஸுக்கு மல்லிப் பூவே போதுங்கிறப்ப, அண்டா சைஸுக்கு இருக்கேன்னு ஆசைப்பட்டு அல்லிப் பூவை வைக்கலாமா? கடல் தண்ணில குளிச்சா, நம்ம உடல் வேணா நனையும், உள்ள இருக்கிற குடல் எப்படி நனையும்? மொத்தத்துல நம்ம சந்தோஷத்தை அடுத்தவன் வாங்குற பொருள்களுக்கும் பணத்துக்கும் அடமானம் வச்சுட்டோம்.

அவரைக்காய் வேகாது

குழந்தைகள் எடுக்கிற மார்க்கோட ஒப்பீடு, கூட வேலை செய்யறவன் சம்பளத்துல ஒப்பீடு, பக்கத்து வீட்டுக்காரன் வாங்குற பொருள்ல ஒப்பீடு, டி.வி.யில் பாடுற பொண்ணோட குரலோட ஒப்பீடு, நோய்க்கு வைத்தியம் பார்க்கிற ஆஸ்பத்திரில ஒப்பீடு, வாய்க்கு ருசியா சாப்பிட போற ஹோட்டல்ல ஒப்பீடு. அடுத்தவன் வாங்குற ஆப்பத்தைப் பார்த்தா நமக்கு எப்படிப் பசி தீர்ந்து ஏப்பம் வரும்? இப்படி அடுத்தவங்களுடன் ஒப்பீடு பண்ணியே மூச்சுப் பிடிச்சு நாகஸ்வரம் வாசிக்கிறதுக்கு, மடியில தூக்கி பிடிச்சு மத்தளம் வாசிச்சுக்கலாம். முட்டிவரை மடிச்சு விட்டாலும் முழுக்கை சட்டை அரைக் கை சட்டையாகாது, அடுப்பே பற்ற வைக்காம, குண்டாவ கிண்டினா அவரைக்காய் வேகாது, உழைப்பே இல்லாம யாரோட வாழ்க்கையும் ‘டாப்’புக்குப் போகாது.

இதுதான் வாழ்க்கை

வாழ்க்கைங்கிறது ஊரே சேர்ந்து இழுக்க, வீதில நிக்கிற தேரு இல்ல, நாம மட்டும் தனியா ஓட்ட வேண்டிய வயல்ல கிடக்கிற ஏரு. அவன்கிட்ட அவ்வளவு இருக்கு, இவன்கிட்ட இவ்வளவு இருக்குன்னு பார்த்துக்கிட்டு வாழுறவன் முட்டாள், நம்மகிட்ட எவ்வளவு இருக்குன்னு பார்க்கிறவன் மனிதன், நம்மகிட்ட எவ்வளவோ இருக்குன்னு நம்புறவன் ஞானி. வாராவாரம் வெள்ளிக்கிழமையானாலே படம் ‘ரிலீஸ்’ பண்ற நடிகையா இருப்பது ஒரு வகை சந்தோஷம்னா, தினம் தினம் கொஞ்சம் நேரம் டிவில முகம் காட்டுற நடிகையா இருப்பதும் ஒரு சந்தோசம்தான்.

புதுசா வாங்கின காருக்கு எலுமிச்சம் பழம், அதுவே அரத பழசாசுன்னா ஈயம் பித்தளைக்குப் பேரிச்சம்பழம், இவ்வளவுதான் வாழ்க்கை. இதுல அடுத்தவங்களைப் பார்த்து வாழும் வாழ்க்கை என்பது அடை மழை யில் உடைகளைக் காயப்போட்ட மாதிரி, ஒரே நப்பாசைதான் இருக்கும். மத்தவங்களுக்குக் கிடைச்சது நமக்கு அமையலைன்னு நினைச்சு வாழ்ந்தா, வாழ்க்கை தப்பாய்த்தான் முடியும்.

(சத்தம் கேட்கும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: thinkthoatta@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x