

என் மகளின் வயது 22. அவள் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறாள். கடந்த ஒரு வருடமாக அவள் மிகக் கோபத்துடன் நடந்துகொள்கிறாள். என்னிடம் சத்தம் போடுகிறாள். தனது வேலை பிடிக்கவில்லை, ஐ.டி. துறைக்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு தனக்கு இல்லை என்கிறாள். தன்னால் இந்தத் துறையில் பெரிதாக எதுவும் செய்ய இயலாது என்கிறாள். ஆனால், அவள் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் இன்ஜினீயரிங் பட்டம் பெற்றுள்ளாள். கல்லூரியில் எல்லாப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கிறாள். கல்லூரியில் சீட்டையும், வேலையையும் தனது திறமையால் சம்பாதித்துக்கொண்டாள்.
கல்லூரியின் முதலாண்டு இறுதியில் உடன் படிக்கும் ஒரு பையனைச் சந்தித்துள்ளாள். அப்போது அவர்களுக்கிடையே பெரிய அளவில் பேச்சு நிகழ்ந்ததில்லை. ஆனால், இறுதி ஆண்டில் அவனிடம் பேசத் தொடங்கியுள்ளாள். அவன் தன்னை மிகவும் விரும்புகிறான் என என் மகள் நினைத்துள்ளாள். ஆனால் அந்தப் பையன் இரு மாதங்களில் வேறொரு பெண்ணிடம் நெருக்கமாகப் பழகியிருக்கிறான். இது அவளை மிகவும் பாதித்துள்ளது. கோபத்தில் சத்தம் போடும்போது, எனக்குப் பிடித்ததையே ஏன் பிறர் எடுத்துக்கொள்கிறார்கள் எனக் கேட்கிறாள்.
அந்தப் பையனுடனான நட்பு அவளைப் பாதித்துள்ளதால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் அவதியுறுகிறாளோ? அந்தப் பையன் இடையிடையே அவளிடம் பேசுவதாகவும் தெரிகிறது. இது விஷயமாக என் மகளுக்கு அறிவுரை சொல்லுங்கள். அவளுடைய கேரியர் தொடர்பான ஆலோசகர்கள் யாரையாவது சந்திக்க வேண்டுமா என்பதையும் சொல்லுங்கள்.
உங்கள் மகளுடைய கோபம் அவருக்குள் பல வருடங்களாக நடந்துகொண்டிருக்கும் போராட்டத்தின் எதிரொலிதான். ‘எனக்குப் பிடித்ததையே ஏன் பிறர் எடுத்துக்கொள்கிறார்கள்?’ என்ற ஒரு வாக்கியம் அவருக்குள் புதைந்து கிடக்கும் ஏமாற்றங்களைத் தெரிவிக்கிறது. சிறு வயது முதல் சில சந்தர்ப்பங்களில் அவருக்குப் பிடித்தவற்றைப் பிறர் எடுத்துக்கொண்டிருந்திருக்கலாம். ‘தன்னுடையது’ என்று சண்டைபோட்டு மீட்டுக்கொள்ளாமல், மனதுக்குள்ளேயே அந்த ஏமாற்றங்களை/ வருத்தங்களைச் சேர்த்து வைத்ததால் இன்று சுமை அவருக்குத் தாளாமல் கோபமாக வெடிக்கிறது.
(குழந்தையாக இருக்கும்போது பல நிகழ்வுகளைக் குழந்தைகள் பார்ப்பார்கள்; அவற்றைத் தவறாகப் புரிந்துகொண்டுவிடுவார்கள். பெரியவர்கள் அந்தத் தவறான புரிந்துகொள்ளுதலை மாற்ற முயலாவிட்டால், தவறான கண்ணோட்டமாக அது நிலைத்துவிடும். இதுதான் உங்கள் மகளுக்கு நடந்திருக்கலாம் என்று ஊகிக்கிறேன். அவருக்குத் தன்னைப் பற்றிய ஒரு சந்தேகம் இருக்கிறது. ‘எனக்கு முடியுமா?’, ‘நான் சரியாகச் செய்கிறேனா?’ என்றெல்லாம் தேவையில்லாத சந்தேகங்கள் ஒரு தாழ்வு மனப்பான்மையால் ஏற்படுகின்றன.
தாழ்வு மனப்பான்மைக்கு மேலும் தீனிபோட்டது, நெருக்கமானவர் என்று இவர் நினைத்தவர், இவரை உதறிவிட்டுப் போன நிகழ்வு. தான் அடைந்த வெற்றிகளையெல்லாம் மறந்துவிட்டார். ஆனால் தோல்விகளை, இழப்புகளைப் பட்டியல் போட்டு வைத்திருக்கிறார். உங்கள் மகளுக்குத் தோழிகள்/ தோழர்கள் உண்டா? அவர்களில் ஒருவரிடமாவது நெருக்கமாக இருந்திருந்தால், மனம் திறந்து பேசியிருப்பார். அப்போது பாரம் குறைந்திருக்கும். உடனடியாக அவருக்குத் தேவை கரியர் ஆலோசனை அல்ல; தன் மனதில் உள்ளதையெல்லாம் கொட்ட, தவறான கண்ணோட்டங்களைச் சரிசெய்து, தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள ஒரு உளவியல் ஆலோசகரின் அல்லது அவரது மரியாதைக்குரிய ஒரு பெரியவரின் வழிகாட்டுதல்.
நான் கல்லூரிப் படிப்பு முடித்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. படிக்கும்போது என்னுடன் பயின்ற ஒருத்தியைக் காதலித்தேன். ஆனால், அது அவளுக்கே தெரியாது. என்னுடைய காதலை இன்னும் சொல்லவில்லை. அவள் என்னைவிட ஒரு வயது மூத்தவள், வேறு ஜாதியைச் சேர்ந்தவள். என் சுக துக்கங்களை அவளுடன் பகிர்ந்துள்ளேன்.என்னை ‘தம்பி தம்பி’என்று அழைத்து வெறுப்பேற்றினாள். எவ்வளவு சீரியசான விஷயமாக இருந்தாலும் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டாள். இது தவிர்த்து, அதிகப்படியாகக் காயப்படுத்திவிட்டு விளையாட்டுக்குத்தான் செய்தேன் என்று கூறுவாள். ‘நீ இப்படிச் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. தயவுசெய்து இப்படி என் மனம் நோகும்படி செய்யாதே’ என்றால் அப்போதைக்கு ‘சரிடா இனி நான் செய்ய மாட்டேன்’ என்று கூறிவிட்டு மறுபடியும் அதையே செய்வாள். நானும் அதைப் பொறுத்துக்கொள்வேன்.
நான் ஒருமுறை ஊருக்குச் சென்றுவிட்டேன். அப்போது பல முறை போன் செய்தாள், குறுந்தகவல் அனுப்பினாள். நான் ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை. அவள் செய்த தவறை நினைத்து வருந்தி அழுதிருக்கிறாள். சக தோழி மூலமாக இது தெரியவந்தது. இவ்வாறு இருப்பவள் என் வாழ்க்கை முழுவதும் வந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். நான் வகுப்பில் வேறு ஒரு பெண்ணைக் காதலிப்பதாக நினைத்தாள். யாரைக் காதலிக்கிறாய் என்று ஐந்து மாதங்களாகக் கேட்டுக்கொண்டிருக்கிறாள். ஆனால், நான் கூறவில்லை.இப்போது நாங்கள் படிப்பை முடித்துவிட்டோம். ஆனால், இப்போதெல்லாம் போன் செய்வதே இல்லை. ஒழுங்காகப் பேச மறுக்கிறாள். அவள் என்னுடன் கடமைக்குப் பழகினாளோ என்று தோன்றுகிறது. ஆனால், நான் இன்றும் போன் செய்தால் ‘உன்னுடைய காதலி யார்?’ என்று கேட்பாள். ‘எதற்குக் கேட்கிறாய்’ என்று கேட்டால் ‘தெரிந்துகொள்ளலாம் என்றுதான் கேட்கிறேன்’என்கிறாள்.
அவள் இப்போதெல்லாம் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அவளிடம் காதலைச் சொல்லலாமா என்று இருக்கும்போது என் மனம் புண்படும்படி அவள் நடந்துகொள்வதுதான் என் கண் முன் வந்து நிற்கிறது.அவளுடைய மன நிலையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், நான் இன்னும் அவளைக் காதலிக்கிறேன். அவளோ பழக்கமில்லாதவள் போல் இப்போது பேசுகிறாள். என்ன செய்வது என்று எனக்கு விளங்கவில்லை. மனக்கவலையும், குழப்பமுமே அதிகமாக இருக்கிறது. என் காதலைச் சொல்லலாமா, வேண்டாமா?
பெண்ணின் மனஆழத்தை யாராலும் அளக்க முடியாது என்பார்கள். ஆனால் அவளுக்குள் புதைந்து கிடப்பதைப் பற்றி யோசித்துக்கொண்டே சில வருடங்களாக ஒரே இடத்தில் நிற்கிறீர்களே!! உடனடியாகச் செயல்படுங்கள். நீங்கள் காதலிப்பதாகச் சொல்லி, அவர் மறுத்துவிட்டால், இல்லை என்ற பதிலை ஏற்க முடியாதது மட்டுமல்ல, இந்த நட்பையும் இழக்க நேரிடலாம் என்று பயந்து தயங்குகிறீர்களா?
அவர் சிலமுறை உங்களிடம் ‘நீ யாரைக் காதலிக்கிறாய்?’ என்று தன் பெயரைச் சொல்லுவீர்கள் என்கிற எதிர்பார்ப்பில் கேட்டிருக்கலாம்! நல்ல வாய்ப்பை ஒருமுறை கோட்டைவிட்டுவிட்டீர்கள்! இன்னும் தாமதிக்கத் தாமதிக்க அவர் கைநழுவிப்போக வாய்ப்புண்டு! உங்களால் நேரிடையாகச் சொல்ல முடியவில்லை. ஒரு கடிதத்தில் எல்லாவற்றையும் சொல்லுங்கள். அல்லது ஒரு நண்பரைத் தூது அனுப்புங்கள். தவறவிட்டுவிட்டேனே என்று பின்னால் வருந்துவதைவிட, இப்போது தோல்வியைச் சந்தித்தாலும், ‘சொல்லிவிட்டோம்’ என்ற சமாதானமாவது கிடைக்குமல்லவா?
ஒருவேளை அவரும் பச்சைக்கொடி காட்டிவிட்டாரென்றால், இரு குடும்பங்களின் எதிர்ப்பைச் சமாளிக்கும் தைரியம் இருவருக்கும் உண்டா? யோசித்துக்கொள்ளுங்கள். நாம் பிடிவாதமாக நின்றால், அவர்கள் இறங்கி வருவார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டுவிடாதீர்கள். சில சமயம் அது நடப்பதில்லை!!
இத்தனையையும் தாண்டி வந்தாலும், அடிக்கடி உங்களுக்குப் பிடிக்காதமாதிரி அவர் நடந்துகொள்கிறாரே-அதற்கு என்ன தீர்வு? ஆரம்ப கால மோகம் தீர்ந்தவுடன் துணையிடம் உள்ள எதிர்மறைக் குணங்கள் எரிச்சலை உண்டுபண்ண ஆரம்பிக்கும். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். உண்டா, இல்லையா என்று நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள் முதலில்!
உங்களுக்கு ஒரு தனிப்பட்ட அறிவுரை: எந்த விஷயத்தையும் பிறரிடம் சொல்ல இவ்வளவு தயக்கம் தேவையே இல்லை. கால தாமதத்தால் பல இழப்புகள் நேரலாம். தயக்கமில்லாமல் தெளிவாகப் பேச, பயிற்சி வகுப்புகளில் சேரவும்.
உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in