Last Updated : 03 Jul, 2015 01:05 PM

 

Published : 03 Jul 2015 01:05 PM
Last Updated : 03 Jul 2015 01:05 PM

அசத்தல் அண்டர்வாட்டர் ஷூட்

பேச்சலர்களை ஃபேமிலிக்குள் தள்ளிவிடும் கலாட்டாக்கள் நிறைந்த நிகழ்ச்சி கல்யாணம். அந்த நாள் தங்களது நினைவில் எப்போதுமே இருக்க வேண்டுமென்று மணமக்கள் விரும்புகிறார்கள். ஆகவே புதுவிதமான பல டிரெண்டுகள் கல்யாண நிகழ்ச்சிகளில் இடம்பெற்று அதைத் தனித்துவமாக்கிவருகின்றன. யாரைக் கல்யாணம் பண்ண வேண்டும், தன் கல்யாணத்தை எங்கே நடத்த வேண்டும் என்றெல்லாம் இளம் பருவத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் மனத்தின் பலவித ஐடியாக்கள் வந்துகொண்டேயிருக்கும்.

அதிலும் பிறரது கல்யாணத்தைவிட வித்தியாசமாக ஊரார் பேசும்படி தனது கல்யாணத்தை நடத்திட வேண்டும் என்ற ஆசையும் அவர்களுக்கு இருக்கவே செய்கிறது. இதில் ஆண், பெண் என்ற பேதமே கிடையாது. இரு தரப்பினருக்கும் கல்யாண விஷயத்தில் தனித்தனியான ஆசைகளும் கனவுகளும் இருக்கும். அதை நிறைவேற்ற தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறார்கள்.

கல்யாண நாளின்போது எடுக்கப் படும் வீடியோவும் ஃபோட்டோவும் அந்த நாளை நினைவுபடுத்தியபடியே இருக்கும். அதைப் பார்க்கும்போது மனம் ஒவ்வொரு முறையும் புத்துணர்ச்சி பெறும். அதில் புதுமையான விஷயங்கள் இருந்தால்தான் அவற்றை ரசிக்க முடியும். ஆகவே ஒரே இடத்தில் மணமக்களை நிறுத்திவைத்து ஃபோட்டோ எடுக்கும் பழைய வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மதிப்பை இழந்துவருகிறது. இப்போதெல்லாம் ஃபோட்டோகிராபர்கள் ஒரு சினிமாவின் ஹீரோ ஹீரோயின் போல மணமகனையும் மணமகளையும் மாற்றிவிடுகிறார்கள். அதற்குத் தேவையான மேக்கப்களை மணமக்கள் போட்டுக்கொள்கிறார்கள். ஆகவே மாறிவரும் டெக்னாலஜியைப் பயன்படுத்திக்கொண்டு ஃபோட்டோக்களும் நவீனமாகிக்கொண்டேவருகின்றன.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் ஆதம் ஓப்ரிஸ் (Adam Opris) என்னும் ஃபோட்டோகிராபர், நிலத்தில் மணமக்களை நிறுத்தி போட்டோ எடுத்தது அலுத்துப் போய் அவர்களை நீருக்கடியில் அலையவிட்டு ஃபோட்டோக்களை எடுத்தார். பார்ப்பதற்குப் பரவசம் தரும் அந்த போட்டோக்களையோ அவை எடுக்கப்பட்ட தருணத்தையோ மணமக்கள் மறக்கவே முடியாது. ஏனெனில் அதில் கிடைத்த சந்தோஷத்துக்கு அளவே இல்லையாம்.

அதே போன்ற உத்தியைப் பயன் படுத்தி கேரளாவில் கொச்சி அருகே ஃபோட்டோகிராபர் ரிச்சர்டு ஆண்டனி என்பவர் தம்பதிகளைத் தண்ணீர்க்கடியில் கொண்டுசென்று படமெடுத்து அசத்துகிறார். கேரளாவில் படகு வீடுகளில் திருமணம் நடத்துவது வழக்கம். ஆனால் நீருக்கடியில் ஃபோட்டோ என்பது அவர்களுக்குப் புதுவிதமான உற்சாகம் தரும் அனுபவமே. இரண்டு வருடங்களுக்கு முன்னர் தன் நண்பர் ஒருவரின் திருமணத்தின்போது இந்த உத்தியை அவர் பயன்படுத்தியுள்ளார். அதற்குப் பின்னர் அவருக்குக் கிடைத்த வரவேற்பால் அவர் அண்டர்வாட்டர் ஷூட்களில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார். இதுவரை இப்படியான சுமார் 20 ஷூட்களை அவர் நடத்தியிருக்கிறார்.

குளுமையான குளத்தின் நீருக்கடியில் சென்று புதுமணத் தம்பதிகளை ஃபோட்டோ எடுக்கும்போது அவர்கள் படு உற்சாகமாகிவிடுகிறார்கள் என்கிறார் அவர். ஆனால் இப்படி ஃபோட்டோ எடுப்பது சாதாரண விஷயமில்லை. அதற்கு நிறையப் பயிற்சியும், பிரத்யேக உபகரணங்களும் தேவை. ஆகவே சாதாரண ஃபோட்டோ எடுப்பதைவிட இதற்கு அதிக செலவாகும். நீருக்கடியில் படமெடுக்க உதவும் உபகரணத்துக்கே ஆறு லட்சம் ரூபாய் செலவு பிடிக்கும் என்கிறார் அவர். திருமண உடையிலேயே சுமார் இரண்டு மணி நேரம் மணமக்களை நீருக்கடியில் கொண்டுபோய் விதவிதமாக ஃபோட்டோ எடுத்துவருகிறார் அவர்.

திருமண நாளின் இந்த அண்டர்வாட்டர் ஷூட்டும் அதனால் கிடைக்கும் ஃபோட்டோக்களும் மணமக்களின் தொடக்க நாளை மிகவும் ருசிகரமான நாளாக மாற்றிவிடுகின்றன. அதனால் அதற்கு ஆகும் செலவைப் பற்றிய கவலையின்றி இப்படியான ஃபோட்டோ ஷூட்களை மணமக்கள் விரும்புகிறார்கள் என்கிறார் ரிச்சர்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x