Published : 15 Oct 2019 15:11 pm

Updated : 15 Oct 2019 15:11 pm

 

Published : 15 Oct 2019 03:11 PM
Last Updated : 15 Oct 2019 03:11 PM

புள்ளிங்கோ 3.0!

pullingo

கிருத்திக்

இளசுங்களோட நேஷனல் ஆன்தமே புள்ளிங்கோ... கானா பாட்டுதான். அந்தப் பாட்டு ஒரு பக்கம் ஹிட்டுன்னா, இன்னொரு பக்கம் அந்தப் பாட்டுல வர்ற 'புள்ளிங்கோ'ன்னா யாருன்னு ஆராய்ச்சி பண்ணி நம்மாளுங்க மீம் போட்டு, அதுக்கும் மேல லைக் வாங்கிக்கிட்டு இருக்கானுங்க.


வடிவேலு, செந்தில்ல ஆரம்பிச்சி எம்ஜிஆர், சிவாஜிக்குப் போய், கடைசியில எடப்பாடிக்கும், மோடிக்குமே புள்ளிங்கோ கெட் அப் போட்டு ஷேர் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அதோட நிற்கிறானுங்களா? இல்லியே... முப்பதைத் தாண்டுன முதுமகன்கள் எல்லாம், அந்தப் பையன்களோட பாட்டுக்கு பொழிப்புரை எழுதி, "ச்சே இந்தக் காலத்துப் பசங்க எல்லாம் ரொம்ப மோசம்பா"ன்னு விளக்கம் கொடுக்குறாங்க.

ஏழெட்டு வருஷத்துக்கு முன்னாடி காலேஜ் முடிச்சி, இப்ப கல்யாணமும் முடிச்சிட்ட அண்ணன் ஒருத்தர் என்ன சொன்னாரு தெரியுமா? "தலைமுடியைக் கண்ட மேனிக்கு வெட்டிக்கிட்டு, அதுக்கு கண்றாவியா கலர் பண்ணிக்கிட்டு, பேண்டை ஒழுங்கா போடாம மேல உள்ளாடையும், கீழ கெண்டைக்காலும் தெரியுற மாரி அரைகுறையா போட்டுக்கிட்டு (அதோட பேரு ஜாக்கர்ஸ்யா...), கலர் கலரா ஷூ மாட்டிக்கிட்டு திரியுற தறுதலைங்கதான் புள்ளிங்கோ. ஏன்டா இப்படித் தறுதலையா சுத்துறீங்க, தெருவுல கத்திக்கிட்டுத் திரியுறீங்கன்னு கேட்டா நம்ம வாயிலேயே குத்துவானுங்களாம்... வெளங்குவானுங்களா?"ன்னு சாபமே வுட்டாரு.

பெருசுங்க எப்பவுமே அப்படித்தான். அதனால இன்னைக்குத் தேதியில எம்.இ. படிக்கிற மாணவன்கிட்ட கருத்து கேட்டேன். "யாரால் உலகுக்குத் தொல்லை இல்லையோ... உலகால் யார் தொல்லை எய்துவதில்லையோ... மகிழ்ச்சி, அச்சம், சினம், கலக்கம் இவைகளில் இருந்து யார் விடுபட்டவனோ... அவனே எனக்கு இனியவன் என்று கீதையில் கிருஷ்ணபகவான் சொல்லியிருக்கார். இதை எல்லாம் இந்தப் புள்ளிங்கோக்களுக்குச் சொல்லிக்கொடுக்கணும்" என்றான் அந்தப் பையன். ஆத்தி அதுக்குள்ள அண்ணா யுனிவர்சிட்டியில பகவத்கீதை பாடம் எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க போலன்னு பதறிச் சிதறிட்டேன்.

புள்ளிங்கோவை இப்படி கலாய்க்கிறவங்களும், அறிவுரைகள அள்ளிவிடுறவங்களும் யாரு? நைன்டீன், எய்ட்டீன் கிட்ஸ். அடேய்களா நீங்க மட்டும் என்ன ஒழுக்கமா? "பஸ்லேயும் தொங்கிடுவோம், ட்ரைன்லேயும் தொங்கிடுவோம் டிக்கெட் மட்டும் எடுக்கவே மாட்டோம்"னே பாட்டுப் பாடிக்கிட்டு திரிஞ்ச பயலுகதானே நீங்க?
பள்ளிக்கூடத்துல பூராப் பேரும் ஒழுங்கா முடிவெட்டிக்கிட்டு வந்தா இவனுங்க மட்டும் தலைக்கு எண்ணெய் வெக்காம பரட்டையாட்டம் சுத்துனதை எல்லாம் மறந்திட்டானுங்க போல.

ஸ்கூல் யூனிபார்ம்லகூட ஏதாவது ஒரு ஒட்டுத்துணியை வெச்சி தச்சி தங்களை வித்தியாசமா காட்டிக்கிட்டாய்ங்க. யூனிஃபார்மா 'ராயல் ப்ளு' பேன்ட் போடச் சொன்னா, இவனுங்க மட்டும் ஜீன்ஸ் போட்டுக்கிட்டுத் திரிஞ்சாய்ங்க. அந்த பேன்ட்லையும் கால் பாதம் பக்கத்துல சம்பந்தமே இல்லாம ஜிப் வெச்சி தச்சி காமெடி பண்ணுனாங்க. சட்டையில பாதியை ‘டக் இன்’ பண்ணிட்டு, மீதிப் பாதியை வெளியே எடுத்துவிட்டுருப்பாய்ங்க.

பெரிய சைஸ் பக்கிள், அதுலேயும் துப்பாக்கி, மண்டையோடு மாதிரியான ஐட்டங்கள்னு பெல்ட்டையே டெரராத்தான் போட்டாய்ங்க. கௌதம் மேனன் படத்து ஹீரோ மாதிரி கைல வளையம் போடுறது, ‘அலைபாயுதே’ மாதவன் மாதிரி உள்ள டீசர்ட் போட்டுக்கிட்டு அதுக்கு மேல சட்டை போடுறது, சமயத்துல அந்த சட்டையையும் கழற்றி இடுப்பில் கட்டிக்கிறது, காதுல ஹெட்போனோட பைக் ஓட்டுறதுன்னு அவங்க அலும்பு தாங்காது.

ஸ்டூடண்ட் எலெக்‌ஷன்கிற பேர்ல வெட்டுக் குத்துல இறங்குனது, 'பஸ் டே'ங்கிற பேர்ல அலப்பறை பண்ணுனது, அதுலேயும் 'ரூட் தல'ன்னு பந்தா காட்டுனது எல்லாம் யாரு? அந்தக் காலத்து புள்ளிங்கோதானே? அதை எல்லாம் கேள்வி கேட்ட வாத்தியாரைப் பார்த்து, "இருபது வயதில் ஆடாமல்... அறுபதில் ஆடி என்ன பயன்?"ன்னு கேட்டது மறந்து போச்சா? இப்ப வயசாகிடுச்சி பக்குவமாப் பேசுறாய்ங்க. அந்தக் காலத்துல வித்தியாசமா சுத்துன பசங்க எல்லாம் இப்ப உருப்படாமலா போயிட்டாங்க? வாழ்க்கையில சில பல அடிகள், அனுபவங்களுக்குப் பிறகு நல்லபடியா செட்டிலாகிட்டாங்கன்னுதான் நான் நினைக்குறேன்.

யாரையோ ஃபாலோ பண்ண முயற்சி பண்றதுதான் அந்தந்தக் காலத்துப் புள்ளிங்கோ வழக்கம். நீங்க ஆர்.எக்ஸ். 100 ஓட்டுனா, இன்னைக்குப் பசங்க டியோ ஓட்டுறான்... அவ்வளவு தானே வித்தியாசம்? ஆகவே, பெரியோர்களே தாய்மார்களே... உங்களோட 3.0 வெர்சன் தான் 'புள்ளிங்கோ' என்பதைச் சொல்லி விடைபெறுகிறேன், நன்றி வணக்கம்.

அன்பு வாசகர்களே....


வரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசைபுள்ளிங்கோநைன்டீன் கிட்ஸ்எய்ட்டீன் கிட்ஸ்Pullingoஎம்ஜிஆர்சிவாஜி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author