Published : 15 Oct 2019 03:01 PM
Last Updated : 15 Oct 2019 03:01 PM

எங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்!

மிது

‘ஏ கும்பலாக சுத்துவோம்,
நாங்க அய்யோ அம்மானு
கத்துவோம்
கத்துறேன்னு கேட்டா உன்னை வாயிலேயே குத்துவோம்...
எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்’

இந்தக் கானா பாடல் சமூக ஊடகங்களில் சமீபத்தில் உருவாக்கிய பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. 45 கோடிக்கு மேல் இந்தப் பாடலைப் பார்த்திருக்கிறார்கள். அதிலும் ‘எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்’ என்ற வாக்கியமும் ‘புள்ளிங்கோ’ என்ற வார்த்தையும் வைரலான விதம் சுவாரசியமானது! சில மாதங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் நேசமணி ஹிட் அடித்தது. நேசமணிக்குப் பிறகு சமூக ஊடக உலகம் அமைதியாகப் போய்க்கொண்டிருக்கிறதே என்று நினைத்த வேளையில், திரும்பிவந்துட்டேன் என்பதைப் போல் ‘புள்ளிங்கோ’ வந்துசேர்ந்துள்ளது. கானா பாடலில் மூலம் அந்த வார்த்தை பிரபலமானது முதல் அதை வைத்து அரசியலில் ஆரம்பித்து அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள்வரை அனைத்துக்கும் ‘புள்ளிங்கோ’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி மீம்ஸ்களை மீம்ஸ் கிரியேட்டர்கள் உருவாக்கித் தள்ளிவிட்டனர்.

பசங்க என்ற அர்த்தம் தரும், புள்ளைங்க என்று வட சென்னையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் வார்த்தைத்தான் புள்ளிங்கோ என்றாகி, இப்போது சமூக ஊடகங்களில் டிரெண்ட் அடித்திருக்கிறது என்று அந்த வார்த்தைப் பற்றிச் சமூக ஊடகங்களில் விளக்கங்களை அள்ளிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் புள்ளிங்கோ என்றால் யார் என்று ஒவ்வொரு வகையாகச் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். புள்ளிங்கோ வார்த்தையோடு சேர்ந்து ஒரு பக்க ஹேர் ஸ்டைல், டியோ பைக், க்ராக்ஸ் ஷூஸ் போன்ற அம்சங்களும் இப்போது இளைஞர்களின் டிரெண்டாக மாறியிருக்கின்றன. இதைப் பற்றி இணையத்தில் தேடினால், பல சுவாரசியமான விஷயங்கள் கொட்டுகின்றன.

“புள்ளிங்கோ என்பது பசங்களும் பொண்ணுங்களும் ஸ்டைலாக கலர் கிளாஸ் அணிந்துகொண்டு, ஜீன்ஸ், பல கலர்களில் டீஷர்ட் போட்டுக்கிட்டு சுத்துறவங்களே புள்ளிங்கோ. இந்தப் புள்ளிங்கோ லோக்கலில் சுற்ற டியோ ஸ்கூட்டர் வைத்திருப்பார்கள். புள்ளிங்கோ நான்கு வகைப்படுவார்கள். படிச்ச புள்ளிங்கோ, முரட்டுப் புள்ளிங்கோ, விஐபி புள்ளிங்கோ, டிக்டாக் புள்ளிங்கோ, சோஷியல் மீடியா புள்ளிங்கோ. இத்தனை புள்ளிங்கோ இருந்தாலும் இதெல்லாம் நிஜ புள்ளிங்கோ கிடையாது. புள்ளிங்கோ என்பவர்கள் அவென்ஜர்ஸ். அவர்களுக்கு எல்லையும் கிடையாது; முடிவும் கிடையாது” என்று சோஷியல் மீடியாவில் சஞ்சித் என்ற இளைஞர் மாய்ந்து மாய்ந்து எழுதித் தள்ளியிருக்கிறார்.

இதுகூடப் பராவாயில்லை. அடுத்தவர்களின் பொழுதுபோக்குக்காக முடியைத் தியாகம் செய்யும் டிக்டாக் காமெடியன்களே புள்ளிங்கோ என்று ஒரு முரட்டுப் புள்ளிங்கோ விளக்கம் அளித்திருக்கிறார். முதல் புள்ளிங்கோ யார் என்று தேடி பார்த்தால், ‘ஜெய்ஹிந்த்’ படத்தில் கீரிப்புள்ளை தலையுடன் நடிகர் செந்தில் தோன்றியதுதான் முதல் புள்ளிங்கோ என்று சமூக ஊடங்களில் சீரியஸாகப் பேசுகிறார்கள். இதுபோன்ற புள்ளிங்கோக்களை மால்கள் பக்கம் அதிகம் பார்க்கலாம் என்று விளக்கம் வேறு!

எல்லாமே சரிதான். புள்ளிங்கோ என்றால் என்னதான்பா அர்த்தம்? “நண்பன் என்று அர்த்தம். எப்பவும் உடன் இருப்பவனே புள்ளிங்கோ, நண்பனுக்கு ஒன்று என்றால், உயிரையும் கொடுப்பவனே புள்ளிங்கோ. எப்போதும் நான்கு புள்ளிங்களோடு இருந்தால் அந்த இடமே கலகலப்பாகிவிடும். கல்லூரி தொடங்கி சினிமா, பீச், மால் என எல்லா இடங்களுக்கும் புள்ளிங்களோடு சுற்றிவந்தால் நேரம் போவதே தெரியாது. நண்பன் என்பதைத் தூய தமிழில் சொல்றதைவிட புள்ளிங்கோ என்று அழைத்துப் பாருங்க, சும்மா மெர்சலா இருக்கும்” என்று உரக்கச் சொல்கிறார்கள் சென்னைப் புள்ளிங்கோக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x