Published : 15 Oct 2019 02:56 PM
Last Updated : 15 Oct 2019 02:56 PM

விசில் போடு 01: சென்னையில் ஒரு டிராபிக் காலம்!

தோட்டா ஜெகன்

ஒரே ஒரு கேரக்டரை வச்சு பார்த்திபன் தந்தது ‘ஒத்த செருப்பு’ன்னா, ஒரே ஒரு கேரக்டர் வந்ததால ஒட்டுமொத்த சென்னைக்கும் வந்தது மொத்தக் கடுப்பு. பாதுகாப்பு, கெடுபிடின்னு நம்மாளுங்க செஞ்சதெல்லாம் பாடாவதி கெடுபுடி. குக்கருல சோறு வச்சா குக்கரு தானே விசிலடிக்கணும், கூர்க்கா ஏன்டா விசிலடிக்கனுங்கிற கதையா, சீன அதிபர் மீனம்பாக்கம் வந்ததுக்கு, புரசைவாக்கத்துல வாட்டர்கேன் போடுறவருல இருந்து, கோடம்பாக்கத்துல குவாட்டர் வாங்கப்போறவரு வரைக்கும் டார்ச்சர் பண்ணிட்டாங்க.

சீன அதிபரோட காரு பல்லாவரத்துக்கு இண்டிகேட்டர் போட்டதுக்கு, ராயபுரத்துல டிராபிக்க ஸ்டாப் பண்ணி ஆக்சிலேட்டரை அமத்திட்டாங்க. தாம்பரத்துல இருந்து நொண்டி நொண்டி போனாக்கூட ரெண்டு நாளுல கிண்டி போயிடலாம், ஆனா இவங்க போட்ட ‘டேக் டைவர்’சனுக்கு வண்டிய விட்டா, காந்தி உப்புச் சத்தியாகிரகம் செஞ்ச தண்டிக்கு தப்பாம போயிடலாம். ‘அசுரன்’ தனுஷ்கூட அம்பது கிலோமீட்டர் தான் சுத்தியிருப்பாரு, அஞ்சு கிலோமீட்டர் தூரத்துல இருக்கிற இடத்துக்கு போக ஈரோட்டுக்கு ரயிலேறி எக்மோர் ஸ்டேஷன் வந்து ஆட்டோ புடிக்கணும் போலருக்கு.

மீனம்பாக்கம் முதல் மாமல்லபுரம் வரை உள்ள ஏரியாவுல இரண்டு அடுக்கு மாடி இருந்தாலே சொடக்கு மேல சொடக்கு போட்டு செக்கிங் பண்றங்க; மீனவர்கள் நாலு நாளைக்கு மீன் பிடிக்க போகக் கூடாதுன்னு எடக்கு மேல முடக்கு பண்றங்க. பதினைஞ்சாயிரம் போலீசை பந்தோபஸ்துக்கு போட்டுட்டு, நாம நம்ம தோஸ்த்தோட பீச்சுக்கு போனாக்கூட விரட்டுறாங்க.

அய்யா, சாப்பாட்டுக்கு போடுறது வாழையிலை, சாப்பிட்ட பிறகு போடுறது வெத்தலை; ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’மெல்லாம் தப்பிச்சுக்குவாங்க, ஆனா ‘ஒர்க்’ பண்ணிட்டு ‘ஹோம்’ வரவங்க என்ன செய்வாங்க? பெருமாளே மொட்டை போட்டிருக்காறாம், இதுல பூசாரி ‘புள்ளிங்கோ’ கட்டிங் பண்ணியிருக்காராங்கிற கதையா, ஏற்கெனவே இங்க டிராஃபிக் அக்கபோரு, இதுல சாலை மார்க்கமாக செல்லும் சீன அதிபரை வரவேற்பதற்காக 35 இடங்களில் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாம். கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம்னு ஆட வைக்க கம்பெல் பண்ணி கும்பலை கூட்டுறதுக்கு, சீனாக்காரங்களுக்கு சீட்டாட்டம் சொல்லி தந்தா காருக்குள்ளயே கார்டு தேடிக்கிட்டு கம்முன்னு போயிருப்பாங்க.

‘வாழ்வோடு போராட்டம் இங்கே, இதில் வாழ்கின்ற நிமிஷங்கள் எங்கேன்னு’ வைரமுத்து கேட்ட மாதிரி, வேலைக்கு ஓடுவதே வேளாவேளை சோறுக்குதான்னு மாறிப்போன காலத்துல, சீன அதிபருக்கு நாங்க எங்கய்யா தொந்தரவு தர போறோம்? ‘பாப் சாங்’ ‘சூப் சாங்’னு பல வகை பாடல்கள் இருக்கிறப்ப ‘பீப் சாங்’ பாட நாங்க என்ன சிம்புவாய்யா?
வீக் டேய்ஸ்ன்னா வெஜ் பிரியாணி, வீக் எண்ட்னா தாஜ் பிரியாணி, பைசா இருந்தா பாட்டில் வாட்டரு, பைசா இல்லாட்டி பாக்கெட் வாட்டருன்னு எந்த வம்பில்லாத சிம்பிளான வாழ்க்கைதான் சென்னைல பலருக்கும். இதுல சீன அதிபர் போன ரோட்டுல புள்ளி வச்சு கோலம் போட நேரமில்லை எவருக்கும்.

வெயில் காயுற காடுகளில் மேயுற மாடுகளுக்கு பாயுற நாயை காவலுக்கு வச்சா, அது ஒரு கருத்தாய் போகும். ஆனா, வேகுற பரோட்டாவை எடுத்து சாகுறவன் வாயில வச்சா மட்டும் போகுற உசிரு பொறுத்த போகும்’னு அந்தமான் பக்கம் ஒரு அருமையான பழமொழி உண்டு. அவனவன் சொந்த வீட்டுல மக்களுக்கே சோறு போட ஓடுறான். இதுல ஏதோ நாட்டு தலைவர் வந்ததுக்கு எதுக்கு குச்சிப்புடி ஆடுறான்?
அதனால அடுத்த தடவை பெரிய தலைவருங்க வந்தா, மக்கள் அதிகம் புழங்குற ரோட்டையெல்லாம் பூட்டி வைக்காம, பொறுப்பான இடமா தேர்வு செஞ்சு மீட்டிங் வைங்க. யாருக்கும் தொந்தரவு தராம வாழுங்க, அஃப்கோர்ஸ் பெட்டர் ஐடியா வேணும்னா மதுரை விஞ்ஞானிகிட்ட கேளுங்க.

தோட்டா ஜெகன்

கரூரைச் சேர்ந்த ஜெகன், ‘தோட்டா’ என்ற புனைப் பெயரில் சமூக வலைதளங்களில் இயங்கிவருகிறார். ‘ஆல்தோட்ட பூபதி’ என்ற பெயரிலும் எழுதுவது வழக்கம். அவர் எழுதிய ‘குட்டிச்சுவர் சிந்தனைகள்’, ‘ட்விட்டர் மொழி’ ஆகிய தொடர்கள் புத்தகமாகவும் வெளியாகியுள்ளன.

(சத்தம் கேட்கும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: thinkthoatta@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x