

யுகன்
திரை இசைப் பாடல்களை நேரடியாகக் கலைஞர்களைக் கொண்டு மேடையில் நிகழ்த்தப்படும் நிகழ்ச்சிகளே தற்போது குறைந்துவருகின்றன. அப்படியே நடத்தினாலும் அதில் ஏதாவது புதுமை இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இளம் தலைமுறை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இளைஞர்களுக்கு தற்போது இசையின் மீதான ஆர்வம் அதிகரி்த்திருக்கிறது. ஆனால், அவர்கள் இசையை கற்றுக் கொள்வதற்கும் பயிற்சி செய்வதற்கும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் வெவ்வேறு இடங்களைத் தேடி ஓடவேண்டியிருக்கிறது.
இந்தக் குறையைப் போக்கும் வகையில், முறையாக இசையைக் கற்றுக்கொள்வதற்கும், நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும், ஒலிப்பதிவு செய்வதற்கும், படப்பிடிப்பு செய்வதற்கும் ஒரே கூரையின்கீழ் ‘ஆஃப்பீட்’ என்னும் அமைப்பை பின்னணிப் பாடகர் கார்த்திக், விஜய், ஒலிப்பதிவு பொறியாளர் ஆதித்யா ஆகியோர் இணைந்து உருவாக்கியிருக்கின்றனர்.
அதன் தொடக்கமாக அண்மையில் பல பாணி இசைகளின் கூட்டணியாக ‘மாஷ்அப்’ என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ‘ராக் அண்ட் ரோல்’ பாணியில் ஆங்கிலப் பாடல் ஒன்றை ஒரு பெண் பாட, அதே தாளகதியில் ‘செந்தமிழ் தேன் மொழியாள்’ பாடலைக் கேட்டது புதிய அனுபவம். சில பாடலின் வரிகளை இசைக்கேற்ப ரசிகர்களே சேர்ந்திசையாகப் பாடியும் அசத்தினர். நிகழ்ச்சிகளை வெறுமனே நடத்திவிட்டுச் செல்லாமல், ரசிகர்களையும் பாடகர்களாக்கி மகிழ்ந்தார் கார்த்திக்.