Published : 15 Oct 2019 02:45 PM
Last Updated : 15 Oct 2019 02:45 PM

அறிவியல் அங்கீகாரம்- நோபல்: காலத்துக்கேற்ப மாறுமா?

சு. அருண் பிரசாத்

21-ம் நூற்றாண்டின் அறிவியலும் தொழில்நுட்பமும் திகைக்கச் செய்யும் வேகத்தில் நொடிக்கு நொடி வளர்ந்துகொண்டிருக்கின்றன. மனித குலம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் களைய உலகைப் புரட்டிப் போடும், மனித வாழ்க்கையை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும் கண்டுபிடிப்புகள், கோட்பாடுகள் ஆகியவற்றை உருவாக்கும் தீவிர ஆராய்ச்சிகளில் அறிவியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு, தனித்துவமான கண்டுபிடிப்புகளைத் தரும் அறிவியலாளர்களை அங்கீகரிக்கும் விருதுகளில் முதன்மையானது நோபல். மனித குல மேன்மைக்குப் பங்களிக்கும் அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரைக் கௌரவப்படுத்தும் நோக்கில் ஸ்வீடனைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல், 1895-ல் நிறுவிய இந்த விருது, 1901 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

அறிவியல் நோபல்

மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று துறைகளுக்கு அறிவியல் நோபல் விருதுகள் வழங்கப்படுகின்றன. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிவியல் ஆராய்ச்சிகள் பெரும்பாலும் தனிநபர்களால் மேற்கொள்ளப்பட்டன. இயற்பியலுக்கான நோபலில் முதல் முப்பது விருதுகளில் இருபது தனிநபர் ‘கண்டுபிடிப்பு’களுக்கானவை. தனிநபர் ஆராய்ச்சியாக இருந்த அறிவியலின் பெரும்பாலான துறைகள் மெல்ல மெல்லக் கூட்டு ஆராய்ச்சியாக மாறத் தொடங்கின; 1960-களின் தொடக்கத்தில் ‘பெரும் அறிவியல்’ என்ற பதம் பரவலாகத் தொடங்கியது. ஒரு துறையின் குறிப்பிட்ட பிரிவில் 100 ஆராய்ச்சியாளர்களில் இருந்து, ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுவதற்கே 10 ஆசிரியர்கள் தேவைப்படுவதுவரை எண்ணிக்கை உயரத் தொடங்கியது.

இந்த நிலையில்தான் அறிவியலுக்கான நோபல் விருதின் பிரதிநிதித்துவம் குறித்த சர்ச்சை தீவிரமடையத் தொடங்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் அறிவியலும் தொழில்நுட்பமும் அசுர வளர்ச்சியை எட்டியது. கம்ப்யூட்டிங், ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு எனப் பல புதிய துறைகள் தோன்றின. இதுபோன்ற புதிய துறைகளையும் விடுபட்டிருக்கும் கணிதத் துறையையும் நோபல் குழு பரிசீலிக்க வேண்டும் என்ற குரல்கள் பரவலாக எழத் தொடங்கின.

அத்துடன் 21-ம் நூற்றாண்டின் அறிவியல் என்பது தனிநபர் சார்ந்த ஒன்றாக அல்லாமல், கூட்டு ஆராய்ச்சியின் மூலமே புதிய உச்சங்களைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. எனவே, தனிநபருக்கான விருதுகளை விடுத்து ஆராய்ச்சியில் பங்களித்த அத்தனை அறிவியலாளர்களையும் அங்கீகரிக்கும்விதமாக ஆராய்ச்சிக் குழுவினருக்கோ நிறுவனத்துக்கோ விருது வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து சமீபகாலமாக வலுவாக முன்வைக்கப்பட்டுவருகிறது.

அதேபோல் பரிந்துரைப் பட்டியலில் இருப்பவர்கள் பெயரை ரகசியமாக வைத்திருக்காமல், அதை வெளியிடும்போது அவர்கள் சார்ந்திருக்கும் துறை கூடுதல் முக்கியத்துவம் பெறும்; இளம் அறிவியலாளர்களுக்கு அந்தத் துறைகள் சார்ந்து ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்வதற்கு வழிவகுக்கும் என்றும் நம்பப்படுகிறது.

நான்கு காரணங்கள்

அறிவியல் நோபல் விருதின் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் ‘Losing the Nobel Prize: A Story of Cosmology, Ambition, and the Perils of Science's Highest Honour’ என்ற புத்தகத்தில் கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் பிரையன் கீட்டிங் விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார். தனிநபர்களுக்கு விருது வழங்குவதில் உள்ள நான்கு முக்கியப் பிரச்சினைகளாக அவர் பட்டியலிட்டிருப்பவை:

ஒன்று: ‘ஹிக்ஸ் போஸன்’ என்று பிற்பாடு பெயரிடப்பட்ட துகள் பற்றிய கோட்பாட்டு ஆய்வுக்காக பீட்டர் ஹிக்ஸ், ஃபிரான்சுவா எங்லெ ஆகியோருக்கு 2013-க்கான இயற்பியல் நோபல் விருது வழங்கப்பட்டது. அதிகபட்சம் மூன்று பேருக்கு வழங்கலாம் என்று விதி அனுமதித்தாலும், இரண்டு பேருக்கு மட்டுமே விருது வழங்கப்பட்டது. ஆனால், பல்வேறு குழுக்களைச் சேர்ந்த 6 வேறு இயற்பியலாளர்கள் இதே கோட்பாட்டில் ஆராய்ச்சி மேற்கொண்டு கிட்டத்தட்ட ஒரே முடிவுகளை தனித்தனியாக வெளியிட்டிருந்தார்கள். ஆனால், எல்லோரும் பிரதிநிதித்துவப் படுத்தப்படவில்லை.

இரண்டு: புவியீர்ப்பு அலைகள், ஜெனீவாவில் உள்ள லார்ஜ் ஹாட்ரன் கொலைடரில் (LHC) நிகழும் துணை அணுத்துகள் ஆராய்ச்சி உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த நவீன அறிவியல் ஆய்வுகளில் பெரும் எண்ணிக்கையிலான அறிவியலாளர்கள் ஈடுபடுகின்றனர். ஆனால், புவியீர்ப்பு அலைகள் பற்றிய ஆராய்ச்சிக்காக 2017 இயற்பியல் நோபல் மூன்று பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அந்த ஆராய்ச்சித் திட்டத்தில் பணியாற்றிய மற்ற ஆய்வாளர்களின் பணியை இது அங்கீகரிக்கத் தவறியிருக்கிறது. இந்தக் கோட்பாட்டை உருவாக்கிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்குத்தான் உண்மையில் இந்த விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

மூன்று: ஒரு கண்டுபிடிப்புக்கு ஒருமுறைக்கு மேல் விருது வழங்குவதில்லை என்கிறது ஒரு விதி. உதாரணத்துக்கு ஹிக்ஸ் - எங்லெவுக்கு விருது வழங்கியதன் மூலம் எதிர்காலத்தில் கோட்பாட்டு ரீதியிலும், பரிசோதனையிலும் அதே துறையில் கண்டுபிடிப்பு நிகழ்த்தும் ஒருவருக்கு விருது வழங்கப்படாது.

நான்கு: ஒரு நபருக்கு ஒருமுறை மட்டுமே நோபல் விருது வழங்க முடியும் என்பது நோபல் விருதின் அடிப்படை விதிகளுள் ஒன்று (ஒன்றிரண்டு விதிவிலக்குகள் உண்டு). தகுதியின் அடிப்படையில், பங்களிப்பின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் தர வேண்டுமென்றால் ஐன்ஸ்டீனுக்கு ஏழு நோபல் விருதுகள் தரப்பட்டிருக்க வேண்டும். இது மற்ற இயற்பியலாளர்களிடையே சச்சரவை உருவாக்குவதற்கு வழிவகுக்கும்.

எனவே, உலகின் உயரிய அறிவியல் விருதான நோபல் கால மாற்றத்துக்கு ஏற்பத் தகவமைத்துக்கொண்டால் மட்டுமே, இதுவரை அது பெற்று வந்திருக்கும் மதிப்பை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

புறக்கணிக்கப்பட்ட பெண்கள்

நோபல் விருதுப் பட்டியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிக மோசமான நிலையில் உள்ளது. 1901 முதல் 2018 வரை விருது வழங்கப்பட்ட 935 பேரில் பெண்கள் வெறும் 51 பேர் மட்டுமே. இவர்களில் அமைதிக்கு 17; இலக்கியத்துக்கு 15; மருத்துவத்துக்கு 12; வேதியியலுக்கு 5; இயற்பியலுக்கு 3, பொருளாதாரத்துக்கு 1 என்கிற வகையில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அறிவியல் நோபல் விருதுகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக இருப்பதற்கான முக்கியக் காரணங்களுள் ஒன்று அறிவியல் படிப்புகளில், உயர் கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது. அது மட்டுமல்லாமல், ரோஸலின் ஃபிராங்ளின், லிசே மெய்ட்னெர் போன்ற தகுதிவாய்ந்த பெண் அறிவியலாளர்களுக்குக் கடைசிவரை விருது வழங்கப்படாதது; இயற்பியலில் 1963-க்குப் பிறகு 55 ஆண்டுகள் கழித்து 2018-ல் ஒரு பெண்ணுக்கு நோபல் விருது வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு கறைகள் நோபல் குழுவின் மீது உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x