Published : 15 Oct 2019 01:50 PM
Last Updated : 15 Oct 2019 01:50 PM

இணைய சினிமா சாம்ராஜ்யத்தின் கதை!

சைபர் சிம்மன்

இணையத்தில் நேரடியாகத் திரைப்படம் பார்க்க வழிசெய்யும் ‘ஸ்டிரீமிங்’ தொழில்நுட்பத்தின் முன்னோடி ‘நெட்பிளிக்ஸ்’ நிறுவனம், இன்று அசைக்க முடியாத இடத்தை அடைந்துவிட்டது. திரைப்படங்களின் டி.வி.டி.-க்களை இணையத்தின் மூலம் வாடகைக்கு வழங்கும் நிறுவனமாக 1997-ல் தொடங்கப்பட்ட நெட்பிளிக்ஸின் பயணமும் திரைக்கதை போன்றது!

தபாலில் வந்த டி.வி.டி.

அமெரிக்காவில் வீடியோ கேசட்டுகள் பிரபலமாக இருந்த 1990-களில், அதை வாடகைக்கு அளிக்கும் சேவையில் பல நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தன; ‘பிளாக்பஸ்டர்’ என்ற நிறுவனம் இதில் முன்னணியில் இருந்தது. நெட்பிளிக்ஸ் நிறுவனர் ரீட் ஹாஸ்டிங், பிளாக்பஸ்டரிடம் இருந்து ‘அப்போலோ 13’என்ற திரைப்படத்தின் டி.வி.டி.-ஐ வாடகைக்கு எடுத்திருந்தார். ஆனால், உரிய நேரத்தில் அதைத் திருப்பித் தர மறந்துவிட்டார். எனவே, 40 டாலர் அபராதக் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருந்தது.

ஞாபக மறதியால் 40 டாலர் வீண் செலவா என மனைவியிடம் திட்டு வாங்க வேண்டியிருக்குமோ என்று பயந்த ரீட், வீடியோ கேசெட் கட்டணம் பற்றியும் யோசித்தார். இதன் பின்னணியில் மிகப் பெரிய சந்தை இருப்பதைப் புரிந்துகொண்டார்; தபால் வழியே வீடியோ கேசெட்டை வாடகைக்கு வழங்கும் சாத்தியம் பற்றிக் கணக்குப் போட்டுப்பார்த்தார். அப்போது டி.வி.டி.-க்களைப் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை. ரீடின் நண்பர் ஒருவர்தான், டி.வி.டி.-க்கள் பிரபலமாகி வருகின்றன என்று தெரியப்படுத்தினார். உடனடியாக, கலிபோர்னியாவில் உள்ள டி.வி.டி. கடைக்குச் சென்ற ரீட், திரைப்படத்தின் டி.வி.டி. ஒன்றை வாங்கி, அதை உறையிட்டு தன்னுடைய முகவரிக்கு தபாலில் அனுப்பி வைத்தார்.

தபாலில் மறுநாள் வீட்டுக்கு வந்த உறையை ஆர்வத்துடன் பிரித்துப்பார்த்தவர், டி.வி.டி. எந்தச் சேதமும் இன்றி வந்திருப்பதைக் கண்டு உற்சாகமடைந்தார். உடனடியாகக் களத்தில் இறங்கி, தபாலில் திரைப்பட டி.வி.டி.-க்களை அனுப்பும் சேவையைத் தொடங்கினார். வாடிக்கையாளர்கள், இணையத்தில் டி.வி.டி.-ஐத் தேர்வுசெய்து, தபாலில் பெற்றுக்கொள்ளும் ஏற்பாட்டை உருவாக்கினார். நெட்பிளிக்ஸ் தொடங்கியது இப்படித்தான்!

தொலைநோக்குத் திட்டம்

டி.வி.டி.-க்களின் வருகையால் வீடியோ கேசெட் வழக்கொழிந்த நிலை, சிறிது காலத்தில் டி.வி.டி.-களுக்கும் காத்திருந்தது. இந்த மாற்றத்தை உணராமல் போயிருந்தால், 1990-களில் பெற்ற வெற்றிக்குப்பின் காணாமல் போன இணைய நிறுவனங்களின் பட்டியலில் நெட்பிளிக்ஸும் சேர்ந்திருக்கும்.

ஆனால், நெட்பிளிக்ஸ் நிறுவனர் ரீடுக்கு இணையத்தின் ஆற்றல் மீது மிகுந்த நம்பிக்கையிருந்தது. ‘டயல் அப்’ வேகத்தில் சுணங்கிக்கொண்டிருந்த இணையம், ‘பிராட்பேண்ட்’ பாய்ச்சலுக்கு மாறியிருந்தது. எனவே, வருங்காலத்தில் டி.வி.டி. போன்றவை தேவையில்லாமல், இணையத்திலேயே படங்களைப் பார்ப்பது சாத்தியமாகும் என எதிர்பார்த்தார். நெட்பிளிக்ஸ் டி.வி.டி. வாடகை வர்த்தகம் வளர்ச்சி கண்டு வருவாயைக் கொட்டிக்கொண்டிருந்தாலும், ஸ்டிரீமிங் சேவையைப் பற்றி அவர் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார்.

இடையே, வாடகை டி.வி.டி. ஜாம்பவான், பிளாக்பஸ்டர் நிறுவனத்திடம் இது பற்றிப் பேச்சு நடத்தினார். அந்தப் பேச்சு தோல்வியடைந்த நிலையில், அடுத்த சில ஆண்டுகளில், நெட்பிளிஸ் ஸ்டிரீமிங் சேவையைத் தொடங்கினார். 2007-ல் நெட்பிளிக்ஸ் ஸ்டிரீமிங் அறிமுகமானபோது, இணையமும் வாடிக்கையாளார்களும் அதற்குத் தயாராக இருந்தனர். விளைவு ஸ்டிரீமிங் சேவை சூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து, நேயர்கள் என்ன மாதிரியான படங்களைப் பார்க்கின்றனர் எனக் கவனித்து அவர்கள் ரசனைக்கேற்ற பரிந்துரையை அளிப்பது உள்ளிட்ட புதுமைகளையும் நெட்பிளிக்ஸ் கொண்டு வந்தது.

(வலை வீசுவோம்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: enarasimhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x