

வி. டில்லிபாபு
பெங்களூருவில் மரங்கள் அடர்ந்த இந்திய அறிவியல் நிறுவன வளாகத்தில் ஒரு மதிய நேரம். உலோகப் பொறியியல் துறையில் புத்தகங்களும் ஆய்வுக் கட்டுரைகளும் சூழ்ந்திருக்க வரவேற்கிறார் மிர்லே கிருஷ்ண சுரப்பா. சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரான சுரப்பா, மாதம் ஒருமுறை தனது தாய் நிறுவனத்துக்கு வந்து ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுகிறார். அவருடனான உரையாடல் பொறியியல் கல்வியின் எதிர்காலம், மாணவர்களின் திறன் மேம்பாடு, தத்துவவியல் பாடம் எனப் பலவற்றை பற்றியும் விரிவாக அமைந்தது.
உங்களுடைய தோல்விகள்கூட முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. ஐ.ஐ.டி–மும்பையின் இயக்குநர் பதவிக்கு உங்கள் பெயர் பரிசீலனையில் இருந்தது. ஆனால், உங்களுக்கு அந்தப் பதவி கிடைக்கவில்லேயே?
ஐ.ஐ.டி-மும்பையின் இயக்குநர் பதவிக்கு என் பெயர் பரிசீலிக்கப்பட்டது உண்மை. நேர்காணலிலும் பங்கேற்றேன். ஆனால், தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஒரு ஆச்சரியம் எனக்குக் காத்திருந்தது. பின்னர் ஆறு புதிய ஐ.ஐ.டி நிறுவனங்கள் தொடங்கப்பட்டபோது, ஐ.ஐ.டி-ரோப்பரின் இயக்குநராக என்னை நியமித்தார்கள். ஐ.ஐ.டி மும்பையில் நடந்த நேர்காணலின் அடிப்படையிலேயே எனக்கு அந்த பதவி கிடைத்தது. தனியாக விண்ணப்பமோ நேர்காணலோ நடக்கவில்லை!
விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு நேர்காணல்வரை சென்ற உங்களுக்கு, அந்தப் பதவி கிடைக்கவில்லை. ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி கிடைத்தது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
எனக்கு கிடைத்த எந்த பதவிக்கும் நான் விண்ணப்பிக்கவில்லை. பதவிகள் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவுமில்லை. என்னுடைய பெயர் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகே எனக்குத் தகவல் கிடைத்து விவரங்களை அனுப்பினேன். அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக தேர்வு செய்யப்பட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு சவால்கள் மிகவும் பிடிக்கும். மிகப் பெரிய தொழில் நுட்பப் பல்கலைக்கழமான அண்ணா பல்கலைக்கழகத்துக்கு என்னுடைய பங்களிப்பால் சிறப்பு சேர்ப்பேன்.
அண்ணா பல்கலைக்கழகம் குறித்த உங்கள் கனவுகள், திட்டங்கள்?
அண்ணா பல்கலைக்கழகத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்திருக்கிறேன். உலகத்தின் சிறந்த பல்கலைக் கழகங்களின் சிறந்த கல்வி நடைமுறைகளை அண்ணா பல்கலைக்கழகத்தில் புகுத்த இருக்கிறேன். முக்கியமாகத் தகுதிக்கும் திறமைக்கும் மதிப்புண்டு என்ற நம்பிக்கையை விதைக்க விரும்புகிறேன்.
தமிழகக் கல்லூரிகளில் லட்சக்கணக்கான பொறியியல் இடங்கள் நிரப்பப்படுவதில்லை. கடந்த சில ஆண்டுகளாகத் தொடரும் இந்த சூழ்நிலைக்கு என்ன காரணம்? எப்படிப் பொறியியல் கல்வியை மீட்டெடுப்பது?
உலக அளவில் பொறியியல் கல்வி ஒரு மாற்றத்தை சந்தித்திருக்கிறது. பொறியியலின் ஒரு பிரிவை மட்டும் போதிக்கும் கல்வி முறை மாறிவருகிறது. இயந்திரப் பொறியியல் மாணவர்கள் கணினித் தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றைப் படித்தறிய வேண்டும். இப்படி எல்லைகளற்ற பொறியியல் படிப்பை நோக்கி உலகம் பயணிக்கும்போது, இந்தியாவில் அந்த கருத்தியல் மாற்றம் இன்னும் வரவில்லை. இரண்டாவது எல்லா பொறியியல் பிரிவுகளிலும், ‘வடிவமைப்புத் தத்துவங்கள்’ முக்கியத்துவம் பெற்று வருகின்றன். வடிவமைப்புச் சிந்தனை என்ற பாடம் உலக அளவில் முன்னெடுக்கப்படுகிறது.
அத்துடன் வேலைவாய்ப்புகளும் குறைந்திருக்கின்றன. சேவைத் துறையைப் போல உற்பத்தித் துறையிலும் ஆராய்ச்சித் துறையிலும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. அறிவியல் பட்டதாரிகள் பொறியியல் பட்டதாரிகளுக்கான மென்பொருள் வேலைகளில் போட்டியிடுவதும் அதிகரித்திருக்கிறது.
தரமான பேராசிரியர்களையும் கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் பாதிப்பில்லை. கட்டமைப்பு வசதிகளும் தரமான பேராசிரியர்களும் இல்லாத கல்லூரிகள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளதால் நிரப்பப்படாத இடங்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இந்தச் செய்தி பொதுவெளியில் பரவுவதால் பொறியியல் கல்வி குறித்த அவநம்பிக்கையாக இது வெளிப்படுகிறது. அடிப்படைக் காரணங்களுக்கான தீர்வுகளை மேற்கொண்டால், இந்தச் சூழ்நிலையிலிருந்து விடுபடலாம்.
பொறியியல் பாடத்திட்டம் சார்ந்த கருத்தியல் மாற்றம், கல்லூரிகளின் கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை ஒருபுறமிருக்க, மாணவர்களை எதிர்காலத்துக்கும் தொழில்துறை வேலைகளுக்கும் ஏற்றவர்களாக எப்படி மாற்றுவது?
புதுமைதான் எதிர்காலத்தை ஆளப்போகிறது. மாணவர்கள் புதுமைகளைச் செய்ய வேண்டும். அதற்கு நாம் அவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். புதுமை ஆய்வகங்களை (Innovation Labs) அமைத்து மாணவர்கள் தங்கள் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்கும் சோதனை முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும். 24 மணிநேரமும் இந்த ஆய்வகங்கள் இயங்க வேண்டும். இதில் வெற்றியடையும் யோசனைகள் புதிய தொழில்நிறுவனங்களாகப் பரிணமிக்க வேண்டும். புதுமைகள் செல்வத்தையும் வேலைவாய்ப்பையும் கொண்டுவரும்.
புதுமையான யோசனைகள் ஆராய்ச்சிக் கட்டுரைகளோடு நின்றுவிடாமல் புதிய தொழில் நிறுவனங்களாகவும் தொழில்முனைவுகளாகவும் வளர வேண்டும். இந்த ஸ்டார்ட்-அப் கலாச்சாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் ஊக்குவிக்க ‘அடல் புதுமை’ மையங்களை அமைத்திருக்கிறது.
கலை-அறிவியல் படிப்புகள் பொறியியல் படிப்புக்குப் போட்டியாக இருப்பதாக பொதுப் புத்தியில் ஒரு பிம்பம் கட்டமைவதைப் பற்றி?
எதுவும், எதற்கும் போட்டியில்லை. இரண்டு துறைகளும் இயைந்து செல்ல வேண்டும். கல்லூரி மாணவர்களிடம் சாதிக்கும் ஆசை இருக்கிறது. வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறது. பொருட்களின் மீது பற்று பெருகியிருக்கிறது. இந்தச் சூழலில் வாழ்வியல் மதிப்பீடுகள், வாழ்க்கையின் நோக்கம் ஆகியவற்றைப் பற்றிய புரிதல் மாணவர்களுக்கு தேவை. எனவே, தத்துவவியல் தேவை. படிப்பது வேலைவாய்புக்கே என மாணவர்கள் மனதில் ஆழப் பதிந்திருக்கிறது.
அறிவியலும் தொழில்நுட்பமும் மக்களின் துயர் துடைக்கப் பயன்பட வேண்டும் என்ற கருத்தியலை நாம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விதைப்பதில்லையே? இதற்காகத்தான் தற்போது பொறியியல் பாடத்தில் தாராளக்கலை, மானுடவியல் படிப்புகள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் சமுதாயத்துக்கு திருப்பியளிக்கும் மனநிலையை மாணவர்கள் பெற்று சேவை செய்வார்கள் என நம்புவோம்.
கட்டுரையாளர்,
டாக்டர் வி.டில்லிபாபு டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானி மற்றும் இயக்குநர், தேசிய வடிவமைப்பு-ஆராய்ச்சி மன்றம் (என்.டி.ஆர்.எப்)
தொடர்புக்கு: dillibabudrdo@gmail.co