வானவில் வாழ்க்கை

வானவில் வாழ்க்கை
Updated on
2 min read

தன்பால் ஈர்ப்பு கொண்ட தன் மகனுக்குப் பொருத்தமான மணமகன் தேவை என அவருடைய தாய், பத்திரிகை ஒன்றில் விளம்பரம் கொடுக்கிறார். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலர் அந்தத் தாயின் அன்பைப் பாராட்டுகிறார்கள். ‘என்னுடைய கடமையைத்தான் செய்தேன்’ என்கிறார் அந்தத் தாய்.

இது எந்த நாட்டில் என்று கேட்கிறீர்களா? வேறெங்கும் இல்லை, நம் நாட்டில்தான். இந்தியாவின் முகம் மாறிவிட்டதா, கலாசாரம் என்னாவது என்றெல்லாம் யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். இவர்களையும் உள்ளடக்கியதுதான் நம்முடைய கலாசாரம். ஆண், பெண், தன்பால் ஈர்ப்புள்ள ஆண், பெண், இருபால் ஈர்ப்புள்ளவர்கள், திருநங்கைகள், திருநம்பிகள் இவர்கள் எல்லாருமே இந்தியாவின் முகங்கள்தான். இவர்கள் எல்லாருக்குமே வாழ்வதற்கான அடிப்படை உரிமைகளை உறுதி செய்கிறது சட்டம்.

பாலியல் சிறுபான்மையினரான இவர்களை, பிறந்த குடும்பமே ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதாலேயே, இவர்கள் ஒன்றுகூடி ஒரு சமூகமாக உருவாகிறார்கள்.

வெளிப்படுவதால் ஏற்படும் வெளியேற்றங்கள்

பாலியல் சிறுபான்மையினர் முதலில் அவர்களுக்குள் இருக்கும் நிஜமான உணர்வுகளின் அடிப்படையில் திருநங்கையாக, நம்பியாக வெளிப்படுகிறார்கள். இந்த வெளிப்படுவது (coming out) நிகழ்ந்த உடனேயே, வீட்டில் எரிமலை வெடிக்கிறது. மனங்களில் பூகம்ப விரிசல் ஏற்படுகிறது.

“தலைமுறைய வளர்க்கவந்த குலக்கொழுந்துன்னு உன்னைய நெனச்சனேடா… இப்படி கோடாலிக்காம்பா இருப்பேன்னு நெனக்கலையே… எங்கண்ணு முன்னால நிக்காதே… போயிடு… கொன்னுடுவேன்…”

- இப்படிப்பட்ட சுடுசொற்கள், இன்னமும் ஒருபடி மேலே போய், தன்னுடைய உணர்வை வெளிப்படுத்தியவருக்கு மருத்துவப் பரிசோதனை, உளவியல் சிகிச்சை, மின் அதிர்வைக் கொடுப்பது, ‘கல்யாணம் செஞ்சுவைச்சா எல்லாம் சரியாயிடும்’ என்ற இறுதி முடிவை எடுத்து இன்னொரு பெண்ணின், ஆணின் வாழ்க்கையோடு விளையாடத் துணிவது… இப்படிப்பட்ட கொடூரங்கள் நடப்பதும் உண்டு. இதனால் தங்களின் வீடுகளிலிருந்து பாலியல் சிறுபான்மையினர் வெளியேறுகிறார்கள்.

ஊடகங்களில், பணிபுரியும் இடங்களில் பாலியல் சிறுபான்மையினரின் நிலை எப்படி இருக்கிறது, அவர்களுடன் உறவுப் பாலத்தை எப்படி அமைப்பது என்பதை மையப்படுத்தி, பாலியல் சிறுபான்மையினரின் உரிமைக்காகப் போராடிவரும் ‘சென்னை தோஸ்த்’ அமைப்பு ‘சென்னை ரெயின்போ ஃபிலிம் ஃபெஸ்டிவலை’ சமீபத்தில் ‘மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் ஒர்க்’ மையத்தில் நடத்தியது.

7:7

சமூகத்தின் பல்வேறு தளங்களில் இருப்பவர்களைக் கொண்டு ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் சென்னை தோஸ்த் அமைப்பின் நிறுவனர் விக்ராந்திடம், பாலியல் சிறுபான்மையினரில் தங்களின் உணர்வுகளை அடையாளம் கண்டுகொண்டு நிஜ அடையாளத்தோடு வெளிப்படுவது ஆண்களுக்கு எளிதாக இருக்கிறதா, பெண்களுக்கு எளிதாக இருக்கிறதா என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அவர், “ஆண், பெண் இருவருக்குமே தங்களின் பால் விருப்பத்தை உணர்ந்து வெளியேறுவது எளிதாக இருப்பதில்லை. ஒப்பீட்டளவில் பார்த்தால், ஆண்களைவிடப் பெண்கள் வெளியேறுவது மிகவும் குறைவு. எங்களின் அமைப்பிலேயே 7 ஆயிரம் ஆண்கள் இருக்கிறார்கள். அதில் பெண்கள் 7 பேர்தான்” என்றார்.

ரியல் மதர், ரீல் மதர்

பாலினச் சிறுபான்மை யினருக்காகப் போராடிவரும் ஹம்ஸவர் அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் அசோக் ரோ கவி, கவிஞர் மனுஷ்ய புத்திரன், முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றுபவரும் பத்தி எழுத்தாளருமான கிரிஷ் அசோக், திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகையுமான தீபா ராமானுஜம், வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், தன்பால் ஈர்ப்புள்ள ஆண்களின் நலனுக்காகப் போராடும் விக்ராந்த் பிரசன்னா ஆகியோர் பங்கேற்ற இந்தக் கருத்தரங்கில், எல்லோரையும் ஈர்த்தது இரண்டு அன்னைகள்.

ஒருவர், தன்பால் ஈர்ப்புள்ள தன் மகனை ஏற்றுக்கொண்டு அவரின் உணர்வுக்கு மதிப்பு அளித்திருக்கும் வித்யா. இன்னொருவர், ‘மை சன் இஸ் கே’ (My Son is Gay) திரைப்படத்தில் தன்பால் ஈர்ப்புள்ள மகனுக்கு அன்பான தாயாக நடித்திருக்கும் நடிகை அனுபமா.

அனுபமா பேசும்போது, “பாலியல் சிறுபான்மையைச் சேராத நீ, ஏன் அந்தக் கருத்தரங்கத்துக்குப் போக வேண்டும் என்று சிலர் கேட்டார்கள். நான் அங்கு செல்ல வேண்டியது என்னுடைய சமூகக் கடமை என்று அவர்களுக்குக் கூறிவிட்டு இங்கே வந்திருக்கிறேன்” என்றார். அந்தக் கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in